முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாறுவேடத்தில் கலக்கிய எம்ஜிஆர்.. ஜெயலலிதா.. 52 வருடங்களை நிறைவு செய்த குமரிக்கோட்டம்!

மாறுவேடத்தில் கலக்கிய எம்ஜிஆர்.. ஜெயலலிதா.. 52 வருடங்களை நிறைவு செய்த குமரிக்கோட்டம்!

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

எம்ஜிஆர், நல்லா பாருடா என்று கூலிங் கிளாஸை கழற்றவும்தான் சோவுக்கு அவரை அடையாளம் தெரியும். இப்படி மாறுவேஷத்தை மறுபடி யாரும் யோசிக்கவே கூடாது என்பது போல் படம் நெடுக போட்டு துவைத்திருப்பார்கள்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எம்ஜிஆர் படங்களில் அவர் போடும் மாறுவேஷங்கள் புகழ்பெற்றவை. மீசையும், மருவும் வைத்தால் மாறுவேஷம் தயார். அப்படியும் ரசிகர்கள் ஆள் தெரியாமல் ஏமாந்துப் போவார்களோ என்று, கேமராவைப் பார்த்து கண்ணடித்து, வந்திருக்கிறது நான்தான் என படம் பார்க்கிற ரசிகர்களுக்கு சமிக்ஞை தருவார். அவரது மாறுவேஷத்தில் உச்சம்பெற்ற படங்களில் ஒன்று குமரிக்கோட்டம். குமரிக்கோட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிறுவர்களாக இருக்கும் போதே, இவள் அவனுக்குதான் என்று முடிவு செய்வார் ஜெயலலிதாவின் தந்தையான வி.கே.ராமசாமி. அவருக்கும், அவரது மகளுக்கும் ரிக்ஷா ஓட்டி, சாப்பாடு போடுகிறவர் எம்ஜிஆரின் தந்தை. அந்தளவு நண்பர் மீது பாசம். வி.கே.ராமசாமியின் மாமனார் (மனைவியின் தந்தை) இறந்துபோக, அவரது பெரும் சொத்து இவரை வந்தடையும். ஆனால், வி.கே.ராமசாமி முறுக்கிக் கொண்டு பட்டணம் போக மறுப்பார். எம்ஜிஆரின் தந்தை தனது மனைவியின் நகையை விற்று அந்தப் பணத்தில் வி.கே.ராமசாமியையும், அவரது மகளையும் பட்டணம் அனுப்பி வைப்பார்.

சொத்து கைக்கு வந்துதும் வி.கே.ராமசாமி ஆளே மாறிப்போவார். சிறுமியான அவரது மகள் குமாரி வளர்ந்து, பணக்காரத் திமிர் பிடித்த பெண்ணாக மாறியிருப்பார். அப்படியே எம்ஜிஆர் பக்கம் வந்தால் ஜெயலலிதா படிக்கும் அதே கல்லூரியில் படித்து, ஜெயலலிதா வீட்டிலேயே தோட்டக்காரனாக வேலை பார்ப்பார். மகன் பட்டம் பெற்றதும், எம்ஜிஆரின் தந்தை வி.கே.ராமசாமியை சந்தித்து, அவரது மகளை தனது மகனுக்கு கட்டி வைக்க கேட்பார். வி.கே.ராமசாமி அவரை அவமானப்படுத்தி அனுப்புவார்.

எம்ஜிஆர் கோபம் கொண்டு அவர்களுக்கு பாடம் புகட்டாமல் விட மாட்டேன் என்று சபதம் செய்வார். பட்டணத்தில் குடிகார கோடீஸ்வரர் அசோகனை திருத்தி, அவரது அன்புக்கு பாத்திரமாவார் எம்ஜிஆர். அவரது உதவியுடன் சாதாரண நிலத்தை மைக்கா இருக்கும் நிலம் என பொய் சொல்லி, பெரும் தொகைக்கு வி.கே.ராமசாமியை வாங்க வைப்பார். இதில் வி.கே.ராமசாமியின் மொத்த சொத்தும் போய் கடனாளியாவார். மிஸ்டர் பால் என்ற பெயரில் கோடீஸ்வரனாக நாடகமாடும் எம்ஜிஆர் மீது ஜெயலலிதாவுக்கு காதல் வரும். வி.கே.ராமசாமி போண்டியானதும் ஜெயலலிதாவை மணக்க முடியாது என்பார் எம்ஜிஆர். இதனால், ஜெயலலிதாவுக்கு மனநிலை தவறிவிடும். இதனிடையில் வில்லன் ஆர்.எஸ்.மனோகர் ஜெயலலிதாவைப் போலிருக்கும் ரிக்கார்ட் டான்ஸர் மாயாதேவியை (ஜெயலலிதா இரட்டை வேடம்) குமாரி என்று பொய் சொல்ல, உண்மையான குமாரி யார் என்ற குழப்பம் ஏற்படும்.

