• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Thalapathy Vijay: அவமானத்தை வெகுமானமாக மாற்றிய விஜய்!

Thalapathy Vijay: அவமானத்தை வெகுமானமாக மாற்றிய விஜய்!

விஜய்

விஜய்

Thalapathy Vijay: அன்று ரஜினி பக்கத்தில் தூசு போல தெரிந்த விஜய், இன்று தமிழ் சினிமா வணிகத்தில் முதலிடத்தில் இருக்கிறார்.

  • Share this:
நடிகர் விஜய்யின் 47-வது பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். பார்ப்பதற்கு நம் வீட்டில் ஒருவர் போன்ற ஒருவரின் தோற்றம், இயல்பான நடிப்பு, அரசவைக்கும் நடனம், ரசிக்க வைக்கும் குரல், கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு என சராசரி ரசிகனுக்கு தேவையான அனைத்தையும், தன்னிடம் கொண்டு தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் விஜய். இந்த பேரும் புகழும் அவருக்கு எளிதில் கிடைக்கவில்லை. என்ன தான் சினிமா பின்னணியிலிருந்து நடிக்க வந்தாலும், தனக்கான முகவரியை உருவாக்கிக் கொண்டது விஜய்யின் கடின உழைப்பும், அபரிமிதமான அர்ப்பணிப்பும் மட்டுமே.

விஜய் நடிக்க வரும் போதும் ரஜினி உச்ச நட்சத்திரம். புதிதாக வரும் எவரும் அவர் பக்கத்திலேயே நெருங்க முடியாத அளவுக்கு உயரத்தில் இருந்தார். அதே நேரம் அப்போது இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பிடித்த நடிகராக பிரசாந்த் இருந்தார். மறுபுறம் ஹேண்ட்ஸமாக அஜித். இவர்களுக்கு மத்தியில் விஜய் தாக்குப் பிடிக்க மாட்டார் என்றே பெரும்பாலானோர் ஆருடம் சொன்னார்கள். குறிப்பாக அவரது தோற்றம் மிகுந்த கிண்டல்களுக்கு உள்ளானது.

உங்களது உண்மையான வெற்றி எதுவென்றால், யார் உங்களை அவமானப்படுத்தினார்களோ, அவர்கள் வாயாலேயே மனதார வாழ்த்தும் அளவுக்கு உயர்வது தான். விஜய்யை பொறுத்தவரை தன்னைப் பற்றி எழும் விமர்சனங்களுக்கு நேரடி விளக்கம் தராமல், திரையில் அதற்கான பதிலடியை அழுத்தமாகக் கொடுப்பார். விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்திற்கு முன்னணி வார இதழான குமுதம் விஜய்யை ‘தேவாங்கு மாதிரி இருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருந்தது. இன்றைய நாளில் ஊடகத்தில் நடிகரை வேண்டாம், சாதாரணமாக யாரையும் இப்படி கூறிவிட முடியாது. அதற்கான எதிர்ப்புகள் எப்படி இருக்கும் இருக்கும் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் விஜய்யோ அன்று பெரிய நடிகராக வேண்டும் என்ற லட்சியத்தோடு சினிமாவுக்குள் வந்தவர். முதல் படத்திலேயே இப்படியான விமர்சனம், அதுவும் நடிப்பைப் பற்றியல்ல, நேரடியாக அவரது தோற்றத்தைப் பற்றியது. எவ்வளவு கோபம் வந்திருக்க வேண்டும்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த கோபத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்த விஜய், அதற்கான பதிலடி ஒவ்வொன்றையும் திரையில் கொடுத்தார். அந்த விமர்சனத்தின் நகல் ஃப்ரேம் போட்ட படமாக விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலகத்தில் இன்றும் இருக்கிறது. அதே குமுதம் கடந்த 2014-ம் ஆண்டு நடத்திய கருத்து கணிப்பின் முடிவில், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அறிவித்தது. வளர்ச்சி என்பது இப்படி இருக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக, குமுதம் அலுவலகத்திற்கு படையெடுத்து தங்கள் நன்றியை தெரிவித்தார்கள்.

அன்று ரஜினி பக்கத்தில் தூசு போல தெரிந்த விஜய், இன்று தமிழ் சினிமா வணிகத்தில் முதலிடத்தில் இருக்கிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர், கொரோனா காலம், 50% பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற பிரச்னைகள் இருந்தும் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. தற்போது விஜய், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கடுத்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில், தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க விஜய்யிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன. இது உறுதியாகும் பட்சத்தில் விஜய்க்கு பெரும் தொகையை சம்பளமாகக் கொடுக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. எந்தளவுக்கு அதிகம் என்றால், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகக் கருதப்படும், ரஜினி வாங்கும் சம்பளத்தை விட அதிகமாம். பேச்சு வார்த்தை நேர்மறையாக முடியும் பட்சத்தில் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருப்பார்.

’புலி’ பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “என்னோட ஆரம்ப காலத்தில் வந்த விமர்சனங்களெல்லாம் மறைக்க ஒண்ணும் இல்ல, உங்க எல்லாருக்கும் தெரிஞ்சது தான். அதெல்லாம் நான் பாத்து சோர்ந்து போயிருந்தா இன்னைக்கு உங்க முன்னாடி விஜய்யா எல்லாம் நின்னுருக்க முடியாது. நிறைய பேர் வெற்றிக்கு பின்னாடி ஒரு ஆணோ / பெண்ணோ இருப்பாங்கன்னு சொல்லி கேள்விபட்ருக்கேன். ஆனா எனக்கு பின்னாடி அவமானங்கள் தான் இருந்திருக்கு” என்றார். இன்னொரு விழாவில் “தோல்விக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம், ஆனா வெற்றிக்கு ஆயிரம் தோல்வி தான் காரணமா இருக்க முடியும்” என அவர் குறிப்பிட்டது தன் சொந்த வாழ்க்கையில் கிடைத்த அனுபவத்தை தான்.

விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில், ‘எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே’ என்ற பாடலில் வரும் வரிகளைப் போல ‘நதி போல ஓடிக் கொண்டிருக்கிறார்’ விஜய், அவரை ’உள்ளத்தில் வைத்திருக்கிறது’ ஊர்!உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: