ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சாவித்திரியின் சௌபாக்கியவதி படத்தின் சுவாரசிய பின்னணி கதை

சாவித்திரியின் சௌபாக்கியவதி படத்தின் சுவாரசிய பின்னணி கதை

சௌபாக்கியவதி

சௌபாக்கியவதி

பாடல் எழுதுவதற்கு வாய்ப்பு தேடி அலைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு இந்த படத்தின் வசனகர்த்தா ஏஎல் நாராயணனின் சிபாரிசின் பேரில் மொத்த பாடல்களும் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் திரைத்துறை கண்ட காதல் கதைகளில் ஜெமினிகணேசன் - சாவித்திரி காதல் கதை சுவாரசியமானது. சோகமான முடிவை கொண்டதால் காவியத்தன்மையும் இந்த காதலுக்கு உண்டு. ஜெமினிகணேசனும் சாவித்திரியும் இணைந்து நடித்த திரைப்படங்களில் சௌபாக்கியவதி திரைப்படம் முக்கியமானது. இருவரும் காதலின் உச்சத்தில் இருந்த 1957இல் சௌபாக்கியவதி வெளியானது.

சௌபாக்கியவதி திரைப்படத்தின் கதையே சுவாரசியமானது தான். ஆனால் இந்தப் படத்தின் பின்னணி கதை அதைவிட ஆச்சரியங்கள் நிறைந்தது. சௌபாக்கியவதியை ஜம்பன சந்திரசேகர ராவ் இயக்கினார். பெயரில் இருந்தே இவர் ஒரு தெலுங்கர் என்பது தெரிந்திருக்கும். பி ஏ பட்டப்படிப்பை முடித்தவர், பி எட் படிப்பையும் முடித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். தெலுங்கில் நிறைந்த புலமை கொண்டவர். இலக்கிய ஆர்வம் கொண்டு சிறு சிறு நாவல்கள் எழுதி வெளியிட்டு வந்தார். அந்த நாவல்களுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரம் இருந்தது. 'இவ்வளவு சிறப்பாக கதை எழுதுகிற நீ ஏன் சினிமாவில் முயற்சி செய்யக் கூடாது' என்ற நண்பர்களின் தூண்டுதல் காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் உத்தியோகத்தை உதறி தள்ளிவிட்டு சென்னைக்கு புகைவண்டி ஏறினார் ஜம்பன சந்திரசேகர ராவ். முதல் படியே இயக்குனர் தயாரிப்பாளர் என இரட்டைக் கால் வைத்தார் ஜம்பனா. ஆம், அந்தக் காலத்தில் அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை ஜம்பனா என்று தான் அழைப்பார்கள்.

சினிமா தான் இனி எல்லாம் என தீர்மானமான உடன், வாலி சுக்ரீவன் கதையை  திரைப்படமாக்கினார் ஜம்பனா. அவரே படத்தை தயாரித்து இயக்கவும் செய்தார். படம் வெளியாகி பெரிய நட்டத்தை அவருக்கு ஏற்படுத்தியது. அதனால் துவண்டு போகாமல் தெலுங்கில் மேனரிகம் என்ற படத்தை இயக்கினார். அவரே தயாரிப்பு. படம் பாதி வழியில் பணம் என்னும் எரிபொருள் இல்லாமல் தள்ளாடியது. அந்த நேரத்தில் நந்தி பிக்சர்ஸ் கே எம் நாகண்ணா உதவிக்கரம் கொடுக்க முன் வந்தார். ஜம்பனா -  நந்தி ப்ரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் மேனரிகம் தொடர்ந்து வளர்ந்தது. தமிழிலும் அந்தப் படம் குடும்பம் என்ற பெயரில் வெளியாகி ஓரளவு வெற்றியை பெற்றது.

குடும்பம் என்றால் தகராறு இருக்கத்தானே செய்யும். கணக்கு வழக்கு விவகாரத்தில் ஜம்பனாவுக்கும் நாகண்ணாவுக்கும் இடையே முட்டிக்கொண்டது.விஷயம் கோர்ட்டுக்கு போய் இருவரும் கோர்ட் படி ஏறி வந்தனர். இதற்குமேல் யாருடனும் கூட்டணி வைத்து படம் தயாரிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார் நாகண்ணா. அவர் தனியாக ஒரு திரைப்படத்தை தொடங்கினார். அந்த படம் தான் சௌபாக்கியவதி. ஜெமினி கணேசன் சாவித்திரி இணைந்து நடித்தது. இந்தப் படத்தை இயக்கியவர் யார் என்று கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் வேறு யாருமில்லை, நாகண்ணாவுடன் கணக்கு வழக்கு விவகாரத்தில் எதிரியான ஜம்பனா.

சௌபாக்கியவதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதும் இவர்கள் இருவருக்கும் இடையிலான வழக்கு கோர்ட்டில் நடந்து கொண்டுதான் இருந்தது. கோர்ட்டில் வாதியும் பிரதியுமாக இருந்தவர்கள் படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளரும் இயக்குனருமாக இணைந்து பணியாற்றினார்கள். இப்படி  உலக அளவிலேயே ஒரு தயாரிப்பாளர் இயக்குனர் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதில் இன்னொரு வேடிக்கையும் உள்ளது. வழக்கு விஷயமாக கோர்ட்டுக்கு நாகண்ணாவும் ஜம்பனாவும் ஒன்றாக நாகண்ணாவின் காரில் தான் செல்வார்கள் திரும்பி வருவார்கள். காலையில் கோர்ட்டுக்கு சென்று விட்டு அதே காரில் படம்பிடிப்பு தளத்துக்கு சென்று படப்பிடிப்பை மேற்கொள்வார்கள் இப்படித்தான் சௌபாக்கியபடி திரைப்படம் தயாரானது.

பாடல் எழுதுவதற்கு வாய்ப்பு தேடி அலைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு இந்த படத்தின் வசனகர்த்தா ஏஎல் நாராயணனின் சிபாரிசின் பேரில் மொத்த பாடல்களும் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பட்டுக்கோட்டையாரின் ஆரம்ப காலகட்டத்தில், ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும்  எழுதிய ஒரு சில படங்களில் சௌபாக்கிய வழியும் ஒன்று அண்ட கதையை எழுதினால் அது இன்னொரு சுவாரசியமான பின்னணி கதையாக அமையும்.

Also read... துணிவு படம் வெற்றியடைய வேண்டி பழநிக்கு பாதயாத்திரை சென்ற அஜித் ரசிகர்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment