இசைஞானி என்று தமிழ் மக்களால் போற்றப்படும் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்த இளையராஜா, 1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அன்னக்கிளி திரைப்படத்தில் அவரது இசையில் எஸ். ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா" என்ற பாடல் மிகப் பிரபலமானதாக அமைந்தது.
அன்றைய காலகட்டத்தில் இந்தி திரையுலகின் மெல்லிசையை நோக்கிச் சென்ற தமிழ்நாட்டு மக்களின் செவிகளை மீண்டும் தமிழ்ப் பாடல்களைக் கேட்க வைத்த பெருமை இளையராஜாவையே சேரும்.
நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கர்நாடக சங்கீத இசையிலும் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்திய இளையராஜா, சிம்பொனி வரை தொட்டு "மேஸ்ட்ரோ" வாக உருவெடுத்தார்.
இசையோடு தொழில்நுட்பத்தையும் ஒருசேர சங்கமித்து பணியாற்றிய இளையராஜா, 1986 ஆம் ஆண்டில், விக்ரம் படத்தில், கணினி மூலம் திரைப்படப் பாடல்களைப் பதிவு செய்த முதல் இந்திய இசையமைப்பாளர் ஆவார் .
இளையராஜாவுக்கு இதுவரை ஐந்து தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 1985ம் ஆண்டு வெளியான சாகர சங்கமம் தெலுங்கு படத்திற்காக அவர் முதல் முறையாக தேசிய விருது பெற்றார்.
திரைப்படங்களை கடந்தும் அவரது இசைப்பணி நீண்டதற்கு சாட்சியாக HOW TO NAME IT மற்றும் Nothing But Wind ஆகிய இரண்டு ஆல்பங்களே போதும்.
ஜனனி, ஜனனி போன்ற பாடல்களுக்கு மனமுருக இசையமைத்த இளையராஜா மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு இசைவடிவம் கொடுத்து பக்தர்களை மகிழ்ச்சியுறச் செய்தார்.
இளையராஜா இதுவரை 1000 மேற்பட்ட படங்களில், 5000க்கும் மேற்பட்ட பாடல்களை இசைத்துள்ளார். லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில், சிம்பொனிக்கு இசையமைத்து, அங்கு இசையமைத்த ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற சர்வதேச பெருமையை 1993 ஆம் ஆண்டு பெற்றவர் இளையராஜா.
Also read... இளையராஜாவுக்கு எம்.பி. பதவி... ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!
1981ம் ஆண்டிலேயே தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற இளையராஜா, அதன்பின்னர் இந்திய அரசாங்கத்தால் 2010ல் பத்ம பூஷண் விருதும், 2018ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தன் தொழிலில் சாதனைகளுடன் பயணம் செய்த இளையராஜாவின் வாழ்க்கையில் அரசியல் சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டே வந்தன.
அந்தவகையில் அண்மையில் பி.ஆர்.அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட 'அம்பேத்கர் அன்ட் மோடி' என்ற புத்தகத்திற்கான அணிந்துரையை இளையராஜா வழங்கியது அவருக்கு ஒருபுறம் விமர்சனத்தையும், மறுபுறம் ஆதரவையும் பெற்றுத்தந்தது.
பிரதமர் மோடியின் நலம் விரும்பியாக இளையராஜா இருப்பதாக இளையராஜா மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இப்படியான பல்வேறு விமர்சனங்கள் மற்றும் விருதுகளை கடந்து இன்று மாநிலங்களவையில் புதிய மெட்டு அமைக்க தயாராகி வருகிறார் தமிழகத்தின் ராக தேவன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.