முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஏவிஎம்முக்காக ’நான் ஆணையிட்டால்’ பட வெளியீட்டை தள்ளி வைத்த எம்ஜிஆர்!

ஏவிஎம்முக்காக ’நான் ஆணையிட்டால்’ பட வெளியீட்டை தள்ளி வைத்த எம்ஜிஆர்!

நான் ஆணையிட்டால் படத்தில் எம்ஜிஆருடன் சரோஜா தேவி

நான் ஆணையிட்டால் படத்தில் எம்ஜிஆருடன் சரோஜா தேவி

சிவாஜி நடித்த இரு படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருக்கின்றன. அப்படி ஒருமுறை இரண்டுமுறை அல்ல 17 முறை நடந்திருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாற்பது, ஐம்பது மற்றும் அறுபதுகளில் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள் பலரும் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களாக இருந்தனர். வீரபாண்டிய கட்டப்பொம்மன், கர்ணன், கப்பலோட்டியத் தமிழன் படங்களை இயக்கிய பி.ஆர்.பந்துலு ஒரு தெலுங்கர்.

ஐம்பதுகளின் ஆரம்பத்தில் படம் இயக்கத் தொடங்கிய சாணக்யாவும் அடிப்படையில் ஒரு தெலுங்கர். 1956 இல் ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி நடிப்பில் வெளிவந்த காலம் மாறிப் போச்சு, ஜெமினி கணேசன், சாவித்ரி நடிப்பில் 1960 இல் வெளியான புதிய பாதை ஆகியவை இவர் இயக்கியவை.

1964 இல் இவர் தெலுங்கில் ராமுடு பீமுடு படத்தை இயக்கினார். என்டிஆர் நடிக்க, டி.ராமநாயுடுவின் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்தது. இது தெலுங்கில் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில்தான் என்.டிஆர்.முதல்முறை இரு வேடங்களில் நடித்தார். டி.ராமநாயுடு தயாரித்த முதல் படமும் இதுவே. இந்தப் படத்தை தமிழில் எம்ஜிஆரை வைத்து ரீமேக் செய்தார் சாணக்யா. அதுதான் எங்க வீட்டுப் பிள்ளை.

படம் தமிழில் பம்பர் ஹிட்டாக, அடுத்த வருடம் எம்ஜிஆர் நடிப்பில் நான் ஆணையிட்டால் படத்தை தொடங்கினார். ஆர்.எம்.வீரப்பன் கதை எழுத, அவரது சத்யா மூவிஸ் படத்தை தயாரித்தது. சரோஜாதேவி நாயகியாக நடித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு செய்தார்.

நான் ஆணையிட்டால் படம் தயாரிப்பில் இருக்கையில் முதல்முறையாக ஏவிஎம் தயாரிப்பில் படம் நடிக்க கால்ஷீட் தந்தார் எம்ஜிஆர். மொத்தம் 72 தினங்கள். சம்பளம் ரூ. 3 லட்சம். இயக்குனர் ஏ.சி.திரிலோகசந்தர் சொன்ன கதை பிடித்துப்போய் நடிக்க ஒப்புக் கொண்டார். படத்தில் பெரிதாக கதையில்லை, காட்சிகளின் சுவாரஸியத்தில் படம் வெற்றி பெற்றால்தான் உண்டு. அது இயக்குனர் கையில்தான் இருக்கிறது என்று அப்போதே சொன்னார் எம்ஜிஆர். அதுதான் அன்பே வா படம்.

இதில் நாயகியாக ஜெயலலிதாவை ஒப்பந்தம் செய்ய எம்ஜிஆர் கேட்டுக் கொண்டார். ஆனால், சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்தனர். அதேபோல் நாயகியின் தந்தையாக தங்கவேலுவை நடிக்க வைக்கச் சொன்னார் எம்ஜிஆர். மெய்யப்ப செட்டியார் டி.ஆர்.ராமச்சந்திரனை பரிந்துரைக்க எம்ஜிஆர் அதனை ஏற்றுக் கொண்டார். படம் இறுதிக்கட்டத்தை எட்டுகையில் அவர் மேலும் 25 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கேட்க, ஏவிஎம் அதனை தந்தது.

1966 ஜனவரி 14 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு அன்பே வா படத்தை வெளியிட ஏவிஎம் திட்டமிட்டது. அதே நாளில் நான் ஆணையிட்டால் படமும் வெளியீட்டுக்கு தயாரானது. ஏவிஎம் தயாரித்த முதல் வண்ணப் படம் (ஈஸ்ட்டென்ட் கலர்) அன்பே வா. அது பொங்கல் பண்டிகைக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என கருத, எம்ஜிஆர், நான் ஆணையிட்டால் (இது கறுப்பு வெள்ளை படம்) வெளியீட்டை தள்ளி வைத்தார்.

அப்படி 1966, ஜனவரி 14 வெளியாக வேண்டிய நான் ஆணையிட்டால் அன்பே வா படத்தால் 1966, பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியானது. இந்த இரண்டு படங்களிலும் சரோஜாதேவியே நாயகி. அதேபோல் இசை எம்.எஸ்.விஸ்வநாதன். ஒளிப்பதிவு பி.என்சுந்தரம் (அன்பே வா படத்தின் சில காட்சிகளுக்கு மாருதி ராவும் ஒளிப்பதிவு செய்தார்).

சிவாஜி நடித்த இரு படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருக்கின்றன. அப்படி ஒருமுறை இரண்டுமுறை அல்ல 17 முறை நடந்திருக்கிறது. எம்ஜிஆர் நடிப்பில் இரு படங்கள் ஒரே நாளில் வெளியானதில்லை.  1966 இல் வெளியாவதற்கு வாய்ப்பு இருந்தும் நடக்கவில்லை. ஏவிஎம்மின் கோரிக்கையினால் அந்த வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கவில்லை. 1966, பிப்ரவரி 4 வெளியான நான் ஆணையிட்டால்  சமீபத்தில் 57 வது வருட நிறைவை கொண்டாடியது.

First published:

Tags: Classic Tamil Cinema, MGR