The Family Man 2: தமிழர்களை கொச்சைப்படுத்துகிறதா தி பேமிலி மேன் சீஸன் 2?

தி ஃபேமிலி மேன் 2

தமிழகத்தின் தூய்மையான இடங்களோ, கட்டிடங்களோ ஒரு இடத்திலும் இல்லை. அழுக்கான தெருக்கள், நெருக்கமான குடியிருப்புகள், தண்ணிக்காக குடத்துடன் அலையும் மக்கள், சுகாதாரமற்ற உணவகங்கள் இவையே மறுபடி மறுபடி வருகின்றன.

  • Share this:
தி பேமிலி மேன் சீஸன் 2 ஜுன் 3-ம் தேதி வெளியானது. இதன் ட்ரெய்லரில் தமிழ்ப் போராளிகள் குறித்த சித்தரிப்புகள் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், முழுத்தொடரில் தமிழர்கள், தமிழ்ப் போராளிகள் எப்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்?

முதலில் கதை. இலங்கையில் தனிஈழம் கேட்டு நடந்த ஆயுதப் போராட்ட பின்னணியில் தி பேமிலி மேன் சீஸன் 2 கதை எழுதப்பட்டுள்ளது. அதாவது இந்த சீரிஸின் பின்புலம் உண்மையானது. அதை வைத்து எழுதப்பட்ட கதை எப்படிப்பட்டது?

ஈழப்போராளிகள் இலங்கை ராணுவ தாக்குதலில் அழிக்கப்பட, அவர்களின் தலைவர் பாஸ்கரன், அவரது தம்பியும் போராளிக்குழுவின் முக்கிய தளபதியுமான சுப்பு, அரசியல் பிரிவு தலைவர் தீபன் மூவரும் கடல்வழியாக தப்பிக்கின்றனர். சுப்பு தமிழகம் செல்ல, பாஸ்கரனும், தீபனும் இங்கிலாந்தில் தஞ்சமடைகின்றனர். இந்நிலையில், இலங்கையில் துறைமுகம் அமைக்க முயலும் சீனாவுடன் நெருக்கம் காட்டுகிறது இலங்கை அரசு. இதனை விரும்பாத இந்திய பிரதமர் மிகக்குறைந்த வட்டிக்கு பெரும் தொகையை கடனாக வழங்குவதாக இலங்கையுடன் பேரம் பேசுகிறார். ஆனால், இலங்கை அதிபருக்கு தேவை, போராளி தளபதியான சுப்பு. அதற்கு இந்திய சட்டத்தில் இடமில்லை என்ற பிரதாமரின் பேச்சை இலங்கை கேட்பதாக இல்லை. இறுதியில், சீனாவுடனான அரசியல் போட்டிக்கு சுப்புவை கைமாற்றாக தர இந்திய பிரதமர் ஒப்புக் கொள்கிறார். சுப்புவை போலீஸ் கைது செய்கிறது. அவரை இலங்கையிடம் ஒப்படைக்கும் முன்பு, முதல் சீஸனில் வந்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ தீவிரவாதி சமீர், தனது ஆள்கள் மூலம் சுப்புவை குண்டு வைத்து கொலை செய்கிறார். தம்பியின் கொலைக்கு இந்தியா காரணம் என நினைக்கிறார் பாஸ்கரன். சமீரின் திட்டமும் அதுவே. சமீருடன் இணைந்து பாஸ்கரன் இந்திய பிரதமரை கொலை செய்ய திட்டமிடுகிறார். அந்த திட்டம் என்ன, அதை யார் செயல்படுத்துகிறார்கள், அதை நாயகன் ஸ்ரீகாந்த் திவாரி எப்படி முறியடிக்கிறார் என்பது கதை.

ஈழப்போராட்டம் என்ற சரித்திர உண்மையின் பின்னணியில் இந்தக் கதை எழுதப்பட்டிருப்பதாகச் சொன்னோம். அந்த கதையின் நம்பகத்தன்மை எத்தகையது? வரிசையாக பார்ப்போம்.

1. ஈழப்போராட்டத்தின் தலைவராக காட்டப்படும் பாஸ்கரன் போரில் தோற்று, வெளிநாடுக்கு தப்பியோடி அங்கு பதுங்கிக் கொள்கிறார். மது அருந்துகிறார், மீன் சமைக்கிறார். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ தீவிரவாதியுடன் இணைந்து செயல்படுகிறார். கடைசியில், பிரான்சில் ஒளிந்திருக்கும் அவரை போலிஸ் கைது செய்ய, சயனைடு தின்று சாகிறார்.

2. பாஸ்கரனின் திட்டத்தை செயல்படுத்தும் பிரதான போராளியாக வரும் செல்வம், சென்னையில் தனது அடையாளத்தை மறைத்து தலைமறைவாக இருக்கிறார். பாஸ்கரனே நேரடியாக போனில் பேசக்கூடிய அவர் பரட்டை தலையும், தாடியுமாக மொடாக்குடிகாரராக இருக்கிறார். அவர்களுக்கு உதவி செய்யும், போராளிகளின் கூட்டாளியாக வரும் ஜெபராஜ் செல்வத்தைவிட பெருங்குடிகாரர். இலங்கையில் எதிரியின் மத்தியில் இருக்கும் போதும் கண்மண் தெரியாமல் குடித்து சமய சந்தர்ப்பம் தெரியாமல் உளறி, அடிவாங்கி சாகிறார்.

3. ஈழப்போராளிகளின் நண்பராக காட்டப்படும் செல்லம் போராளிகள் குறித்தும், அவர்கள் திட்டம் குறித்தும் போலீசுக்கு தகவல்கள் தருகிறார். அதேபோல், போராளிகளின் அரசியல் பிரிவு தலைவராக காட்டப்படும் தீபன் தான் பாஸ்கரன் இருக்கும் இடத்தை இந்திய அரசுக்காக போலீசுக்கு காட்டிக் கொடுக்கிறார்.

கதை நெடுக போராளிகள் குடிகாரர்களாக, காட்டிக் கொடுப்பவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தலைவர் கிட்டத்தட்ட ஒரு பேடியாக காட்டப்படுகிறார். பாலஸ்தீன விடுதலை இயக்கமும், யாசர் அரபாத்தும் உதவ முன்வந்த போதுகூட அதனை மறுத்தவர்கள் ஈழப்போராளிகள். வரலாறு அப்படியிருக்க, போராளிகள் தலைவர் வெளிநாடு தப்பிச் சென்றார், தீவிரவாதிகளுடன் கூட்டணி வைத்தார் என்பது மிக மோசமான வரலாற்றுக்கு புறம்பான சித்தரிப்புகள். பாஸ்கரன் தனது தம்பியின் இழப்புக்காக இந்திய பிரதமரை கொலை செய்ய துணிவதாக காட்டியிருப்பது, மன்னிக்க முடியாத தவறு. குடும்பம் பலியாகும் என்று தெரிந்தே போராட்டத்தில் இறங்கிய ஒரு தலைவனை இதற்கு மேல் கொச்சைப்படுத்த முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாயக தமிழர்களையும் தவறாகவே காட்டியிருக்கிறார்கள். சென்னையில் மறைந்திருக்கும் சுப்புவை ஒரு தமிழ் எம்எல்ஏ காட்டிக் கொடுக்கிறார். படத்தில் வரும் தமிழர்கள் அனைவரும் குடிகாரர்களாக, காமாந்திரர்களாக இருக்கிறார்கள். பெண் போராளி ராஜி வேலை செய்யுமிடத்தில் அவளது மேலாளர் அவளிடம் அத்துமீற நினைக்கிறான். பேருந்தில் ஒருவன் தகாத இடத்தில் கையை மேயவிடுகிறான். செக்போஸ்டில் இருக்கும் அதிகாரிக்கு பணத்தைவிட அவளது உடல் மீதே நாட்டம் செல்கிறது. இவையெல்லாம் தமிழகத்தில் நடக்கவில்லையா என்று கேட்டால், ஆம், நடக்கிறது தான். ஆனால், இவை மட்டும் அல்லவே தமிழகம். ஆனால், தி பேமிலி மேனில் இவை மட்டுமே பிரதானமாக காட்டப்படுகின்றன. அதிலும், செக்போஸ்டில் நிற்கும் அதிகாரி, ராஜியின் மேல் ஆசைப்பட்டு, அங்கேயே அவளை அடைவதெல்லாம் மிகைக்கற்பனை.

தமிழகத்தின் தூய்மையான இடங்களோ, கட்டிடங்களோ ஒரு இடத்திலும் இல்லை. அழுக்கான தெருக்கள், நெருக்கமான குடியிருப்புகள், தண்ணிக்காக குடத்துடன் அலையும் மக்கள், சுகாதாரமற்ற உணவகங்கள் இவையே மறுபடி மறுபடி வருகின்றன. ஆறுதலாக முத்துப்பாண்டியனும், உமையாளும் வருகிறார்கள். இருவரும் போலீஸ் அதிகாரிகள். அரசு ஊழியர்கள் என்பதால் போராளிகளின் எதிரிகள். அந்தவகையில் அவர்களை நாகரிகமாக காட்டியிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

ஈழப்போராளிகளுக்கு தமிழகத்தில் கோடிக்கணக்கான ஆதரவாளர்கள் உண்டு. நூற்றுக்கணக்கானவர்கள் அவர்களுக்கு உதவியுள்ளனர். ராணுவத்தையே மறித்து போராடியுள்ளனர். ஆனால், கொலையாளிகளோ, வன்முறையாளர்களோ அல்லர். கண்ணியமிக்கவர்கள். ஆனால், ராஜியை காப்பாற்ற வரும் கும்பல் துப்பாக்கிகளுடன் வந்து போலீஸ்காரர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளுகிறது. யார் இவர்கள்? தாயக தமிழர்களா?

இந்திய பிரதமராக வருகிறவரிடம் தொலைநோக்குப் பார்வையோ, சூழலை புரிந்து கொள்ளும் தன்மையோ, அடுத்தவர் சொல்வதை காது கொடுத்து கேட்கும் பழக்கமோ இல்லை. அதிகாரிகள் பலமுறை கூறியும் இலங்கையுடன் செய்யப் போகும் ஒப்பந்தம் சென்னையில் தான் நடக்க வேண்டும் என்கிறார். அவர் மீதான போராளிகளின் தாக்குதலை நாயகன் முறியடித்த பின், இந்திய பிரதமரும், இலங்கை அதிபரும் சென்னையில் சந்தித்து ஒப்பந்தத்தில் கையொப்பமிடுகின்றனர். இலங்கை அதிபரின் தோற்றமும், உடையும் ராஜபக்சேயை பிரதிபலிக்கிறது. தமிழர்கள் கற்பனையிலும் விரும்பாத ஒன்றை இறுதி காட்சியாகக் கொண்டு கதை முடிகிறது.

ஈழ இன அழிப்பு இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்பட்ட பெரும் தாக்குதல். அது பற்றி படம் எடுப்பதாக, மீண்டும் மீண்டும் அம்மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். ஈழப்போராட்டத்தையும், போராளிகளையும் தவறாக சித்தரித்த படைப்புகளில் சிறப்பான இடம் தி பேமிலி மேனுக்கு நிச்சயம் உண்டு.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: