முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சுந்தர்.சியின் சக்சஸ் ஃபார்முலா - காமெடியில் கலக்கிய லண்டன் படம் உருவான கதை தெரியுமா?

சுந்தர்.சியின் சக்சஸ் ஃபார்முலா - காமெடியில் கலக்கிய லண்டன் படம் உருவான கதை தெரியுமா?

சுந்தர்.சி - பிரஷாந்த்தின் லண்டன்

சுந்தர்.சி - பிரஷாந்த்தின் லண்டன்

படம் மலையாளத்தில் வெற்றி பெற, அதனை தமிழில் முறையாக ரைட்ஸ் வாங்கி ரீமேக் செய்தார் சுந்தர் சி.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் பிரசாந்தை வைத்து நகைச்சுவைக் காட்சிகள் எடுக்க தனித்திறமை வேண்டும். பிரசாந்த் சிரித்தாலே மொத்த சம்பவமும் மாறிவிடும். லண்டன், வின்னர் படங்களின் காமெடிக் காட்சிகளில் பிரசாந்தை சிரிக்கவே இயக்குனர் அனுமதித்திருக்க மாட்டார். அதுதான் சுந்தர் சி.யின் சக்சஸ் ஃபார்முலா.

லண்டன் படம் 2005-ல் வெளியானது. பிரசாந்த், மும்தாஜ், பாண்டியராஜன், வடிவேலு, நளினி, மணிவண்ணன், மயில்சாமி, விஜயகுமார், ஸ்ரீவித்யா என நட்சத்திரப் பட்டாளமே நடித்தது. இது மலையாளப் படம் காக்ககுயில் படத்தின் தமிழ் ரீமேக்.

காக்ககுயில் என்ற பெயரிலேயே படத்தின் கதை உள்ளது. குயில் தனியாக கூடு கட்டாது. காகத்தின் கூட்டில் முட்டையிட்டு எஸ்கேப்பாகிவிடும். குயிலின் முட்டையையும் தன்னுடைய முட்டை என நினைத்து காகம் அடைகாக்கும். காக்ககுயில் படத்தின் கதையும் இதுதான். பணக்கார கண் தெரியாத தம்பதிகள் நெடுமுடி வேணு, கவியூர் பொன்னம்மாவின் பேரன் எனச் சொல்லி, அவர்களது வீட்டில் மோகன்லாலும், முகேஷும் அடைக்கலம் புகுந்து கொள்வார்கள்.

ஆள்மாறாட்ட கதைகள் எடுப்பதில் ப்ரியதர்ஷன் நிபுணர். மோகன்லாலை வைத்தே பல ஆள்மாறாட்டக் கதைகள் எடுத்துள்ளார். அனேகமாக அனைத்துமே வெற்றிப் படங்கள். அதில் ஒன்றுதான் இந்த காக்ககுயில். வேலை தேடி மும்பை வந்து, வேலை கிடைக்காமல் அலைந்து திரியும் மோகன்லால் தன்னைப் போலவே வேலைவெட்டி இல்லாத சொந்த ஊர் நண்பன் முகேஷை சந்திப்பார். முகேஷ் வாழ்வதற்காக எந்த தடுகித வேலைகளையும் செய்ய தயாராக இருப்பவர். காசில்லாதவனுக்கு என்ன தர்மமும், கர்மமும் என்ற டைப்.

கொச்சின் ஹனிபாவும், அவரது சகோதரர் திக்குவாய் ஜெகதீஷும், ஹனிபாவின் காதலி சுஜிதா கன்னாவும் வங்கிக் கொள்ளை ஒன்றை திட்டமிடுவார்கள். ஆள் பற்றாக்குறையால் மோகன்லாலும், முகேஷும் அவர்களுடன் இணைந்து கொள்வார்கள்.

கொள்ளைச் சம்பவத்துக்குப் பின் கொச்சின் ஹனீபா போலீசால் கைது செய்யப்படுவார். கொள்ளையின் அனைத்துப் பங்கையும் அபகரிக்க, சுஜிதாவே இதனை செய்திருப்பார். பணம் இருக்கும் இடம் ஜெகதீஷுக்கும், வழக்கறிஞர் ஜெகதி ஸ்ரீகுமாருக்கும் மட்டுமே தெரியும். இதனால் சுஜிதா ஜெகதி ஸ்ரீகுமாரை காதலிப்பது போல் நடித்து பணம் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ள முயல்வார். மோகன்லாலும், முகேஷும் கண் தெரியாத நெடுமுடி வேணு, ஸ்ரீவித்யா தம்பதியின் பேரன் என்று சொல்லி அவர்களது வீட்டிற்குள் புகுந்து கொள்வார்கள். இறுதியில் இந்த களேபரங்கள் என்னவானது என்பது கதை.

ப்ரியதர்ஷன் படத்தின் பெயர் மட்டும் காக்ககுயில் அல்ல. படம் உருவானதே ஒரு காக்ககுயில் சம்பவம்தான். அதாவது 1988 இல் ஹாலிவுட்டில் வெளியாகி அந்தக் காலத்திலேயே 188 மில்லியன் டாலர்கள் வசூலித்த, ஏ பிஷ் கால்டு வேன்டா படத்தின் தழுவல். அனுமதி வாங்காமல் ஆங்கிலப் படத்தின் கதையை தழுவி, இங்கே அங்கே பட்டி டிங்கர் பார்த்து காக்ககுயிலாக்கினார் ப்ரியதர்ஷன். படம் மலையாளத்தில் வெற்றி பெற, அதனை தமிழில் முறையாக ரைட்ஸ் வாங்கி ரீமேக் செய்தார் சுந்தர் சி.

மோகன்லால் நடித்த வேடத்தில் பிரசாந்தும், முகேஷ் வேடத்தில் பாண்டியராஜனும், சுஜிதா வேடத்தில் மும்தாஜும், ஜெகதி ஸ்ரீகுமார் வேடத்தில் வடிவேலுவும் நடித்தனர்.

ஹாலிவுட்டில் தயாராகி, லாஸ் ஏஞ்சல்ஸில் முதலில் வெளியாகி, ப்ரியதர்ஷனால் மலையாளத்தில் காக்ககுயிலாக வெளியாகி, தமிழில் சுந்தர் சி.யால் தழுவப்பட்டு தமிழ்நாட்டில் லண்டனாக வெளியான படத்தின் ட்ராவலிங் மேப் இது. இன்று, 2023 மார்ச் 11 ஆம் தேதி லண்டன் வெளியாகி 18 வருடங்கள் நிறைவு பெறுகிறது.

First published:

Tags: Actor Prashanth