Manorama: கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமாவின் பிறந்தநாள்!

மனோரமா

5000-க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ள மனோரமா, அதன் மூலம் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.

  • Share this:
    தமிழ் சினிமா கண்ட மகத்தான கலைஞர்களில் ஒருவரான மனோரமாவின் 84-வது பிறந்தநாள் இன்று.
    நகைச்சுவை, குணச்சித்திரம் என்று எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தக் கூடிய நடிகை மனோரமா குறித்த பகிர்வை இங்கே குறிப்பிடுகிறோம்.

    ஆச்சி என்ற அனைவராலும் அழைக்கப்படும் மனோரமா 1937-ம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்தவர். மனோரமாவின் உண்மையான பெயர் கோபி சாந்தா. நாடக உலகில் கொடி கட்டி பறந்த அவருக்கு அவரது நாடக இயக்குநர் மனோரமா என பெயர் சூட்டினார்.

    மனோரமாவின் நாடக நடிப்பைப் பார்த்து வியந்த எஸ்.எஸ்.ஆர் அவரை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் நடித்த முதல் படம் சில காரணங்களால் வெளிவராமல் போக, பின்னர் கண்ணதாசன் இயக்கிய மாலையிட்ட மங்கை, அவரது அறிமுக படமாக வெளிவந்து அவரை புகழடையச் செய்தது.

    அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ள மனோரமா எவ்வளவு நீளமான வசனமாக இருந்தாலும் ஒரு முறை சொல்லிக் கொடுத்தாலே அப்படியே மனப்பாடம் செய்து நடிக்கும் திறமை பெற்றவர். நான்கு தலைமுறை நடிகர்களுடன் எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள மனோரமா, 5 முதலமைச்சர்களுடன் நடித்தவர் என்ற பெருமையையும் பெற்றவர்.

    5000-க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ள மனோரமா, அதன் மூலம் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதும், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் இவருடைய திரை பயணத்தை அலங்கரிக்கின்றன.

    அம்மா, அக்கா, அண்ணி, வில்லி, பாட்டி என திரையில் மனோரமா நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் அசாத்தியமாக நடிக்கும் ஆற்றல் பெற்றவர். நகைச்சுவையில் குலுங்க வைப்பதும் செண்டிமெண்ட்டில் கலங்க வைப்பதும் மனோரமாவின் ஸ்பெஷல்.

    நடிப்பு மட்டுமல்லாது பல திரைப்பட பாடல்களையும் மனோரமா பாடியுள்ளார். தன்னுடைய 20-ம் வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்த மனோரமா, தன் இறுதி காலம் வரை திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். 2015, அக்டோபர் 10ம் தேதி வயது முதிர்ச்சி காரணமாக மனோரமா மரணம் அடைந்தார். 78 ஆண்டுகள் வாழ்ந்த மனோரமா அதில் 58 ஆண்டுகள் சினிமா உலகில் பயணித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: