Home /News /entertainment /

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை எதிர்த்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்...!

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை எதிர்த்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்...!

பாமகவினர் ஆர்ப்பாட்டம்

பாமகவினர் ஆர்ப்பாட்டம்

Surya's Etharkum Thuninthavan | ரசிகர்கள் திரைப்படத்தை வெளியிடுமாறு  நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்கள். இருந்தபோதிலும் திரைப்படம் திரையிடப்படவில்லை.

  • News18
  • Last Updated :


புதுச்சேரியில் நடிகர் சூர்யாவின் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நடிகர்  சூர்யா நடித்த "எதற்கும் துணிந்தவன்" திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. புதுச்சேரியில் 10 திரையரங்கில் வெளியாகியுள்ளது. திருபுவனை  கிராமத்தில்  சென்ட்ரல் திரையரங்கின் முன்பு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் திரைப்படத்தை வெளியிட கூடாது என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருபுவனை தொகுதி பாமக செயலாளர் விஜயசாரதி, துணைத்தலைவர் பால பழனி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.


திருபுவனை தொகுதியைச் சேர்ந்த பாமக நிர்வாகிகள் வன்னியர் சங்கத்தினர் மற்றும் இளைஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி தியேட்டர் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்து திருபுவனை இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


அப்போது  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்  திரைப்படத்தை திரையிடக் கூடாது அப்படி மீறி திரையிட்டால் நாங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று கூறினார்கள். இதனைத் தொடர்ந்து திரைப்படம் திரையிடுவது சம்பந்தமான நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது. சூர்யாவின் திரைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் சில ரசிகர்கள் திரைப்படத்தை வெளியிடுமாறு  நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்கள். இருந்தபோதிலும் திரைப்படம் திரையிடப்படவில்லை. மேலும் தியேட்டர் முன்பு  வைக்கப்பட்டிருந்த சூர்யா பேனரை போராட்டக்காரர்கள் அகற்றி சென்றனர். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு காட்சியை மட்டும் ரத்து செய்தனர். இதன்பின் மற்ற காட்சிகள் வழக்கம் போல் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் அரை மணிநேரம் பரபரப்பு காணப்பட்டது.


சூர்யா நடித்து, கடந்த ஆண்டு வெளியான படம் ஜெய் பீம். இந்த படத்தில் வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக பாமக திடீரென எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து படத்தில் சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டன. அதே சமயம், எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் ஜெய் பீம் படம் எடுக்கப்படவில்லை என சூர்யா விளக்கம் கொடுத்திருந்தார். அதை ஏற்க மறுத்த பாமகவினர் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி வந்தனர்.




இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் திரைக்கு வந்துள்ளது. முன்னதாக கடலூரில் எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பாமக சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தியேட்டர் அதிபர்கள் இந்த படத்தை வெளியிடக் கூடாது என பாமக சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். குறிப்பாக வன்னியர் மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காதவரை அவரது படத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என பாமக சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Suriya, PMK, Pondicherry

அடுத்த செய்தி