முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விருமன் பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா - சுவாரஸ்ய தகவல்கள்!

விருமன் பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா - சுவாரஸ்ய தகவல்கள்!

சூர்யா மற்றும் கார்த்தி

சூர்யா மற்றும் கார்த்தி

விருமன் திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மதுரையில் நடைபெற்ற விருமன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.

நடிகர் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்து ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகவுள்ள விருமன் திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், இயக்குனர்கள் பாரதிராஜா, ஷங்கர், முத்தையா, நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, இளவரசு, சிங்கம்புலி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகை அதிதி, வடிவுக்கரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை மண் சார்ந்த படம் என்பதால் சூர்யா, கார்த்தி, யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட திரை குழுவினர் அனைவரும் வேஷ்டி சட்டையில் விழாவில் இடம்பெற்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில்,

"மதுரையில் ஒரு விழா வெற்றி என்றால் அது தமிழகத்தின் வெற்றி.சூர்யா தேசியவிருது பெற்ற பின்னர் நடைபெறும் விழா இது. அவருக்கு தேசிய விருது தாமதமாக வந்துள்ளது. சூர்யா மதுரை சார்ந்த மனிதராக படத்திற்கு தேசியவிருது கிடைத்துள்ளது. அது பெருமை அளிக்கிறது.

திரையை போலவே திரைக்கு வெளியே சமூகத்தில் அவர்கள் காட்டும் அக்கறை முக்கியமானது. குறிப்பாக கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். தமிழகத்தில் அனைவரது வீட்டில் ஒருவராக சூர்யா, கார்த்தி இருவரையும் கருதுகின்றனர். கொரோனா காலத்தில் மதுரையில் அன்னவாசல் திட்டத்தில் ஒன்றரை லட்சம் பேருக்கு உணவு வழங்கியதில் சூர்யாவின் பங்களிப்பு முக்கியமானது" என கூறினார்.

இயக்குனர் ஷங்கர் பேசுகையில், "விருமன் படத்தின் கதை தெரியவில்லை என்றாலும், சூர்யா தயாரிப்பு என்பதால் நம்பிக்கை வந்தது. சூர்யா தனி மனிதனாக விவசாயம், கல்வி போன்ற நல்ல விசயங்களுக்கு குரல் கொடுக்கின்றார். விரைவில் கார்த்தியும் தேசிய விருது பெற வேண்டும். என் மகள் அதிதி சங்கர் சிறந்த எண்டர்ட்ரெயினர். அவரை ரசிகர்கள் தான் வளர்த்துவிட வேண்டும்" என்றார்.

இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், "மதுரை மண் ரசனைக்கு பெயர்போன மண். மதுரையில் ஒரு படம் ரசிக்கப்பட்டால் அது உலகம் முழுவதும் ரசிக்கப்படும். விருமன் படமும் அப்படி எல்லோராலும் ரசிக்கப்படும்.விருமன் திரைப்படத்தில் அதிதி சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு சிறந்த எதிர்காலம் உண்டு. பருத்திவீரனுக்கு பின்னர் இந்த படத்தில் கார்த்திக் நடிப்பை பார்த்து பிரம்மித்தேன். கார்த்தி தமிழ்திரையுலகில் எங்கோ செல்லப்போகிறார்.

ஆயுத எழுத்து படத்தில் சூர்யா கண்ணாலயே பேசி எனக்கே நடிப்பை சொல்லி கொடுத்தவர். சினிமாத்துறையில் சூர்யாவிற்கு பல இடையூறு வந்த நிலையிலும் ஜெய்பீம் என எழுந்துநின்றார். சினிமாவில் சம்பாதித்து அறக்கட்டளை மூலமாக நன்மைகள் செய்துவருகிறார். சூர்யா, கார்த்தி போன்ற தங்கங்களை படங்களில் பயன்படுத்த ஆசைப்படுகிறேன், பார்க்கலாம்." என்றார்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில்,

"சூர்யாவும், கார்த்திக்குக்கும் நன்றி நீண்ட நாட்களுக்கு பின்பு இணைந்து பணியாற்றியுள்ளோம். முத்தையாவுடன் சேர்ந்து முதல்முறை படம் பண்ணியுள்ளேன். இந்த திரைப்படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

பள்ளி படிக்கும்போதிருந்தே கார்த்தி, சூர்யா எங்களுடைய நட்பு தொடர்கிறது. என்னுடைய இசையில் அஞ்சான் படத்தில் சூர்யாவை முதலில் பாட வைத்தேன். இன்னும் சில பாடல்கள் அவரை பாட வைப்பேன். மதுரையில் விரைவில் இசைக்கச்சேரி நடத்துவேன்" என்றார்.

