முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அட்வைஸ் கொடுத்த சிவாஜி.. நடிகர்கள் பின்னால் அலையாதே என்று சொன்ன ’சினிமா பைத்தியம்’ படம்!

அட்வைஸ் கொடுத்த சிவாஜி.. நடிகர்கள் பின்னால் அலையாதே என்று சொன்ன ’சினிமா பைத்தியம்’ படம்!

கமல்

கமல்

தமிழில் ஜெய்சங்கருடன் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, கே.பாலாஜி, செந்தாமரை, சகுந்தலா, பீம்சிங், பி.மாதவன் உள்ளிட்டோர் கௌரவ வேடத்தில் தோன்றினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் 1963-ல் சத்யஜித் ரே-ன் வங்க மொழிப் படத்தில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 15. அதன் பிறகு ஒருசில குறும்படங்களில் நடித்தவர், 1971 இல் நடிகர் உத்தம் குமாரின் படத்தில் சிறிய வேடம் ஒன்றில் தோன்றினார். சத்யஜித் ரே ஏற்படுத்திய பாதிப்பால் புனேயில் உள்ள ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவில் சேர்ந்த ஜெயா பச்சன், நடிப்பில் கோல்ட் மெடல் வாங்கினார். அதனைத் தொடர்ந்து ரிஷிகேஷ் முகர்ஜியின் குடி (Guddi) படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். குடியில் ஜெயா பச்சன் பள்ளி செல்லும் மாணவி.

பிரபல நடிகர் தர்மேந்திரா என்றால் உயிர். திரையில் அவர் நிகழ்த்திக் காட்டும் சாதனைகளை அப்படியே நம்புகிறவர். நிஜத்திலும் அவரால் சினிமாவில் செய்யும் சாகசங்களை செய்ய முடியும் என்று நம்புகிறவர். சுருக்கமாகச் சொன்னால் நமது ரஜினி, விஜய், அஜித் ரசிகர்களைப் போல கண்மூடித்தனமான பக்தி கொண்டவர்.

ஜெயா பச்சன் மும்பையில் அண்ணனின் வீட்டில் தங்கி இருக்கையில் அண்ணியின் தம்பி அவரிடம் தனது காதலை சொல்வார். அப்போதுதான் வீட்டாருக்கு ஜெயா பச்சனின் தர்மேந்திரா பைத்தியம் முற்றிப் போயிருப்பது தெரிய வரும். மணந்தால் தர்மேந்திரா என்று ஜெயா பச்சன் ஒற்றைக்காலில் நிற்க, அவருக்கு உண்மையை புரிய வைப்பதற்காக அந்தக் குடும்பம் முயற்சி எடுக்கும். தர்மேந்திராவின் நண்பர் மூலமாக அவரை தொடர்பு கொண்டு, ஜெயா பச்சனின் கட்டற்ற காதலை விளக்கி, சினிமா வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு என்பதை புரிய வைக்க கேட்டுக் கொள்வார்கள். தர்மேந்திராவும் ஒப்புக் கொள்வார். சினிமாத்துறையை நெருங்கிப் பார்க்கும் ஜெயா பச்சனுக்கு அதிலுள்ள போலித்தனமும், பகட்டும், வலிகளும் தெரிய வரும். சினிமா வேறு, நிஜ வாழ்க்கை வேறு என்பதை புரிந்து கொள்வார்.

தர்மேந்திரா மீதான அவரது மதிப்பு உயரும். அவரும் எல்லோரையும் போல ஒரு மனிதர் என்பதை புரிந்து கொண்டு, அண்ணியின் தம்பியை மணக்க சம்மதிப்பார். நடிகர்களை சூப்பர் ஹீரோக்களாகக் கருதி தெருவிலும், இணையத்திலும் சண்டையிடும் சினிமா பைத்தியங்களை தெளிய வைக்க இதுபோன்ற திரைப்படங்கள் அடிக்கடி வரவேண்டும். அந்தக் காலத்தில் குடி படத்தை தமிழில் சினிமா பைத்தியம் என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இந்தியில் ஜெயா பச்சன் நடித்த வேடத்தில் ஜெயச்சித்ரா நடித்தார். அதில் அவர் தர்மேந்திரா ஃபேன். இதில் ஜெய்சங்கரின் ரசிகை. இந்தியில் அமிதாப்பச்சன் உள்பட பல முன்னணி நடிகர்கள் குடியில் கௌரவ வேடத்தில் தோன்றினர். தர்மேந்திராவுக்கே கௌரவ வேடம்தான்.

தமிழில் ஜெய்சங்கருடன் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, கே.பாலாஜி, செந்தாமரை, சகுந்தலா, பீம்சிங், பி.மாதவன் உள்ளிட்டோர் கௌரவ வேடத்தில் தோன்றினர். ஜெயச்சித்ராவை மணக்க விருப்பம் கொண்டவராக கமல் நடித்திருந்தார்.

குடி படத்தின் கதையை குல்சார் எழுதியிருந்தார். அதற்கு தமிழுக்கேற்ப ஏ.எஸ்.பிரகாசம் திரைக்கதை, வசனம் எழுதினார். வி.சீனிவாசன் படத்தை இயக்கினார். 1975, ஜனவரி 31 வெளியான சினிமா பைத்தியம் சென்னை தேவி ஸ்ரீதேவி திரையரங்கில் 100 நாள்கள் ஓடியது. நாளை 31 ஆம் தேதியுடன் சினிமா பைத்தியம் வெளியாகி 48 வருடங்கள் நிறைவுபெறும்.

First published:

Tags: Classic Tamil Cinema