இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவியேற்றார். இதனையடுத்து அவருக்கு திரையுலக மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில் இளையராஜா பேசியிருப்பதாவது, ''மாண்புமிகு அமைச்சர் அவர்களே, நீங்கள் பதவியேற்கும் இந்நாளில் நான் வாழ்த்துவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. முக்கியமாக நான் சொல்ல விரும்புவது, ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் என வள்ளுவர் சொன்னதைப் போல உங்கள் அம்மாவுக்கு தான் நீங்கள் பதவியேற்பது மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
இதனை வள்ளுவர் மிக அழகாக சொல்லியிருக்கிறார். இது நிஜமாக நடக்கும்போது உங்கள் அம்மாவுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என நான் எண்ணிப் பார்க்கிறேன். நானும் மகிழ்கிறேன். நீங்கள் மக்களுக்கு சேவை செய்ய களத்தில் இறங்கியிருக்கிறீர்கள். ஆனால் அமைச்சராக பதவியேற்பதால் உங்கள் பொறுப்பு அதிகமாகிறது. இந்த பொறுப்பை நீங்கள் சரிவர நிறைவேற்ற வேண்டும். மக்களிடம் நல்ல பெயரும் புகழும் அடைய வேண்டும் என்பது எனது விருப்பம். இதனை நிறைவேற்றுவீர்கள் என நான் நம்புகிறேன்'' என இளையராஜா தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 15, 2022
உதயநிதி நடித்த 'சைக்கோ' படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் விழாவில் இளையராஜா கலந்துகொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார். பின்பு பேசிய அவர், ''பெருமைமிகு காசி நகரத்திலே தமிழ் சங்கமம் விழா நடத்த வேண்டும் என்ற எண்ணம் நமது பிரதமரிடத்தில் எப்படி தோன்றியது என்பதை நான் வியந்து வியந்து எண்ணி கொண்டிருக்கிறேன்'' என்று பேசினார்.
இதனால் இளையராஜா பாஜக ஆதரவாளர் என சமூக வலைதளங்களில் ஒரு சிலரால் விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில் உதயநிதிக்கு அவர் வாழ்த்து தெரிவித்திருப்பது மக்களிடையே கவனம் பெற்றிருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.