திண்டுக்கல்லில் வலிமை படத்திற்கு கூடுதல் கட்டணம் கேட்பதாக கூறி அஜித் ரசிகர்கள் திரையரங்கை பூட்டு போட்டு பூட்டி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் வருகின்ற இருபத்தி நான்காம் தேதி அஜித் நடித்த வலிமை படம் ரிலீசாக உள்ளது. திண்டுக்கல்லில் ரவுண்ட் ரோட்டில் உள்ள ராஜேந்திரா திரையரங்கில் வலிமை படம் திரையிடப்பட உள்ளது.
இருபத்தி நான்காம் தேதி அதிகாலை ரசிகர் மன்றம் சார்பில் திரையிடப்பட வேண்டும் என மன்றம் சார்பில் திரையரங்கு மேலாளரிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மேலாளர் கூடுதலாக கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவருடன் வாக்குவாதம் செய்தனர்.
இதனையடுத்து ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் திரை வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் திரையரங்கிற்கு பூட்டு போட்டு ரகளையில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் ரசிகர்களை சமாதானம் செய்து அனுப்ப முயன்றனர். ஆனால் ரசிகர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து ரசிகர்கள் வெளியேற்றப்பட்டு திரையரங்கத்தை பூட்டி இருந்த பூட்டை காவல்துறையினர் திறந்தனர். இதனையடுத்து திரையரங்கு முன்பு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.