நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு செய்ய வேண்டிய மரியாதையை எந்த அரசும் செய்யவில்லை என இசைஞானி இளையராஜா வேதனை தெரிவித்துள்ளார்.
மருது மோகன் எழுதிய "சிவாஜி கணேசன்" என்னும் நூல் வெளியீட்டு சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது. புத்தகத்தை இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட, சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார், பிரபு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முனைவர் மருது மோகன், தனது ஆய்வில் நடிகர் சிவாஜி கணேசன் குறித்து அறிந்துகொண்ட ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். சத்துணவு திட்டத்துக்கு முதன் முதலில் 1 லட்ச ரூபாய் நிதி கொடுத்தது, யானை மொழி அறிந்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் ஆகியவை அதில் அடங்கும்.
“தேவர் மகன்ல ‘போற்றி பாடடி கண்ணே’ பாடல் முடிச்சிட்டு சிவாஜி அண்ணனோட படம் எடுத்துக்கிட்டோம். அப்போ டக்கனு ஒரு முத்தம் குடுத்தார். அதை வாலி சார் பாத்துட்டு பத்மினிக்கு கூட இப்டி ஒரு முத்தம் குடுக்கல உனக்கு குடுத்திருக்கார்னு சொன்னார். அவ்வளவு அன்பு சிவாஜி அண்ணனுக்கு என் மேல” என நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள சிவாஜி கணேசனின் ரசிகர்களை ஒன்று திரட்டி ஒருநாள் முழுவதும் நடிகர் திலகத்தை பற்றி பேச வேண்டும் என்பது தனது ஆசை என்றும் இசைஞானி இளையராஜா தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சிவாஜி அண்ணனுக்கு குதிரையில் அவர் அமர்ந்திருப்பது போல் வெள்ளி சிலை பரிசளிக்க வேண்டும் என கேட்டார்கள். அதற்கு ரஜினி, கமல் ஆகியோர் இவ்வளவு தொகை கொடுத்ததாக சொன்னார்கள். அதற்கு நான் மொத்த தொகையையும் கொடுத்துவிடுகிறேன். யார் பெயரும் அதில் இருக்க கூடாது என கூறி மொத்த தொகையையும் கொடுத்துவிட்டேன்.
இதை தம்பட்டம் அடிப்பதற்காக சொல்லவில்லை. அவருக்கு திரை உலகில் யாரும் மரியாதை செய்யவில்லை, எந்த அரசும் மரியாதை செய்யவில்லை. தனி மனிதனாக நான் மட்டும் தான் செய்தேன்” என தெரிவித்தார்.
இறுதியாக நிகழ்ச்சியில் பேசிய இசைஞானி இளையராஜா, நடிகர் சிவாஜி கணேசனுடனான தனது நினைவுகளை பேசிக்கொண்டிருந்த போது உணர்ச்சி மிகுதியில் கண்கலங்கினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema, Ilayaraja, Sivaji Ganesan, Tamil Cinema