தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விபிஎஃப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டதால் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என தயாரிப்பாளர்கள் முதலில் அறிவித்தனர்.
கியூப் மற்றும் யூ.எஃப்.ஓ நிறுவனங்களுக்கு இடையே நடந்த போட்டியில் இரண்டு நிறுவனங்களுமே நவம்பர் மாதம் மட்டும் வி.பி.எஃப் கட்டணம் தேவையில்லை என்று அறிவித்தது. இதனால் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகும் என்று தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “டிஜிட்டல் நிறுவனங்கள் வி.பி.எஃப் - ஐ விலக்கி இருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி, வி.பி.எஃப் கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம்.
அதே சமயம் வி.பி.எஃப் கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று பாரதிராஜா கூறியுள்ளார்.
இந்நிலையில் இதுவரை 3 தமிழ்ப் படங்கள் தீபாவளிக்கு வெளியாக இருப்பதை உறுதி செய்திருக்கின்றன. ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கி நடித்திருக்கும் ‘இரண்டாம் குத்து’ திரைப்படம் தீபாவளி ரிலீசை உறுதி செய்துள்ளது.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, ஸ்வாதி முப்லா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘பிஸ்கோத்’ திரைப்படமும் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாக இருப்பதை உறுதி செய்திருக்கிறது.
இந்த வருட தொடக்கத்தில் தெலுங்கில் வெளியான‘சரிலேரு நீக்கெவரு’ தமிழில் டப் செய்யப்பட்டு ‘இவனுக்கு சரியான ஆள் இல்லை’ என்ற டைட்டிலுடன் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் மகேஷ் பாபு, ராஷ்மிகா ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இந்த 3 படங்கள் தவிர எம்.ஜி.ஆர் மகன், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய இரண்டு பெரிய படங்கள் ஓடிடி தளங்களில் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.