இறுதியில் வி.கே.ராமசாமி தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி எம்ஜிஆரிடம் அழுது மன்றாட, அவரோ, நான் மிஸ்டர் பால் அல்ல, வி.கே.ராமசாமியின் சினேகிதர் மகனும், அவர்களது வீட்டில் தோட்டக்காரனாக வேலை செய்தவனுமான கோபால் என்று சொல்லி, அவரது மகள் ஜெயலலிதாவை மணக்க சம்மதிப்பார்.

எம்ஜிஆர் கல்லூரியில் படிக்கையில் கொஞ்சம் தாடியுடன் வருவார். அதன் பிறகு தாடியில்லாமல் மிஸ்டர் பால் என்ற கோடீஸ்வரனாக வருகையில் யாருக்கும் அவரை அடையாளம் தெரியாது. எம்ஜிஆரைப் போலவே நடிகர் சோவுக்கும் மாறுவேஷம் உண்டு. படத்தில் வருகிறவர்கள் தவிர்த்து, படம் பார்க்கிறவர்களுக்கு அவர் யார் என்பது பளிச்சென்று தெரியும். வி.கே.ராமசாமிக்கு எம்ஜிஆரை தெரியவில்லை போகட்டும். அவரது நண்பரின் முகம்கூடவா மறந்து போகும்.

கல்லூரி ஆண்டுவிழா மாறுவேடப் போட்டியில் தாடி, மீசை, தலைப்பாகையுடன் ஜெயலலிதா நடனம் ஆடுவார். அவருக்கு பரிசளிக்கப்போகையில் ஒரு பிச்சைக்காரர் வந்து அவருக்கு மாலை அணிவிப்பார். உடனே பரிசை அந்தப் பிச்சைக்காரருக்கு அளிப்பார்கள். பிச்சைக்காரருக்கு எதுக்கு பரிசு என்று பார்த்தால், அந்த வேடத்தில் வந்தது எம்ஜிஆர். அசோகனை சிரிக்க வைக்க எம்ஜிஆர் பாடி ஆடுகையில் இன்னும் நாலைந்து மாறுவேஷங்கள் போடுவார். அவர் கோடீஸ்வரனாக கோட் போட்டு கூலிங்கிளாஸ் அணிந்ததும், ஆத்ம நண்பர் சோவுக்கே அவரை அடையாளம் தெரியாது. எம்ஜிஆர், நல்லா பாருடா என்று கூலிங் கிளாஸை கழற்றவும்தான் சோவுக்கு அவரை அடையாளம் தெரியும். இப்படி மாறுவேஷத்தை மறுபடி யாரும் யோசிக்கவே கூடாது என்பது போல் படம் நெடுக போட்டு துவைத்திருப்பார்கள்.

குமரிக்கோட்டத்தின் கதையை எழுதியவர் வி.சி.குகநாதன். திரைக்கதை, வசனம் எழுதியவர் சொர்ணம். ப.நீலகண்டன் படத்தை இயக்க, எம்எஸ்வி இசையமைத்தார். புலமைப்பித்தன் வரிகளில் அமைந்த, எங்கே அவள் பாடல் ஹிட்டானது. 1971, ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான குமரிக்கோட்டம், இரண்டு நாள் முன்பு 52 வருடங்களை நிறைவு செய்தது.


First published:

Tags: Classic Tamil Cinema, Jayalalitha, MGR