HBD Samantha : தென்னிந்திய ரசிகர்களை தன் வசப்படுத்திய பல்லாவரத்து பெண்!

HBD Samantha : தென்னிந்திய ரசிகர்களை தன் வசப்படுத்திய பல்லாவரத்து பெண்!

சமந்தா

சிறந்த நடிகைக்காக வழங்கப்படும் விருதினை தமிழில் நீதானே பொன்வசந்தம் திரைப்படத்திற்கும், தெலுங்கில் நான் ஈ திரைப்படத்திற்கும் ஒரே ஆண்டு பெற்று ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

  • Share this:
    பல்லாவரத்தை சேர்ந்த சென்னை பெண்ணான சமந்தா இன்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த தினத்தில் அவரின் திரை வாழ்க்கை குறித்த ஒரு தொகுப்பை இங்கே குறிப்பிடுகிறோம்.

    வட இந்தியாவைச் சேர்ந்த நாயகிகள் மட்டுமே கோலோச்சி வந்த தமிழ் சினிமாவில் சென்னையில் பிறந்து, ஆந்திர தேசம் வரை ரசிகர்களை ஈர்த்த ஒருவர் சமந்தா. மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தின் மூலம் இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த சமந்தா, 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.



    மாடலிங் துறையில் சாதிக்க விரும்பிய சமந்தா, கல்லூரி காலகட்டத்தில் விளம்பரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினர். சமந்தா அப்பொழுது நடித்த பல விளம்பரங்கள் தற்போதும், இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சமந்தா, இதே திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றார்.

    இதனைத்தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் நான் ஈ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் புகழின் உச்சம் தொட்டார். சிறந்த நடிகைக்காக வழங்கப்படும் விருதினை தமிழில் நீதானே பொன்வசந்தம் திரைப்படத்திற்கும், தெலுங்கில் நான் ஈ திரைப்படத்திற்கும் ஒரே ஆண்டு பெற்று ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.



    தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ரசிகர் கூட்டத்தை கவர்ந்ததால் தெலுங்கில் நானி, மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் தமிழில் விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் திரைப்படத்திலும் நடித்து தென்னிந்தியாவின் முதன்மை நாயகி அந்தஸ்தை அடைந்த சமந்தாவிற்கு, செல்பிபுள்ள பாடல் பட்டி தொட்டியெங்கும் ரசிகர்களை சம்பாதித்துக் கொடுத்தது.



    தெலுங்கில் சமந்தா நடித்த முதல் திரைப்படத்தின் நாயகனான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு, தெலுங்கு சினிமாவின் மிகப் பெரிய குடும்பத்து மருமகளாக ஆந்திர தேசத்தில் குடியேறியுள்ள சமந்தா, இணையதளத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் மாடித்தோட்டம் அமைக்கும் வீடியோக்களையும் வெளியிட்டு, தொடர்ந்து ரசிகர்களை தன் மீது உள்ள கவனம் குறையாமல் பார்த்து வருகிறார். திருமணத்திற்குப் பின்னர் நடிகைகளின் மார்க்கெட் பறிபோய்விடும் என்ற இலக்கணத்தை உடைத்து திருமணத்திற்கு பின்னரும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெற்றி திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, தமிழ் சினிமாவின் புது வரலாறு எழுதிக் கொண்டிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: