முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஏகே 62-ல் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதன் பின்னணியில் அஜித்? புதிய இயக்குநர் யார்? - வெளியான புதிய தகவல்!

ஏகே 62-ல் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதன் பின்னணியில் அஜித்? புதிய இயக்குநர் யார்? - வெளியான புதிய தகவல்!

விக்னேஷ் சிவன் - அஜித் குமார்

விக்னேஷ் சிவன் - அஜித் குமார்

அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகவிருந்த படம் கைவிடப்பட்டுவது உறுதி என தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னணி என்ன? அஜித் படத்தை இயக்கும் அடுத்த இயக்குனர் யார் என்பது குறித்து பார்க்கலாம். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய 62வது படத்தில் அஜித் நடிக்க திட்டமிட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் லைகா நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டது. ஏகே62 என்ற தற்காலிக தலைப்புடன் முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வந்தன. அத்துடன் அந்தப் படத்தின் திரையரங்கு வெளியீட்டுக்கு பிந்தைய ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 75 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது லைகா. இதை அந்த நிறுவனம் பொங்கல் அன்று வெளியிட்டது.

அதேபோல் ஏகே 62 படத்தில் நடிக்க கேத்ரினா கைப், கியாரா அத்வானி, பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஏகே62 படக்குழு கேட்ட தேதியில் அவர்களின் கால்ஷீட் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். மேலும் படத்தின் வில்லனாக அரவிந்த் சாமி, நகைச்சுவை நாயகனாக சந்தானம் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருந்தனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஏகே 62 படத்திற்கு நடிகர்கள் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடைபெற்று வந்தாலும் படத்திற்கான கதைக்கு விக்னேஷ் சிவன் முழு வடிவம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அஜித் வழக்கமாக முழு கதையையும் எப்போதும் கேட்கமாட்டார் என்ற தகவல் உள்ளது. இதை துணிவு படத்தின் இயக்குநர் எச்.வினோத் , தன்னுடைய நேர்காணல்களில் உறுதிபடுத்தியிருந்தார். ஆனால் லைகா நிறுவனத்தினர் விக்னேஷ் சிவனிடம் முழு கதையையும் கேட்டு வந்ததாகவும், ஆனால் அவர் தயார் செய்து கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதேபோன்ற பிரச்னை காரணமாகத்தான் ஏற்கனவே சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் கூட்டணியில் தயாரிக்கவிருந்த படத்தையும் லைகா கைவிட்டிருந்தாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில்தான் அஜித் படத்திற்காக விக்னேஷ் சிவன் - லைகா ஆகியோர் மீண்டும் இணைந்தனர். துவக்கத்தில் இரண்டு தரப்பிற்கு இடையில் சம்பள விவகாரத்தில் சில சிக்கல்கள் இருந்தன. இருந்தாலும் ஒருவழியாக அந்த சிக்கல்கள் முடிவுக்கு வந்து, முதல்கட்ட பணிகள் தொடங்கின. ஆனால் விக்னேஷ் சிவன் முழு கதையையும் தயார் செய்யாதது லைகாவிற்கு அதிருப்தியை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஏகே62 கதை விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்புக்கு எப்போது அழைத்தாலும் நான் வருகிறேன். மற்ற அனைத்து விஷயங்களையும் நீங்கள் பேசி முடிவெடுத்துக்கொள்ளுங்கள் என்று அஜித் தெரிவித்துவிட்டாராம். இதனால் கதை விவகாரத்தில் அவர் தலையிடவில்லை. அவரால் எந்த சிக்கலும் இல்லை என்று படக்குழு தரப்பில் கூறுகின்றனர்.

ஏகே 62 கதை விவகார பிரச்னை ஒருபுறம் இருக்கும் நிலையில், நடிகர் அஜித்,  இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் லண்டனில் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். இந்த நிலையில்தான் படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் பரவி உள்ளன. மேலும் இந்த முடிவு அங்குதான் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏகே 62 படம் கைவிடப்பட்டதை இயக்குனர் தரப்பு உறுதி செய்தாலும்,  லைகா நிறுவனம் தரப்பில் எந்த உறுதியான தகவலையும் கூறவில்லை. இருந்தபோதிலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் லைகா தயாரிக்க இருந்த படம் கைவிடப்பட்டதாகவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக வேறு ஒரு இயக்குநர் அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்குவார் என சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர். அந்தப் பட்டியலில் கே.ஜி.எப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் விஷ்ணுவர்தன் ஆகியோர் உள்ளனர்.

இதில் பிரசாந்த் நீல் படத்தில் நடிக்க அஜித் அதிக ஆர்வம் காட்டுகிறார். ஆனால் அவர் தற்போது 'சலார்' படத்தின் வேலைகளில் இருப்பதால் 2024 ஜூன் மாதத்திற்கு பிறகு அஜித் படத்திற்கு வருவார் என கூறப்படுகிறது.  இதனால் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் படத்தை தொடங்கலாம் என லைகா நிறுவனம் கூறுகிறது.

இருந்தாலும்  பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கலாம் என அஜித் விரும்புகிறார். அவர் வரும் வரை தன்னுடைய உலக பைக் சுற்று பயணத்தை தொடரலாம் எனவும் அஜித் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் அஜித் 62வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

First published:

Tags: Actor Ajith, Director vignesh shivan