நவரச நாயகன் என தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் கார்த்திக் தனது 61-வது வயதில் இன்று அடியெடுத்து வைக்கிறார். அவரது திரை வாழ்க்கை குறித்த ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
நடிகர் முத்துராமனின் மகன் என்ற அடையாளத்தோடு, ’அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் அறிமுகமான கார்த்திக், முதல் திரைப்படத்திலேயே தனக்கு வழங்கப்பட்ட விச்சு கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்த தோடு தமிழக அரசின் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் வென்றார்.
வயதில் மூத்த நடிகர்கள் நாயகர்களாக நடித்து வந்த காலகட்டத்தில் 21 வயதிலேயே நாயகனான அறிமுகமான கார்த்திக்கு, அவரது வயதை ஒத்த கதாபாத்திரங்கள் தேடிவர துவங்கின. இளஞ்ஜோடிகள், நேரம் வந்தாச்சு, கேள்வியும் நானே பதிலும் நானே போன்ற அடுத்தடுத்த திரைப்படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வந்த கார்த்திக் அவர்களுக்கு முழு திறனையும் வெளிப் படுத்த வாய்ப்பளித்த திரைப்படம் 1988-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம்.
ரவுத்திரம், காதல் என இரு வேறு உணர்ச்சிகளை ஒருங்கே வெளிப்படுத்தியிருந்த நடிகர் கார்த்திக், தமிழ் சினிமாவில் தனி உடல் மொழியுடன் நடிக்கும் நடிகர் என பல ஹாலிவுட் நடிகர்களுடன் ஒப்பிட்டு புகழப்பட்டார். அக்னி நட்சத்திரம் திரைப்படத்திற்காக கார்த்திக் தமிழக அரசின் விருதையும், பிலிம்பேர் விருதையும் தனதாக்கினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கார்த்திக் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான வருஷம் 16, கிழக்கு வாசல், பொன்னுமணி ஆகிய திரைப்படங்கள் கார்த்திக்கை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும் புகழடைய செய்தது. நடிகர் கார்த்திக்கை தலைமேல் வைத்துக் கொண்டாடும் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உருவாக அமரன் திரைப்படம் முக்கிய காரணமாக அமைந்தது. அமரன் திரைப்படத்தில் கார்த்திக் பாடிய வெத்தல போட்ட சோக்குல பாடல் இன்றளவும் தென்மாவட்டங்களில் அடிக்கடி ஒலிக்கும் பாடலாக இருந்து வருகிறது.
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூவேலி ஆகிய திரைப்படங்களுக்கு பின்னர் நகைச்சுவை திரைப்படங்களையும், கௌரவ கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கத் தொடங்கிய கார்த்திக் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் திரைத்துறையை விட்டு முழுவதும் விலகினார். மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் திரைப்படத்திற்காக மீண்டும் நடிக்க திரும்பிய கார்த்திக் அனேகன் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்ததோடு மீண்டும் அமரன் திரைப்படத்தின் 2-வது பாகம் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
அரசியல் களத்தில் பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்து ஆரம்பத்தில் செயல்பட்ட கார்த்திக் பின்னர் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். அரசியல் களத்தில் அமைதியாக அவ்வபோது காணாமல் போய்விடும் கார்த்திக் தேர்தல் நடைபெறும் நாட்களில் திடீரென வெளியே வந்து பேட்டி கொடுத்து பரபரப்பை கூட்டுவார். அரசியல்வாதியாக முத்திரை பதிக்க தவறினாலும் நடிகராக இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் கார்த்திக் 125 திரைப்படங்களுக்கு மேல் நடித்து நான்கு தமிழக அரசின் விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகளுடன் நவரச நாயகனாக மக்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karthik, Tamil Cinema