முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Ilaiyaraaja 78 : எந்நாளும் கொண்டாடப்பட வேண்டிய இசை பொக்கிஷம் இளையராஜா!

Ilaiyaraaja 78 : எந்நாளும் கொண்டாடப்பட வேண்டிய இசை பொக்கிஷம் இளையராஜா!

இளையராஜா

இளையராஜா

தமிழ்சினிமாவில் 44 ஆண்டுகளுக்கு மேலாய் இசை ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ள இளையராஜாவின் 78 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது அவர் குறித்து ஒரு சிறப்பு தொகுப்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ் சினிமாவின் இசை வரலாற்றை இளையராஜா எனும் பெயர் இல்லாமல் எழுதி விட முடியாது. ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாய் தமிழ் ரசிகர்களின் உணர்வுகளோடு கடந்துவிட்டது இவரது நாதம். காதல், நட்பு, பகை துரோகம், ஏக்கம் என எல்லா உணர்வுகளையும் இவரது இசை தலைமுறைகளைத் தாண்டி கடத்திக் கொண்டே இருக்கிறது.

1943ஆம் ஆண்டு பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜாவுக்கு அவரது தாயார் சின்னாத்தாய் தாலாட்டாய் இசையை ஊற்றித்தான் வளர்த்தார். சின்னத்தாய் பாடிய தாலாட்டு பாடல் தான், ஆயிரம் தாமரை மொட்டுக்களை பின்னாட்களில் ரசிகர்களின் மனங்களில் வருடியது.

தனது சகோதரருடன் இணைந்து இடதுசாரி கட்சிக் கூட்டங்களில் ஊர் ஊராக சென்று மக்களின் இன்னல்களை தனது சொந்த வரிகளில் கட்சி மேடைகளில் பாடியது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள இசையை இளையராஜாவிற்கு கைவந்த கலையாக மாற்றியது.

இளையராஜாவின் முதல் சினிமா வாய்ப்பான அன்னக்கிளி படத்தின் பாடல் பதிவின்போது, பவர் கட் ஆன நிகழ்வை இன்றும் தமிழகத்தில் துரதிஷ்டமாக நடைபெறும் செயல்களுக்கு பாசிட்டிவ் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஆறுதலாக அடிக்கடி யாரேனும் ஒருவர் கூற கேட்பது இளையராஜாவின் வாழ்க்கை என்பது மக்களோடு எவ்வளவு ஒன்றிப் போய் விட்டது என்பதை உணர்த்துகிறது.

ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாய் இடைவிடாமல் இசைத்து 1000 படங்களுக்கு 7 ஆயிரம் பாடல்களை வழங்கிருக்கும் இளையராஜாவின் இசை ஆற்றலுக்கு நிகராய் உலகின் வேறெந்த இசையமைப்பாளர்களும் எளிதில் சுட்டிக்காட்டி விட முடியாது. திரை இசை மட்டும் அல்லாது, தன் சிம்பொனி இசையாலும் உலக மக்களை வியக்க வைத்தவர் இளையராஜா.

இதனாலேயே அமெரிக்க நாளிதழான டேஸ்ட் ஆப் சினிமா, இதுவரை தோன்றிய இசையமைப்பாளர்களின் உலகின் தலை சிறந்த 25 இசை மேதைகளில் இளையராஜாவிற்கு ஒன்பதாவது இடம் வழங்கி கௌரவித்தது. இதே போல 2013ம் ஆண்டு இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக CNN - IBN தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் இந்திய சினிமாவின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் முதன்மையானவராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டார்.

பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வென்றுள்ள இளையராஜாவிற்கு ஐந்து முறை தேசிய விருதையும் வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது. மாநில அரசுகள் வழங்கும் விருதுகளும், பிலிம்பேர் விருதுகளும் இளையராஜாவை கௌரவப்படுத்த நீண்டு கொண்டே போகிறது.

‘அவரும் நாங்களும்!’ - இளையராஜா பாடல்களில் ஒரு காதல் கதை!

உலக இசை வரலாற்றில் எந்நாளும் கொண்டாடப்பட வேண்டிய இசை பொக்கிஷமாக இளையராஜாவை தமிழ் சமூகம் பெற்றதற்கு என்றென்றும் பெருமை கொள்ளும் தமிழர்கள் அவரது இசைபோல என்றாலும் அவர் வாழ வேண்டும் என வாழ்த்தி நிற்கிறனர்.

First published:

Tags: Ilayaraja, Ilayaraja birthday date, Music director ilayaraja