ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Corona 2nd Wave: கொரோனா 2-ம் அலையிலிருந்து எப்படி மீளும் திரையரங்குகள்?

Corona 2nd Wave: கொரோனா 2-ம் அலையிலிருந்து எப்படி மீளும் திரையரங்குகள்?

தியேட்டர்

தியேட்டர்

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட முயன்று வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா மற்றும் ஓடிடி என ஒரே நேரத்தில் இரு எதிரிகள் திரையரங்குகளை துவம்சம் செய்கின்றன. இதிலிருந்து திரையரங்குகள் எப்படி மீளப் போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா முதல் அலையின் போது பல மாதங்கள் திரையரங்குள் திறக்கப்படவில்லை. அந்த இடைவெளியில் இந்தியாவில் ஓடிடி தளங்கள் அழுத்தமாக கால் பதித்தன. லட்சக்கணக்கான புதிய வாடிக்கையாளர்கள் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்களுக்கு கிடைத்தனர். திரையரங்குகளுக்கு ரசிகர்கள் இனி வருவார்களா என்ற சந்தேகத்தை இந்த ஆதரவு எழுப்பியது.

கொரோனா முதல் அலை தணிந்து திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட போது, அச்சம் காரணமாக ரசிகர்கள் முன்புபோல் திரையரங்குகளுக்கு செல்லவில்லை. அந்த நேரத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. மக்கள் முன்புபோல் திரையரங்குகளில் திரண்டனர்.

அடுத்தடுத்து வெளியான சுல்தான், கர்ணன் படங்களுக்கும் ரசிகர்கள் பேராதரவு அளித்தனர். சின்னப் படங்களை திரையரங்கில் சென்று காண்பதை ரசிகர்கள் தவிர்த்தாலும், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அவர்கள் திரையரங்கில் திரண்டது அதன் உரிமையாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை அதனை மொத்தமாக நாசப்படுத்தியது. திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் தொழில் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது முழு அடைப்பு பலவிதங்களில் திரையரங்குகளை பாதித்துள்ளது. இந்த பிரச்னை அனைத்துக்கும் மையமாக ஓடிடி மாறியுள்ளது. ஓடிடி தளங்கள் இல்லையெனில், கொரோனா பாதிப்பு தணிந்து மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படுகையில் ரசிகர்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்லியிருக்க முடியும். இங்கு தான் ஓடிடி தளங்கள் அந்த நம்பிக்கை சிதைத்திருக்கின்றன.

கொரோனா காரணமாக எம்ஜிஆர் மகன், டாக்டர் உள்பட பல முக்கிய திரைப்படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரச்னை இப்போதைக்கு முடிவுக்கு வரப்போவதில்லை என்று அறிந்ததும் சிரஞ்சீவியின் ஆச்சார்யா பட வெளியீட்டையும் தள்ளி வைத்துள்ளனர்.

மே மாதம் வெளியாகியிருக்க வேண்டிய படம் இது. அதேபோல், மே 13 வெளியாவதாக இருந்த மோகன்லாலின் மராக்கர் - அரபிக்கடலின்டெ சிம்ஹம் ஆகஸ்டுக்கு தள்ளிப் போயுள்ளது. இந்தியில் ஜான் ஆபிரஹாம் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் சத்யமேவ ஜெயதே 2 மே மாதம் வெளியாகியிருக்க வேண்டும். அதன் வெளியீட்டை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறார்கள். அனைத்து மொழிகளிலும் முக்கிய திரைப்படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதன் நடுவில் ஓடிடி புகுந்திருப்பதுதான் இப்போது பிரச்சனை.

கொரோனா இரண்டாவது அலை எப்போது முடியும், திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது தெரியாத நிலையில், சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட முயன்று வருகின்றனர். விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் ஓடிடியில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தனுஷின் ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியாவதாக அறிவித்தது பிரச்சனையை இன்னும் மோசமாக்கியது.

ஜோஜி, த்ரிஷ்யம் 2 போன்ற கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களே ஓடிடியில் வெளியாகும் ஆக்ஷன் நிறைந்த பிரமாண்டப் படங்கள் திரையரங்குகளில்தான் வெளியாகும் என்ற நம்பிக்கையை ஜகமே தந்திரம் குலைத்திருக்கிறது. ஜகமே தந்திரத்தைத் தொடர்ந்து மேலும் பல பிரமாண்ட படங்கள் ஓடிடியில் வெளியாகலாம் என்பதே திரையரங்குகளின் இப்போதைய அச்சம். அதற்கேற்ப மேலும் பல புதிய படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கொரோனாவால் அனைத்துத் துறைகளும் முடக்கப்பட்ட நிலையில் ஓடிடி தளங்கள் மட்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளன. டிக்கெட், பார்க்கிங், பாப்கார்ன் என்று அனைத்திலும் கொள்ளை லாபம் வைத்து பார்வையாளர்களின் அதிருப்தியை சம்பாதித்திருக்கும் தமிழக திரையரங்குகள் ஓடிடி தளங்களின் தாக்கத்திலிருந்து மீள்வது சாதாரணமில்லை. முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமே அவர்களுக்கான மீட்சியாக இருக்கின்றன.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: OTT Release, Tamil Cinema