எனது நிலத்தை புறம்போக்கு நிலமாக பட்டா போட்டுவிட்டார்கள் - மம்மூட்டி வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மம்முட்டி

தனக்கு சொந்தமான 40 ஏக்கர் பட்டா நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்ததை எதிர்த்து நடிகர் மம்மூட்டி தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  மலையாளம் மற்றும் தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகர் மம்மூட்டி குடும்பத்தாரின் பட்டா நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக மாற்றி வகைப்படுத்தப்படுத்தி நில நிர்வாக ஆணையம் உத்தரவிட்டதற்கு காரணம் என்ன? 40 ஏக்கர் நிலம் காப்புக் காடுகளுக்கு சொந்தமானதா? வழக்கின் பின்னணி என்ன?

  மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை கழுவேலி புறம்போக்கு எனும் காப்புக்காடு நிலமாக மறுவகைப்படுத்தி, கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

  மழைநீர் கடலுக்கு செல்லும் வடிகால் பகுதியில் இந்த நிலம் உள்ளதால் நீர் வடிகால் பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு வனச்சட்டம் 1882ன் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

  இந்த உத்தரவை எதிர்த்து மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கு நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.

  அப்போது, 1882 ஆம் ஆண்டின் தமிழ்நாடு வனச் சட்டத்தின் பிரிவு 26 ன் கீழ் காப்பு காடு என வகைப்படுத்தப்பட்ட நிலப்பகுதிக்குள் நடிகர் மம்மூட்டியின் 40 ஏக்கர் நிலம் வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  1997ம் ஆம் ஆண்டு மம்மூட்டி குடும்பத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இந்த நிலத்திற்கு 2007ம் ஆண்டு தனியார் நிலம் என வகைப்படுத்தப்பட்டு பட்டா வழங்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு தனியார் நிலம் என வகைப்படுத்தப்பட்ட 40 ஏக்கர் நிலத்தை, கழுவேலி புறம்போக்காக மறுவகைபடுத்தபட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நடிகர் மம்மூட்டி தரப்பில் வாதிடப்பட்டது

  மேலும் 1927ம் ஆண்டு அடமானம் செய்யப்பட்ட 247 ஏக்கர் விவசாய நிலத்தின் ஒரு பகுதியாக தனது 40 ஏக்கர் நிலம் இருந்ததற்கான அடமான பத்திரத்தையும் மம்மூட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

  வழக்கை விசாரித்த நீதிபதி நிலம் தொடர்பான அரசின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.  மம்மூட்டி குடும்பத்தாரின் ரிட் மனுவுக்கு எதிராக ஆகஸ்ட் 26ம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
  Published by:Karthick S
  First published: