Home /News /entertainment /

Exclusive : தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் உதவியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Exclusive : தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் உதவியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள்

தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள்

நடிகர் சிம்பு பத்து தல படப்பிடிப்பிற்கு 21 உதவியாளர்களுடன் வந்தார் எனவும், அதற்கான ஒரு நாள் செலவு 80 ஆயிரம் வரை இருக்கலாம் என சுட்டிக்காட்டுகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
திரைத்துறையில் நடிகர்,  நடிகை உள்ளிட்டவர்களின்  உதவியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் பேசும் பொருளாக உருவெடுத்துள்ளது.  தமிழ் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகள் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து பார்க்கலாம்.

தெலுங்கு திரையுலகில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட அவர்களின் சம்பளங்களை முறைப்படுத்த வேண்டும், ஓ.டி.டி வெளியீட்டில் புதிய முறை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஒரு மாத காலமாக வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.  இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இந்த நிலையில் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் வழங்க மாட்டார்கள் சமந்தப்பட்டவர்களே கொடுக்க வேண்டும்  என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.

இந்த முறையை தமிழில் கொண்டு வர வேண்டும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே கோரிக்கை எழுந்தது.  ஆனால் நடைமுறைக்கு வரவில்லை.

நடிகர், நடிகைகள் தங்களுக்கு என தனி Hair Stylist, Make Up Man, Touch Up Boy, assistant என சுமார் 8 பேர் வரை கொண்ட குழுவை பயன்படுத்துகின்றனர் என திரைத்துறையில் கூறுகின்றனர். அதிலும் சிலர் மும்பையில் இருந்து குழுவை கொண்டு வருகின்றனர் என வேதனை தெரிவிக்கின்றனர். இவர்கள் அல்லாமல் Bouncers என அழைக்கப்படும் தனியார் பாதுகாவலர்கள் தனி.

என்னது..?! மகாலட்சுமிக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசமா?? தயாரிப்பாளர் ரவிந்தர் விளக்கம்…

தமிழ் சினிமாவில் தற்போதையை நிலவரப்படி நாள் ஒன்றுக்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் உதவியாளர்களுக்கு 80 ஆயிரம், நயன்தாரா  உதவியாளர்களுக்கு 65 ரூபாய் வழங்கப்படுகிறது. சமந்தா மற்றும் ராஷி கண்ணா உதவியாளர்களுக்கு 60 ஆயிரம், கீர்த்தி சுரேஷ் உதவியாளர்களுக்கு 55 ஆயிரம், த்ரிஷா உதவியாளர்களுக்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை  வழங்கப்படுகின்றது என கூறுகின்றனர்.

இவர்களில் இருந்து நடிகை நித்யா மேனன் வேறுபடுகிறார் என பாராட்டுகின்றனர். அவர் தன்னுடைய உதவியாளர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கேட்பதில்லை என தெரிவிக்கின்றனர்.

இது தவிர மும்பையில் இருந்து உதவியாளர்கள் வந்தால் நட்சத்திர விடுதியில் தங்கும் செலவு, கார் வாடகை உள்ளிட்டவை கூடுதல் செலவு.

‘திருமணம் திருமணம் என பிள்ளைகளை பெற்றோர் டார்ச்சர் செய்யாதீர்கள்…’ - சிம்பு பேச்சு

நடிகர்களில் ரஜினிகாந்தின் உதவியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 75 ஆயிரம், விஜய்  உதவியாளர்களுக்கு 50 ஆயிரம், தனுஷ் உதவியாளர்களுக்கு 50 ஆயிரம் வழங்கப்படுகிறது என தெரிவிக்கின்றனர். மேலும் நடிகர் சிம்பு பத்து தல படப்பிடிப்பிற்கு 21 உதவியாளர்களுடன் வந்தார் எனவும், அதற்கான ஒரு நாள் செலவு 80 ஆயிரம் வரை இருக்கலாம் என  சுட்டிக்காட்டுகின்றனர்.

இவர்களை தவிர, நடிகர் சமுத்திரகனி உதவியாளர்களுக்கு 35 ஆயிரம், அதர்வா உதவியாளர்களுக்கு 27 வரை வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

சூர்யா, கார்த்தி, விக்ரம், சிவகார்த்திகேயன், விஷால் ஆகியோர் தங்களுடைய மேக்அப் மேன் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் வரை மட்டும் பெற்றுக்கொள்கின்றனர்.

இதில் அஜித் வலிமை படத்துடன் உதவியாளர்களை நிறுத்திவிட்டார். வலிமை படம் வரை உதவியாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுத்துள்ளார். ஆனால் தற்போது நடித்து வரும் தன்னுடைய 61-வது படத்திற்கு தயாரிப்பு நிறுவனம் நியமித்த உதவியாளர்களையே பயன்படுத்துகிறார் என கூறுகின்றனர்.

உதவியாளர்கள் சம்பளம் தவிர சில நடிகர், நடிகைகள் தனி Costume Designer-களை நியமிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு படத்திற்கு 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது என தெரிவிக்கிறார்கள்.

நடிகர், நடிகைகளில் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் செலவால் ஒரு படத்திற்கு ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி வரை கூடுதல் செலவாகிறது என தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்த முறையை நடைமுறைக்கு கொண்டுவந்ததற்கு  தெலுங்கு திரையுலகினர்தான் காரணம். ஆனால் இன்று அவர்கள்தான் இதே காரணத்திற்காக வேலை நிறுத்தம் செய்துள்ளனர் என சுட்டிக்காட்டுகின்றனர் என தமிழ் திரைத்துறையில் உள்ளவர்கள். இருந்தாலும் தெலுங்கில் தற்போது அறிவிக்கப்பட்டிருப்பது நடைமுறைக்கு வந்தால் மகிழ்ச்சி. அது தமிழிலும் தொடர வாய்ப்பு உள்ளது என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்காக செந்தில்ராஜா.
Published by:Musthak
First published:

Tags: Kollywood, Tamil Cinema

அடுத்த செய்தி