எங்களுடையது காதல் திருமணம்… ஆனால் ஏனோ தெரியவில்லை, எல்லோரும் சொல்வதைப் போல, காதலிக்கும் போது இருந்த இணக்கம், இப்போது இல்லை. எல்லாத்துக்கும் வாக்குவாதம், எதற்கெடுத்தாலும் சண்டை. நாங்கள் ’மேட் ஃபார் ஈச் அதர்’ என பொய்யெல்லாம் சொல்ல விரும்பவில்லை. எண்ணிலடங்கா முரண்களின் தொகுப்பு என்பது தான் சரியாக இருக்கும். ஆனால் எத்தனை பெரிய கோபத்தையும், சண்டையையும் தீர்த்து வைக்க எங்களுக்கு ஒருவர் இருக்கிறார். ஆம்! அவர் தான் இசைஞானி இளையராஜா. என்னையும் என் கணவரையும் இணைக்கும் ஒரே புள்ளி இளையராஜா பாடல்கள் மட்டும் தான்!
சொல்லப்போனால் நாங்கள் காதலிக்க தொடங்கியதற்கு காரணமே அவர் தான். கல்லூரிக்கு எங்கள் கிராமத்து பேருந்தில் செல்வது வழக்கம். அந்த பேருந்தில் பாடும், இளையராஜா பாடல்களுக்காகவே ஞாயிற்றுக் கிழமையும் காலேஜ் இருக்கக்கூடாதா எனத் தோன்றும். அந்தப் பாடல்களில் என்னை மறந்து, எனக்கு மட்டும் கேட்கும்படி எப்போதாவது வாயசைப்பேன். இதை கவனித்து வந்த என் கணவர், ஒரு நாள் பஸ்ஸில் இருந்து இறங்கிச் செல்கையில் என்னிடம் வந்து, ‘இளையராஜா பிடிக்குமோ?’ என்றார். ‘ஆமாம்’ என்றது தான் தாமதம், அன்றிலிருந்து பேசினோம், பேசினோம், பேசிக் கொண்டே இருந்தோம். எங்கள் பேச்சின் எல்லாமுமாய் இளையராஜா இருந்தார். ஒருபுறம் அவர் நிறைய படங்களுக்கு இசையமைத்து தொழில் வாழ்க்கையில் முன்னேற, மறுபுறம் நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள், காதலர்கள் என எங்களது தனிப்பட்ட வாழ்க்கையும் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்தது. அது 2000-ன் தொடக்கம், எங்கள் நண்பர்கள் எல்லோரும் ரஹ்மானை புகழ்ந்துக் கொண்டிருக்க, நாங்கள் இருவர் மட்டும் எப்போதும் ராஜாவை சொல்லி சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வோம்.
கல்லூரி முடித்து அவர் வெளியூருக்கு வேலைக்கு சென்று விட, நான் உள்ளூரில் இருந்த பிரபல கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். இப்போது போல அப்போது செல்ஃபோன் கிடையாது. ஞாயிற்றுக் கிழமை மதியம் அவர் ஃபோன் செய்வார். அவருடன் பேசுவதற்காகவே வீட்டில் இருக்கும் மற்றவர்களை தியேட்டருக்கு, உறவினர் வீட்டுக்கு, மார்க்கெட்டுக்கு என ஒவ்வொரு வாரமும் திட்டம் தீட்டி அனுப்புவதற்குள் அப்பப்பா… அந்த பதட்டத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாது. ஃபோனில் பேசும் 30 நிமிடத்தில், 1 நிமிடம் வழக்கமான நலம் விசாரிப்புகள். மீதி 29 நிமிடங்களும் ராஜாவும், அவரது பாடல்களும் தான் எங்களை ஆக்கிரமித்திருப்பார்கள்.
’உனக்கு தான் விஜய் பிடிக்கும்ல, கண்ணுக்குள் நிலவுன்னு ஒரு படம். இளையராஜா தான் மியூஸிக்… கேட்டீயா?’
‘அதெப்படி கேக்காம இருப்பேன். ’ஒருநாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது’, ’ரோஜா பூந்தோட்டம்’ பாட்டெல்லாம் எனக்கு ஃபேவரிட் தெரியுமா?’
’’ஹேராம்’ன்னு கமல் நடிச்சிருக்க படம், அதுல ’இசையில் தொடங்குதம்மா’ன்னு ஒரு பாட்டு. ரொம்ப அபூர்வமா பயன்படுத்துற ’விவாஹப்ரியா’ ராகத்துல போட்டுருக்காரு. கேக்க கேக்க அவ்ளோ சுகமா இருக்கு’
இப்படித்தான் எங்கள் உரையாடல் இருக்கும். நாட்கள் செல்ல, இருவர் வீட்டிலும் காதலை சொல்லி சம்மதம் வாங்கிய ஒரு மாலை வேளையில், ’உனக்கு ஏன் அவரைப் பிடிச்சிருக்கு?’ என அம்மாவும், தங்கையும் ஆர்வத்துடன் கேட்டதற்கு, ‘அவருக்கு இளையராஜாவை பிடிச்சிருக்கு’ என்று நான் சொன்ன பதிலை அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
திருமணத்துக்குப் பிறகு ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்பது போல நாட்கள் அத்தனை அழகாக இருந்தது. இந்தப் பாடலை ’கல்யாணி’ ராகத்தில், மேற்கத்திய இசையுடன் சேர்த்து புதுவித அனுபவத்தைக் கொடுத்திருப்பார் இளையராஜா. பின்னர் இருவருக்குள்ளும் இருந்த மிருகங்கள் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கத் தொடங்கின. முதலில் அவ்வப்போது வரும் சண்டை, பின்னர் அடிக்கடி வந்துப் போனது. அப்போதெல்லாம் எங்கள் பிரச்னையை தீர்த்து வைக்கும் குடும்பப் பெரியவராக ராஜா இருந்தார்.
இரண்டாண்டுகள் கழித்து எங்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். ’வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே’ என அவளை வரவேற்கவும் எங்களுக்கு இளையராஜா தான் துணையிருந்தார். அவளை தூங்க வைக்க ராஜாவின் இசையில், ’பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ’ என யேசுதாஸ் தாலாட்டு பாடினார். ’அழகிய கண்ணே உறவுகள் நீயே’ என மகளை கொஞ்சுவதற்கும் ராஜா தான்!
எப்போதும் போல வந்த சண்டையால், நான் ஏன் பேச வேண்டும் என்ற ஈகோவில் நானிருக்க, அந்த நேரம், ‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ’மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட’, ’பூங்கதவே தாழ் திறவாய்’, ’சங்கத்தில் பாடாத கவிதை’, 'தென்றல் வந்து தீண்டு போது’, ’நீ பாதி நான் பாதி கண்ணே’ என அவர் ஒலிக்க வைத்த ராஜா பாடல்கள், புயலுக்குப் பின் நிலவியிருந்த அமைதியை தென்றலாய் மாற்றின.
’இன்னைக்கு க்ளைமேட் நல்லாருக்கு, சீக்கிரம் மழை வரும் போல’ என்றவாறு, ’கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’, ’கேளடி கண்மணி பாடகன் சங்கதி’, ’பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’, ’நிலாவே வா’, ‘தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு’, 'பருவமே புதிய பாடல் பாடு’, ’தாலாட்டுதே வானம்’ என இளையராஜா பாடல்களோடு தான், அந்த மழைக்கால பொழுதுகளையும் கொண்டாடியிருக்கிறோம்.
சண்டை ஏதும் இல்லாத சுமூகமான நாட்களிலும் எங்களுக்கு பெருந்துணை ராஜா தான். ‘எனக்குப் பிடித்தப் பாடல்’, ’எளங்காத்து வீசுதே’, ’ஒரு இனிய மனது’, ’செந்தாழம் பூவில்’, ’தென்றல் வந்து என்னை தொடும்’, ’இளைய நிலா பொழிகிறதே’ என அந்தப் பட்டியல் நீளும்.
எத்தனைப் பெரிய சண்டைகளுக்குள்ளும், காதல் என்ற ஒன்று இருப்பதால் தானே இங்கே பலரால் வாழ்க்கை எனும் வண்டியை ஓட்ட முடிகிறது. அதற்கு நாங்களும் விதிவிலக்கல்ல… ’ஒன்ன விட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல’, ’மயங்கினேன் சொல்ல தயங்கினேன்’, ’என் இனிய பொன் நிலாவே’, ’இளமை எனும் பூங்காற்று’, ’சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ’பனி விழும் இரவு’, ’சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது’ என எங்களுக்கிடையேயான அன்பை பகிர்ந்துக் கொள்ளவும் ராஜா தான்!
பெரும் வேலைப்பளுவுக்கு இடையே இரவு நிம்மதியாக தூங்க, ’கண்ணே கலைமானே’, ’பூவே செம்பூவே’, ’நிலவு தூங்கும் நேரம்’, ’தேனே தென்பாண்டி மீனே’ என எங்களுக்காக ராஜா ஓவர் டைம் பார்க்கிறார்.
எங்களின் விடியல் ‘புத்தம் புது காலை’ என ராஜாவிலிருந்தே தொடங்குகிறது. ஆம்! எங்கள் வீட்டு ரேஷன் கார்டில் மட்டும் தான் அவர் பெயர் இல்லை!
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ilaiyaraja, Ilayaraja, Ilayaraja birthday date, Ilayaraja songs