வித்தியாசமான சவுண்ட், ஸ்டைலிஷான இசை என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் ஹாரிஸ் ஜெயராஜ். ஜீவா, கௌதம் மேனன், கே.வி.ஆனந்த், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இயக்குநர்களுடன் கைகோர்த்து இவர் செய்த சம்பவங்கள் ஏராளம். இவரது பாடல்களின் சவுண்ட் சர்வதேச தரத்துக்கு இருக்கும். அவர் பாடல்களில் பயன்படுத்தும் இசைக் கருவிகள் இதுவரை நாம் கேள்விப்பட்டிராதது. அந்த வகையில் ஒவ்வொரு பாடலுக்கும் அவர் எடுக்கும் மெனக்கெடல் அசாத்தியமானது. அதன் ரிசல்ட் அவரது பாடல்களில் தெரியும்.
கிளாஸான படங்களுக்கும் சரி, மாஸான படங்களுக்கும் சரி தனது இசையால் அந்தப் படங்களுக்கு பெரும் அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார். காதல் படங்களான மின்னலே, மஜ்னு, 12 பி, உன்னாலே உன்னாலே என பல உணர்வுப்பூர்வமான பாடல்களைக் கொடுத்த அவர், மற்றொரு பக்கம் காக்க, வேட்டையாடு விளையாடு, கஜினி, அந்நியன் என மிரட்டலான ஆக்சன் படங்களில் கூடுதல் பரபரப்பு சேர்த்தார். இன்றளவும் ரசிகர்களிடம் சரியான கவனம் பெறாத படங்களுக்கு கூட ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள்தான் அடையாளமாக இருக்கின்றன.
இசையமைப்பாளராகும் முன் பல இசையமைப்பாளர்களுக்கு புரோகிராம் செய்துவந்திருக்கிறார் ஹாரிஸ். சமீபத்தில் விக்ரம் படத்தில் பழைய 'அசுரன்' படத்தின் சக்கு சக்கு வத்திக்குச்சி பாடல் பயன்படுத்தப்பட்டு பிரபலமானது. அந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் ஆதித்தயன். இந்தப் பாடலுக்கு புரோகிராம் செய்ததாக ஹாரிஸ் சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்தப் பாடலின் சவுண்ட் மிக்ஸிங்கை வைத்தே அது ஹாரிஸின் டச் இருப்பதை உணர முடியும். மேலும் படையப்பா படத்தின் ஊஞ்சல் காட்சியின் பின்னணி இசையாக, படத்தின் டைட்டில் இசையை ஹாரிஸ்தான் சேர்த்தார் எனவும், ஏ.ஆர்.ரஹ்மான் அவரைப் பாராட்டினார் எனவும் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஹாரிஸிற்கு அவரது இசையில் தங்களுக்கு பிடித்த பாடல்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபலங்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுவயதில் தனது பெற்றோருடன் எடுத்துக்கொண்ட படத்தைப் பதிவிட்டுள்ளார்.
On this day I would like to thank my Parents for what I am today. My father taught me Music and my mom taught me to show love and stay humble. (I was 2 years with my family in front of our house). pic.twitter.com/PmKVN5Pt3l
— Harris Jayaraj (@Jharrisjayaraj) January 8, 2023
அவரது பதிவில், இந்த நாளில் நான் இன்று இருக்கும் நிலைக்கு காரணமான என் பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என் அப்பா எனக்கு இசையைக் கற்றுக்கொடுத்தார். எனது அம்மா அன்பை வெளிக்காட்டவும், தன்னடக்கத்துடன் இருக்கவும் கற்றுக்கொடுத்தார். (புகைப்படம் - எனக்கு 2 வயதாக இருக்கும்போது என் வீட்டின் முன் என் பெற்றோருடன்) என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Birthday, Harris Jayaraj