சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவின் முகப்பில் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துக் கொண்ட செல்பி இணையத்தில் வைரலானது. மாடர்ன் தியேட்டர்ஸின் முக்கியத்துவம் இளைய தலைமுறைக்கு தெரியாது.
தமிழ் சினிமா சரித்திரத்தை மாடர்ன் தியேட்டர்ஸையும், அதன் நிறுவனம் டி.ஆர்.சுந்தரம் முதலியாரையும் தவிர்த்துவிட்டு எழுதிவிட முடியாது.
ஒரு காலத்தில் சென்னையைவிட அதிக திரையரங்குகள் சேலத்தில் இயங்கி வந்தன. தெருவுக்குத் தெரு திரையரங்குகள் நிறைந்திருக்கும். ஆரம்பகாலத்தில் சினிமா தயாரிப்பு சேலத்தை மையப்படுத்தியே இயங்கி வந்தது.
சேலம் திருசெங்கோட்டில் 1907 இல், ஜவுளி வியாபாரம் செய்து வந்த பணக்கார குடும்பத்தில் டி.ஆர்.சுந்தரம் பிறந்தார். லண்டனில் படப்படிப்பை முடித்து அவர் திரும்பிய வேளையில்தான் தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் வெளியாகி வரவேற்பை பெற்றது. வேலாயுதம் என்ற நண்பருடன் இணைந்து ஏஞ்சல் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி 1934 முதல் படங்கள் தயாரித்தார்.
திரௌபதி வஸ்திராபரணம், துருவா, நல்ல தங்காள் ஆகியவை அவற்றில் சில. பிறகு தனியாக மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கி ஒரு கார்ப்பரேட் தொழில்போல சினிமா தயாரிக்க ஆரம்பித்தார். முதல் படமாக சதி அகலியா வெளியானது.
ஒரே இடத்தில் அனைத்து பணிகளும் நடைபெறும் வகையில் சேலத்தில் அவர் மாடர்ன் தியேட்டர்ஸை உருவாக்கினார். குறைந்த செலவில், குறுகிய காலத்தில், சிறந்த படைப்பை தருவது அவரது நோக்கமாக இருந்தது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட பதினோரு மொழிகளில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை அவர் தயாரித்தார். முதல் மலையாள பேசும்படம் பாலன், எம்ஜிஆர் முதல்முறை நாயகனாக நடிக்க, கருணாநிதி கதை, வசனம் எழுதிய மந்திரகுமாரி, பியூ.சின்னப்பாவை ஸ்டாராக்கிய, தமிழின் முதல் இரட்டைவேடப் படம் உத்தம புத்திரன், தமிழின் முதல் வண்ணத் திரைப்படம் (கேவா கலர்) அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மலையாளத்தின் முதல் வண்ணப் படம் என முக்கியமான படங்களை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பல்துறை வித்தகராக இருந்த டி.ஆர்.சுந்தரம் திரைப்பட தயாரிப்புத்துறையின் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் கருதப்படுகிறார்.
தமிழ்நாட்டின் 5 முதல்வர்கள் இவரிடம் பணியாற்றியவர்கள். பல சரித்திர நாயகர்களின் காலடித்தடம் பட்ட ஸ்டுடியோ மாடர்ன் தியேட்டர்ஸ். அதனை பிற்காலத்தில் இடித்து குடியிருப்புகளாக மாற்றினர். அதன் முகப்பு அலங்கார வளைவையும் கட்டுமான நிறுவனம் இடிக்க திட்டமிட்டது. இது குறித்த செய்தியை ஒரு ஞாயிறன்று சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
அதனைப் பார்த்த, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி கட்டுமான நிறுவனத்திடம் பேசி, மாடர்ன் தியேட்டர்ஸின் அலங்கார வளைவு முகப்பை இடிக்காமல் அப்படியே இருக்கும்படி செய்தார். அப்படி தனது தந்தையால் அழியாமல் காப்பாற்றப்பட்ட, தமிழ் சினிமா சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த மாடர்ன் தியேட்டர்ஸின் முகப்பின் முன்பு நின்றுதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்பி எடுத்துக் கொண்டார். அந்தவகையில் அதுவொரு சரித்திர செல்பி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema