முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 73 வருடங்களுக்கு முன்பே தமிழில் படமாக்கப்பட்ட ஈராக்கின் காதல் கதை!

73 வருடங்களுக்கு முன்பே தமிழில் படமாக்கப்பட்ட ஈராக்கின் காதல் கதை!

லைலா - மஜ்னு

லைலா - மஜ்னு

இஸ்லாமிய படையெடுப்பு காரணமாக லைலா - மஜ்னு கதை பல நூற்றாண்டுகள் முன்பே இந்தியாவுக்கு வந்தது. சினிமா இந்தியாவுக்குள் நுழைந்த போது லைலா - மஜ்னு காதல் கதையும் படமாக்கப்பட்டது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரபி கவிஞரையும், அவரது காதலியையும் பற்றிய கதை அரபு மொழியிலிருந்து பெர்ஷியன் மொழிக்கு வந்து பிறகு அது உலகம் முழுவதும் லைலா - மஜ்னு காதல் கதையாக அறியப்பட்டது. பெர்ஷியன் கவி நிசாமி கன்சவி இயற்றிய இவர்களின் காதல் கதை குறித்த பாடலே இப்போது நிலவும் அனைத்து லைலா - மஜ்னு காதல் கதைகளுக்கும் அடிப்படை.

இஸ்லாமிய படையெடுப்பு காரணமாக லைலா - மஜ்னு கதை பல நூற்றாண்டுகள் முன்பே இந்தியாவுக்கு வந்தது. சினிமா இந்தியாவுக்குள் நுழைந்த போது லைலா - மஜ்னு காதல் கதையும் படமாக்கப்பட்டது. மௌனப்படக் காலத்தில் 1922 மற்றும் 1927 ஆகிய வருடங்களில் லைலா - மஜ்னு கதை படமாக்கப்பட்டது. 1931 இல் சினிமா பேச ஆரம்பித்ததும் மீண்டும் இக்கதை படமானது. பிறகு இந்தி, பஞ்சாபி உள்பட பல மொழிகளில் லைலா - மஜ்னு காதல் கதையை படமாக்கினர்.

தெலுங்கில் லைலா மஜ்னு

1949 இல் நடிகை பானுமதியும், அவரது கணவரும், இயக்குனருமான பி.எஸ்.ராமகிருஷ்ண ராவும் இணைந்து தங்களின் பரணி பிக்சர்ஸ் சார்பில் லைலா - மஜ்னு கதையை அதே பெயரில் தெலுங்கில் தயாரித்தனர். லைலாவாக பானுமதியும், மஜ்னுவாக அக்னினேனி நாகேஸ்வரராவும் நடித்தனர். பானுமதியின் கணவரே படத்தை இயக்கினார். தெலுங்கில் தயாரான இந்தப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர்.

இந்தப் படம் வெளியான அடுத்த வருடமே தியாகராஜ பாகவதர் பைனான்ஸ் செய்ய, பாலாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில் லைலா மஜ்னு தமிழில் தயாரானது. மஜ்னுவாக டி.ஆர்.மகாலிங்கமும், லைலாவாக எம்.வி.ராஜம்மாவும் நடித்தனர். என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், சகஸ்கரநாமம் ஆகியோரும் படத்தில் உண்டு. எஸ்.வி.வெங்கடராமன் படத்துக்கு இசையமைத்தார். நியூட்டன் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தது.

வரவேற்பை பெறாத படம்

ஒரு வருடத்திற்கு முன் இன்னொரு லைலா - மஜ்னு வெளியானதாலா தெரியவில்லை. டி.ஆர்.மகாலிங்கம், ராஜம்மா நடித்த லைலா மஜ்னு போதிய வரவேற்பை பெறவில்லை.

ஷேக்ஸ்பியரின் ரோமியோ - ஜுலியட்டுக்கு முன்னோடியான, அதற்கு நிகரான காதல் கதை லைலா - மஜ்னு. இன்றும்கூட உலகில் ஏதோ ஒரு மொழியில் இந்தக் காதல் கதை படமாகிக் கொண்டுதான் இருக்கிறது. 1936 இல் ஈஸ்ட் இன்டியன் பிக்சர்ஸ் லைலா - மஜ்னு கதையை பெர்ஷியன் மொழியில் இந்தியாவில் தயாரித்தது. ஒருசில படங்களே பெர்ஷியன் மொழியில் இந்தியாவில் தயாராகியுள்ளன. அதில் ஒன்று இந்த காதல் கதை என்பது பலரும் அறியாத செய்தி. தமிழில் 1950 மார்ச் 1 வெளியான லைலா மஜ்னு தற்போது 73 வது ஆண்டை நிறைவை செய்து கொண்டாடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Classic Tamil Cinema