இந்தியன் 2 விபத்து - போலீஸ் துன்புறுத்துவதாக கமல் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்தியன் 2 விபத்து - போலீஸ் துன்புறுத்துவதாக கமல் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கமல்ஹாசன்
  • Share this:
‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் முன்பு நடிகர் கமலஹாசன் நடித்துக் காட்டத் தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 20-ம் தேதி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற போது ராட்சத கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் உள்ளிட்ட மூன்று பேர் பலியானார்கள்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மார்ச் 18-ம் தேதி விபத்து நடைபெற்ற ஈவிபி ஃபிலிம் சிட்டிக்கு நேரில் வந்து சம்பவம் தொடர்பாக நடித்துக் காட்ட வேண்டும் என நடிகர் கமலஹாசனுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.


காவல்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நடிகர் கமல்ஹாசன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். அப்போது, நடிகர் கமலஹாசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஸ் பராசரன், ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்த விபத்தில் நடிகர் கமலஹாசனுக்கு எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அவரை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார்.

விபத்து தொடர்பாக காவல்துறையினர் அனுப்பிய சம்மனை ஏற்று ஏற்கனவே கடந்த 3-ம் தேதி ஆஜராகி 3 மணி நேரம் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ள நிலையில், விபத்து நடந்தது தொடர்பாக சம்பவ இடத்திலேயே நடித்து காட்ட வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்புவது அரசியல் பழி வாங்கும் செயல் எனவும் கமலஹாசன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை தரப்பு, விபத்து நடந்த இடத்திற்கு நேரில் வர வேண்டும் என நடிகர் கமலஹாசன் மட்டுமல்ல, விபத்தை நேரில் பார்த்த மற்ற படக்குழுவினருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கதாநாயகன் என்பதால் விசாரணை தொடர்பாக சம்பவ இடத்திற்கு வர நடிகர் கமலஹாசனுக்கு விலக்களிக்க முடியாது எனவும் வாதிடப்பட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு கமல்ஹாசன் வராவிட்டால் அது புலன் விசாரணையை பாதிக்கும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இளந்திரையன், விபத்து தொடர்பாக நடிகர் கமலஹாசன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நடித்து காட்ட அவசியமில்லை என தெரிவித்தார். விசாரணைக்கு தேவைப்பட்டால் விசாரணை அதிகாரி அலுவலத்தில் ஆஜராகலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க: கொரோனா பாதிப்பால் நம் பழக்க வழக்கங்கள் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன - நடிகர் ஜீவா
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading