Home /News /entertainment /

மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 இறுதி பாகம் எப்படி இருக்கிறது?

மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 இறுதி பாகம் எப்படி இருக்கிறது?

மணி ஹெய்ஸ்ட்

மணி ஹெய்ஸ்ட்

Money Heist Season 5 Part 2 : மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 இறுதி பாகம் விமர்சனம்..

இந்த பூவுலகில் அதிகம் பேர் பார்த்த வெப் தொடர்களில் ஒன்று மணி ஹெய்ஸ்ட். இயல்பாகவே ஹெய்ஸ்ட் படங்களுக்கு தனி விறுவிறுப்பு உண்டு. மணி ஹெய்ஸ்டில் நமது அட்ரினலை எகிற வைக்கும்விதமாக காட்சியை கோர்த்து ஒருவித அடிக்ட் மனநிலைக்கு கொண்டு சென்றிருந்தார்கள். அதன் கடைசி சீஸனின் கடைசி வால்யூம்  நேற்று வெளியானது (ஸ்பாய்லர்ஸ் உண்டு. சீரிஸ் பார்க்காதவர்கள் இதற்கு மேல் தொடர வேண்டாம்).

புரபஸரின் டீம் பேங்க் ஆஃப் ஸ்பெயினுக்குள் இருக்க, வெளியே இருக்கும் புரபஸர் போலீஸ் அதிகாரி அலிசியா சியராவிடம் மாட்டிக் கொள்வதுடன் சீஸன் 4 முடிவடைந்தது. சீஸன் 5க்காக ரசிகர்கள் காத்திருந்தனர். சீஸன் 5 ஐ வால்யூம் 1, 2 என பிரித்து வால்யூம் 1 ஐ செப்டம்பர் 3 ஆம் தேதி ஒளிபரப்பினர். பேங்க் ஆஃப் ஸ்பெயினுக்குள் ஸ்பானிஷ் ராணுவத்தின் கொலைகார டீம் உள்ளே நுழைந்து டோக்கியோவை கொலை செய்வது, அலிசியா சியாராவுக்கு வரும் பிரசவ வலியை பயன்படுத்தி அவளது பிடியிலிருந்து புரபஸர் மீள்வது என வால்யூம் 1 ஐ அதிக போர் அடிக்காமல் நகர்த்தினர். வால்யூம் 2 இல் கதையை எப்படி முடிக்கப் போகிறார்கள், நைரோபி, டோக்கியோ போல் இதில் கடைசி பலிகடா யார், ஒருவரா, பலரா, புரபஸர் மற்றும் அவரது டீமால் வெற்றிகரமாக 90 டன் தங்கத்தை கொள்ளையடிக்க முடிந்ததா, இல்லை போலீசிடம் மாட்டிக் கொண்டார்களா.. எக்கச்சக்க கேள்விகள், எதிர்பார்ப்புகள்.
இதையெல்லாம் ஓரளவு வெற்றிகரமாகவே பூர்த்தி செய்திருக்கிறார்கள். முதலில் ஏமாற்றங்கள். அரசு என்ன நினைக்கும், அவர்களின் அடுத்தடுத்த மூவ் என்னவாக இருக்கும் என திட்டமிடும் புரபஸரும் அவரது டீமும், சின்னச் சின்ன விஷயங்களில் கோட்டைவிட்டு பெரும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் சில்லறைத்தனம் இதிலும் தொடர்கிறது.

also read : கிராமத்து பெண்ணாக ராஷ்மிகா - வைரலாகும் புகைப்படங்கள்

குழந்தை பெற்றுக் கொண்ட உடல்ரீதியாக பலவீனமான அலிசியா அப்படித்தான் புரபஸரிடமிருந்து தப்பிக்கிறாள். கொள்ளையடிக்க வந்த இடத்தில் டென்வர், மணிலா, ஸ்டாக்கோமின் முக்கோண காதல், களியாட்டம் எல்லாம் ஜோராக நடக்கிறது. சின்ன சிராய்ப்பு இல்லாமல் மொத்த பேரும் ராணுவத்தின் கஸ்டடிக்குள் வருகிறார்கள். வால்யூம் 1 இல் புத்திசாலித்தனமான திருப்பங்கள் அதிகம் இல்லை. இதில் சில இருக்கின்றன. வங்கியிலிருந்து தங்கம் வெளியே திருடுப்போனது தெரிந்ததும் போலீஸ் தீவிரமாக தேடுகிறது. புரபஸரும் வெளியே இருக்கும் அவரது டீமும் தங்கத்துடன் மாட்டிக் கொள்கிறார்கள். இந்த இடத்தில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பத்தை புத்திசாலித்தனமாக வைத்து விறுவிறுப்பை கூட்டியிருக்கின்றனர்.வால்யூம் 1 இல் வரும் பெர்லினின் எபிசோடை எப்படி இதனுடன் இணைக்கப் போகிறார்கள் என்ற கேள்விக்கு ஆப்டான பதில் இதில் உள்ளது. முக்கியமாக புரபஸர் ஏன் பேங்க் ஆஃப் ஸ்பெயினை கொள்ளையடிக்க தீர்மானிக்கிறார் என்பதையும் நெஞ்சை நக்காத சென்டிமெண்டுடன் சொல்லியிருப்பது சிறப்பு.

also read : மரக்கார் படத்தில் கம்பீரமான லுக்கில் கீர்த்தி சுரேஷ்- வைரல் படங்கள்

இறுதி நிமிடங்களில் அரசை புரபஸரே வழிநடத்துகிறார். புதிய அடையாளங்களுடன் அவர்கள் வெளியேறுவதை, எத்தனையோ விஷயங்களை நம்பினோம், இதை நம்ப மாட்டோமா என்ற மனநிலையில் நாமும் ஏற்றுக் கொள்கிறோம். உள்ளூர பார்வையாளன் விரும்பியதும் இதுதானே.மணி ஹெய்ஸ்ட் போன்ற பெரும் எதிர்பார்ப்பை பெற்ற தொடரை அனைவரையும் திருப்திச் செய்கிறவகையில் முடிப்பது சிரசாசனம் செய்வது மாதிரி. அதில் மணி ஹெய்ஸ்ட் டீம் வெற்றி பெற்றிருக்கிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Cinema

அடுத்த செய்தி