இயக்குனர் முத்தையா பேசுகையில், "நான் பிறந்த மண்ணில் மதுரையில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி.

அதிதி அறிமுகமானது இந்த படத்தின் ஸ்பெஷல். கார்த்தி மணிரத்னம் சாருக்கு பின் எனது இயக்கத்தில் இரு படங்கள் நடித்துள்ளார்.

மண் சார்ந்த, உறவுகள் குறித்து பேசக்கூடிய திரைப்படங்கள் குறைந்துள்ளது. அதில் இயக்குனர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்பது எனது ஆசை.

கோடியில் ஒருத்தன் தான் சினிமாவில் வெற்றி பெற முடியும் எனது தந்தை கூறிய நிலையிலும் சினிமாவில் கால் பதித்துவிட்டேன். எனது பெற்றோரை இந்த மேடையில் ஏற்றியது பெருமையாக உள்ளது" என்றார்.

நடிகர் கார்த்தி பேசுகையில், "எனக்கு அடையாளத்தை மதுரை தான் கொடுத்தது. அமீர் சார் இந்த மதுரையில் தான் என்னை உருவாக்கினார்.கிராமம் சார்ந்த படங்களில் நடிக்க வேண்டும் ஆசை அதனால் முத்தையாவுடன் இரண்டாவதாக படம் நடித்துள்ளேன். இந்த கதை சொல்லும்போது படத்திலயே அப்பாவே வில்லன் என்று கூறியவுடன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

பருத்திவீரன் மூலம் எனக்கு பெரிய அடையாளத்தை பெற்று தந்தவர் யுவன். இந்த படம் ப்ளாக்பஸ்டர் ஆக வேண்டும் என கூறியிருக்கேன். கடைக்குட்டி சிங்கத்திற்கு பின் அண்ணன் சூர்யா தயாரிப்பில் கூட இணைந்துள்ளேன். மதுரை மண்ணுக்கு நன்றி" என்றார்.

நடிகர் சூர்யா பேசுகையில், "மதுரை ரசிகர்களின் அன்புக்கும் எப்போதும் கட்டுப்படுவேன். யுவன்சங்கர் ராஜாவோடு அடிக்கடி மதுரைக்கு வருவேன். கோவைக்கு இணையாக மதுரையில் பல்வேறு அழகான அனுபவங்கள் எனக்கு உண்டு. மதுரையை சுற்றி அவ்வளவு கதைகள் உள்ளது. இங்கு உள்ளவை கதைகள் இல்ல நிஜங்கள்.

காவல்கோட்டம், வேள்பாரி நாவல்களின் ஆசிரியர், தமிழகத்தின் முக்கிய அடையாளம் எனது நண்பர் எம்பி வெங்கடேசன் வந்துள்ளது மகிழ்ச்சி. மதுரை மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க கூடியவர் வெங்கடேசன். அவருடன் விரைவில் இணைந்து பணியாற்றவுள்ளோம்.

Also read... சினிமா தயாரிப்பாளர்கள் மீது நடத்தப்படும் ஐடி ரெய்டு - நடிகர் கார்த்தி கருத்து

இந்த மேடையில் அமீர், பாலா சார் பெயரை உச்சரிக்காமல் இருக்க முடியாது. எங்கள் இருவருக்கும் அமீர், பாலா சார் அடையளங்களை தந்துள்ளனர். இதேபோன்று சிங்கம்புலி சாரும் எங்களுக்கு முக்கியமானவர்.

அடுத்ததாக வாடிவாசல் வெளியாகவுள்ளது. சரியான விடுதலைக்காக காத்திருக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் சூட்டிங் நடந்த நிலையிலும், தேனி மாவட்ட மக்கள் ஆதரவளித்தனர் அவர்களுக்கு நன்றி.

சினிமாவிற்காக கார்த்தி பல மடங்கு அதிகமாக சிந்தித்துக்கொண்டே இருப்பார். என்னை விட சிறந்த நடிகர் கார்த்தி. கார்த்தியும், யுவனும் என தம்பிகள் தான்.

எனக்கு தேசிய விருது கிடைத்த போது நான் வெளிநாட்டில் இருந்தேன். எனக்கு விருது கிடைத்ததை எனது ரசிகர்கள் தான் முதலில் கொண்டாடினார்கள். மதுரை கலைஞர்களையும், கலைகளையும் கொண்டாடும் ஊர். டில்லியும் ரோலக்ஸ்சும் இணைவது குறித்து காலம் பதில் சொல்லட்டும்" என தெரிவித்தார். விழா நிறைவில் ரசிகர்களுடன் சூர்யா செல்பி புகைப்படம் எடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Karthi, Actor Suriya, Director Shankar, Entertainment