விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், சென்னல்குடி அருகேயுள்ள பொட்டல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாளுக்கு எட்டு குழந்தைகள். வறுமை காரணமாக வேலை தேடி குழந்தைகளுடன் விருதுநகரில் குடியேறினார். மகன்கள் கல் உடைக்கும் வேலைக்குச் செல்வார்கள். மகள்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர் வீடுகளுக்குச் சென்று காசுக்கு மாவரைத்துத் தருவார்கள்.
கஷ்ட ஜீவனம் நடத்தி வந்த அக்குடும்பத்தின் கடைசி வாரிசு லட்சுமி. ஆறு வயது முதல் நாடக மேடை ஏறத் தொடங்கிவர் சினிமாவில் நடிப்பதற்காகவும், நாடகத்தில் பெரி வாய்ப்பிற்காகவும் சென்னை வந்தார்.
1948 இல் எஸ்.எஸ்.வாசன் எடுத்த சந்திரலேகா படத்தில் குரூப் டான்சராக வாய்ப்பு கிடைத்தது. பிறகு சேவா ஸ்டேஜ், பாலசந்தரின் ராகினி ரெக்ரியேஷன்ஸ் ஆகிய நாடகக் குழுவில் இணைந்து நாடகங்களில் நடித்தார்.
சந்திரலேகாவுக்குப் பிறகு சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு 1959 இல் வெளியான தாமரைக்குளம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அதன் பிறகு கடைசிவரை சினிமாவைவிட்டு விலகவில்லை.
எஸ்.என்.லட்சுமி ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு அம்மாவாக நடித்துள்ளார். பாக்தாத் திருடன் படத்தில் டூப் போடாமல் புலியுடன் சண்டையிட்டு, தனது துணிச்சலால் எம்ஜிஆரையே வியக்க வைத்தவர்.
சர்வர் சுந்தரம், இதயவீணை, மாட்டுக்கார வேலன், விவசாயி, பாபு, சங்கே முழுங்கு, ஜீன்ஸ், படையப்பா உள்பட 1500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஐயாயிரம் முறைக்கு மேல் நாடக மேடை ஏறியுள்ளார். திறமையான பழம்பெரும் நடிகர்களை தேடிப்பிடித்து வாய்ப்பு தரும் கமலின் பட்டியலில் எஸ்.என்.லட்சுமியும் இடம்பிடித்தது ரசிகர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.
தேவர் மகன் படத்தில் சிவாஜி, காகா ராதாகிருஷ்ணனுடன் எஸ்.என்.லட்சுமியும் சிறப்பான வேடம் ஏற்றார். நான் கொடுத்த பாலெல்லாம் இப்படி ரத்தமாப் போகுதே' என்று, கொலையுண்ட தனது மகன் நாசரின் உடலைப் பார்த்து அவர் கதறுகிற காட்சி மறக்க முடியாத காட்சிகளில் ஒன்று.
மைக்கேல் மதன காமராஜனில் ஊர்வசியின் திருட்டு குணம் கொண்ட பாட்டியாக நடித்தார். பணத்துக்கு ஆசைப்பட்டு முதலிரவு அறையில் மூன்றாவது ஆளாக நகேஷை அவர் அனுமதிப்பது எவர்கிரீன் காமெடி. அவர் சாகஸக் காட்சிகளில் சிறப்பாக நடித்தவர் என்பதால் மைக்கேல் மதன காமராஜனில் அதுபோன்ற காட்சிகளை அவருக்காக கமல் வைத்திருந்தார்.
மகாநதியில் இந்த இரு படங்களிலிருந்து மாறுபட்டு கமலின் மாமியாராக குணச்சித்திர வேடத்தில் கலக்கினார். விருமாண்டியில் கமலின் அப்பத்தாவாக கோவில்காளையாக திரியும் விருமாண்டியையே அதட்டி அமர வைக்கிற வேடத்தை வெகு சிறப்பாக செய்திருந்தார்.
கமல் அவரை தொடர்ச்சியாக படங்களில் பயன்படுத்தியிராவிட்டால் இந்த தலைமுறை ரசிகர்களுக்கு அவரது நடிப்பை பார்க்க முடியாமலே போயிருக்கும். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் பாத்திரத்துக்கேற்ப உருவம் கொள்ளும் தண்ணீராக மாறுவதில் எஸ்.என்.லட்சுமி வல்லவர். தமிழின் அண்டர் ரேட்டட் நடிகர்களில் அவரும் ஒருவர்.
தனது பெரிய குடும்பத்தைக் கவனித்துக்கொண்டதாலும், தனிப்பட்ட காரணங்களாலும் கடைசிவரை எஸ்.என்.லட்சுமி திருமணம் செய்து கொள்ளவில்லை. சென்னை சாலிகிராமத்தில் தனது அண்ணன் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். துணிச்சல்காரர், எதையும் தனியாக நின்று சாதிக்கும் குணம் கொண்டவர்.
உடம்பில் தெம்பிருந்தவரை அவரேதான் காரை ஓட்டிச் செல்வார். 2012 ஆம் ஆண்டு, குளியலறையில் வழுக்கி விழுந்து இடுப்பு எலும்பு முறிந்த நிலையில், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வரும்போதே மாரடைப்பால் 2012, பிப்ரவரி 20 ஆம் தேதி அவர் மரணமடைந்தார்.
வறுமையிலிருந்து திறமையால் முன்னேறிய எஸ்.என்.லட்சுமியின் 11 வது நினைவுதினம் இன்று.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema