தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் ஏ.பி.நாகராஜன். வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி இவரது 95வது பிறந்தநாள். தமிழ் சினிமாவை ஆன்மிக மணம்மிக்கதாக மாற்றியதில் இவருக்கு பெரும் பங்குண்டு. சேலம் சங்ககிரி அக்கம்மாபேட்டை ஏ.பி.நாகராஜன் பிறந்த ஊர். அக்கம்மாபேட்டை பரமசிவன் நாகராஜன் என்பதன் சுருக்கமே ஏ.பி.நாகராஜன். நாடகத்தின் மீதான ஆசையில் பழனி கதிரவன் நாடக சபா என்ற நாடகக் கம்பெனியை தொடங்கி, அதனை நடத்தி வந்தார். அவரே நாடகத்துக்கான கதைகளை எழுதுவார். அப்படி அவர் எழுதி நாடகமாக நடிக்கப்பட்ட நால்வர் என்ற கதை திரைப்படமான போது அதன் திரைக்கதையை எழுதி, அப்படத்தில் நாயகனாக நடிக்கவும் செய்தார்.
அதன் பிறகு தயாரிப்பாளர் வேணுவின் படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். மாங்கல்யம், நல்ல தங்காள், பெண்ணரசி போன்றவை அதில் முக்கியமானவை. 1956 இல் டவுன் பஸ் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதினார். அதனைத் தொடர்ந்து நான் பெற்ற செல்வம், மக்களை பெற்ற மகராசி, சம்பூர்ண ராமாயணம், பெற்ற மகனை விற்ற அன்னை என பல படங்களுக்கு திரைக்கதை எழுதினார். 1962 இல் வடிவுக்கு வளைகாப்பு படத்தின் மூலம் இயக்குனரானார்.
நடிகர் வி.கே.ராமசாமியுடன் இணைந்து படங்கள் தயாரித்த ஏ.பி.நாகராஜன் 1964 இல் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நவராத்தரி படத்தை இயக்கினார். அதையடுத்து திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை என பக்திப் படங்களாக இயக்கினார். 1967 இல் நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறை திருவருட்செல்வர் என்ற பெயரில் படமாக்கினார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 1968 இல் ஆழ்வார்களின் கதையை திருமால் பெருமை என்ற பெயரில் எடுத்தார். இவை அனைத்திலும் சிவாஜி கணேசனே நாயகனாக நடித்தார். திருவருட்செல்வர், திருமால் பெருமை படங்களில் அனைத்து ஆழ்வார், நாயன்மார் வேடங்களை ஏற்று, ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் சிவாஜி.
பக்திப் படங்களாக இயக்கிய ஏ.பி.நாகராஜன்தான் தில்லானா மோகனாம்பாள் என்ற கிளாசிக் படத்தையும் தந்தார். அவர் 1977 இல் தனது 49 வது வயதில் மரணமடைந்தது தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட பேரிழப்பு.
தனது திரைவாழ்க்கையில் பல சாதனைகளை ஏ.பி.நாகராஜன் படைத்தார். அவர் எழுதிய சம்பூர்ண ராமாயணத்தை ராஜாஜி பார்த்து அவரையும், அதில் நடித்த சிவாஜியையும் பாராட்டினார்.
ஏ.பி.நாகராஜனின் இன்னொரு பெருமை அவர் இயக்கிய திருவிளையாடல், சரஸ்வதி சபதம், நவராத்திரி, திருவருட்செல்வர், திருமால் பெருமை போன்ற படங்கள் பலமுறை மறுவெளியீட்டைக் கண்டு, திரையிடும் போதெல்லாம் லாபத்தை அள்ளி வழங்கின.
ஏ.பி.நாகராஜனின் இயக்கத் திறமையையும், சிவாஜியின் நடிப்புத் திறமையையும் வெளியுலகுக்கு பறைசாற்றிய திரைப்படங்களுள் ஒன்றான, ஆழ்வார்களின் கதையைச் சொன்ன திருமால் பெருமை திரைப்படம் 1968, பிப்ரவரி 16 இதே நாளில் வெளியானது. சிவாஜியின் புதிய படங்கள் வெளியாகும் போதும் திருமால் பெருமை மறுவெளியீடு செய்யப்பட்டு, லாபத்தை அள்ளும். அப்படியான திரைப்படம் வெளியாகி இன்றுடன் 55 வருடங்கள் நிறைவு பெறுகிறது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.