இந்தியன் 2 பிரச்னை: லைகா - ஷங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

இந்தியன் 2 பிரச்னை: லைகா - ஷங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

இயக்குநர் ஷங்கர்

இந்தியன் 2 பட தயாரிப்பு விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையிலான சமரச பேச்சு தோல்வியடைந்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

  • Share this:
நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் - 2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காண நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கடந்த சனிக்கிழமை ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இரண்டரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், ஜூன் முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்கவில்லை எனவும், ஜூன் மாதத்திலேயே படத்தை முடித்து கொடுக்க தயாரிப்பு நிறுவனம்
வலியுறுத்தியதால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: