மலையாள திரையுலகம் அதிகம் எதிர்பார்த்த படங்களில் ஒன்று ஹிருதயம். வினீத் சீனிவாசன் இயக்கத்தில் ப்ரணவ், கல்யாணி நடித்த இந்தப் படம் பலவகைகளில் மலையாள திரையுலகுக்கு முக்கியமானது.
மோகன்லாலின் வளர்ச்சியில் திரைக்கதையாசிரியரும், நடிகரும், இயக்குனருமான சீனிவாசனுக்கும், இயக்குனர் ப்ரியதர்ஷனுக்கும் பங்குண்டு. ப்ரியதர்ஷன் மோகன்லாலை வைத்து 25 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். ஆரம்ப காலத்தில் சீனிவாசனின் திரைக்கதையில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் பல படங்களில் நடித்துள்ளார். இதில் சீனிவாசன் நடிக்கவும் செய்திருப்பார். இவர்கள் இருவரின் காம்பினேஷன் மலையாள சினிமாவில் புகழ்பெற்றது.
இப்போது ஹிருதயம் படத்திற்கு வருவோம். இந்தப் படத்தை இயக்கியிருக்கும் வினீத், சீனிவாசனின் மகன். ஹிருதயத்தில் நாயகனாக நடித்திருக்கும் ப்ரணவ் மோகன்லாலின் மகன். நாயகி கல்யாணி ப்ரியதர்ஷனின் மகள். முன்பு ப்ரியதர்ஷனின் மனைவி லிஸி மோகன்லாலுடன் நடித்துள்ளார். ப்ரியதர்ஷன் இயக்கிய சித்திரம் படத்திலும் மோகன்லாலுக்கு லிஸிதான் ஜோடி. இப்போது ப்ரியதர்ஷனின் மகள் மோகன்லால் மகனுக்கு ஜோடி.
முழுக்க வாரிசுகளால் உருவாக்கப்பட்ட ஹிருதயம் முதல்வார இறுதியில் கேரளாவில் 5.79 கோடிகளை வசூலித்துள்ளது. கர்நாடகாவில் 85 லட்சங்களையும், தமிழகத்தில் 25 லட்சங்களையும் வசூல் செய்துள்ளது. பிற மாநிலங்களில் சுமார் 50 லட்சங்கள். ஆக, இதன் வார இறுதி இந்திய வசூல் 7.39 கோடிகள். இந்த பெருந்தொற்று காலத்தில் இது சாதனை வசூல்.
மோகன்லாலின் மகன் ப்ரணவ் நடித்த ஒரு படமும் இதுவரை வெற்றி பெற்றதில்லை. முதல்முறையாக ஹிருதயத்தில் வெற்றியை ருசித்திருக்கிறார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.