Happy Birthday Karthi: கார்த்தியை ஸ்டாராக்கிய 7 படங்கள்!

நடிகர் கார்த்தி

முதல் பந்தே சிக்ஸராக ஆயிரத்தில் ஒருவருக்கே அமையும். கார்த்திக்கு அப்படி அமைந்தது. சிவகுமாரின் நெருக்கமான உறவினர் ஞானவேல்ராஜா ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தை தொடங்கி பருத்திவீரனில் தயாரிப்பாளரானார். அமீர் இயக்கம்.

  • Share this:
இன்று 44 வது வயதில் அடி எடுத்து வைக்கிறார் நடிகர் கார்த்தி. சிவகுமாரின் இளையமகன் என்ற தகுதி, சினிமாவில் எளிதாக அவரை அறிமுகப்படுத்தியது என்றாலும், அவர் இன்று அடைந்திருக்கும் இடத்தை அந்த ஒரு தகுதியே தந்துவிடவில்லை. கார்த்தியின் திறமையும், ஈடுபாடும், அவரை வடிவமைத்த இயக்குனர்களும் இணைந்து இணைந்து உருவாக்கிய இடம் அது. சீரான இடைவெளியில் திரைக்கு வந்த சில பிரமாதமான திரைப்படங்கள் கார்த்தியின் சந்தை மதிப்பையும், நாயக பிம்பத்தையும் வளர்த்தி எடுத்தன. அந்தப் படங்களில் முக்கியமானவற்றைப் பார்க்கலாம்.

1. பருத்திவீரன் (2007)

முதல் பந்தே சிக்ஸராக ஆயிரத்தில் ஒருவருக்கே அமையும். கார்த்திக்கு அப்படி அமைந்தது. சிவகுமாரின் நெருக்கமான உறவினர் ஞானவேல்ராஜா ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தை தொடங்கி பருத்திவீரனில் தயாரிப்பாளரானார். அமீர் இயக்கம். பாரதிராஜா அசந்து போகிற மாதிரி ஒரு கிராமத்து படம் என்ற ஒற்றை வரியில் தொடங்கியது பருத்திவீரனின் பயணம். படத்தின் பிளாஷ்பேக் தவிர்த்து மற்ற அனைத்துக் காட்சிகளையும் அமீரும், நண்பர்களும் பேசிப் பேசியே உருவாக்கினார்கள். அமெரிக்காவில் படித்த கார்த்திக்கு லுங்கியும், கிராமமும் அந்நியம். படத்தில் அது தெரியாதவாறு புழுதியோடு புழுதியாக கலந்து போனார். சித்தப்பு என்ற அழைப்பும், குழைவான உடல்மொழியும், குரலில் தெறிக்கும் நக்கலுமாக பருத்துவீரன் அடுத்து வந்த பல டஜன் படங்களுக்கு இன்ஸ்பிரேஷனானது. ஃபிலிம்பேர், தமிழக அரசு விருது, விஜய் விருது என மூன்று முக்கிய விருதுகளை இந்தப் படம் கார்த்திக்கு பெற்றுத் தந்தது.

2. பையா (2010)

பருத்திவீரனுக்கு அடுத்து வந்த ஆயிரத்தில் ஒருவனில் கார்த்தியின் கதாபாத்திரம் பருத்திவீரனைப் போலவே நக்கலும், நையாண்டியும் கொண்டிருந்தது. தோற்றமும் கிட்டத்தட்ட அப்படியே. கிராமமும், புழுதியும்தான் இவருக்கு செட்டாகும் போல என்று ரசிகர்கள் கருதிய நேரம் பையா வெளியானது. பருத்திவீரனுக்குள்ளிருந்த லவ்வர் பாயை பையா வெளிக்கொணர்ந்தது. மெல்லிய கதை, இனிமையான பாடல்கள், இவற்றின் ஊடாக படந்திருந்த காதல் என பையா இளைஞர்களின் விருப்பப் படமானது. பருத்திவீரனில் விழுந்த அழுத்தமான முத்திரையை பையா துடைத்து புது கார்த்தியை அளித்தது.

3. சிறுத்தை (2011)

தமிழ் சினிமா என்றில்லை, உலகம் முழுக்க ஆக்ஷன் ஹீரோக்களுக்கே மதிப்பு. ஹாலிவுட் என்ஹால் அர்னால்ட், சில்வஸ்டர் ஸ்டாலோன். இப்போது ட்வைனி ஜான்சன், டாம் க்ரூஸ். இந்தப் பக்கம் வந்தால் ஜாக்கிசான், ஆக்ஷன் ஹீரோவான பிறகே ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனார். விஜய், அஜித்தும் ஆக்ஷன் ஹீரோக்கள் ஆன பிறகே இப்போதிருக்கும் இடத்தை தொட்டார்கள். கார்த்தி சண்டைக் காட்சியில் நடித்திருந்தாலும், அவர் நடித்த படங்கள் ஆக்ஷன் படங்கள் என்று சொல்வதற்கில்லை. அப்படி அமைந்த முதல் படம் சிறுத்தை. தெலுங்கில் ராஜமௌலி இயக்கிய விக்ரமார்க்குடு படத்தை சிவா தமிழில் கார்த்தியை வைத்து இயக்கினார். இரட்டை வேடம். ஒன்று ஆக்ரோஷம், இன்னொன்று நகைச்சுவை. இரண்டிலும் சதம் அடித்தார். படம் பம்பர் ஹிட். பருத்திவீரன் என்ற கிளாஸ் படத்தில் ஆரம்பித்து சிறுத்தை என்ற மாஸ் படத்தில் கார்த்தியின் நடிப்பு வட்டம் பூர்த்தியானது.

4. மெட்ராஸ் (2014)

வடசென்னை மக்களின் வாழ்வை அரசியலும், யதார்த்தமுமாக அணுகிய மெட்ராஸ் கார்த்தியின் நடிப்பு வாழ்க்கையில் ஒரு மைல்கல் எனலாம். காளி என்ற கதாபாத்திரத்தில் படத்துக்கு உயிர் தந்திருந்தார் கார்த்தி. எந்த வேடத்தையும் செய்யும் ஆற்றல்மிக்கவர் என்ற நம்பிக்கையையும், பெயரையும் மெட்ராஸ் அவருக்கு பெற்றுத் தந்தது. கார்த்தியின் நடிப்பு வாழ்க்கையில் முக்கியமான திரைப்படங்களில் மெட்ராஸுக்கு எப்போதும் இடமுண்டு.

5. தீரன் அதிகாரம் ஒன்று (2017)

கார்த்தியை இந்தி மொழி ரசிகர்களிடம் சேர்த்த திரைப்படம், தீரன் அதிகாரம் ஒன்று. சிறுத்தையில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், அதன் சாயல் ஏதுமின்றி தீரன் திருமுருகன் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்தார். வடஇந்திய முரட்டு திருடர்களை அவர்கள் இடத்துக்கே சென்று சந்திக்கும் சாகஸ கதை. வினோத்தின் இயக்கத்தில் படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் இந்தி டப்பிங் யூடியூபில் உள்ளது. படத்துக்கு வந்துள்ள கமெண்ட்களில் கார்த்தி என்ற நடிகர் இந்தி மொழி பேசும் ரசிகர்களிடம் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும். ஃபிலிம்பேரில் சிறந்த நடிகருக்கான விமர்சகர்கள் விருதை இப்படம் கார்த்திக்கு பெற்றுத் தந்தது.

6. கடைக்குட்டி சிங்கம் (2018)

பருத்திவீரனில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட்டுக்குடும்பம், உறவுகள், அத்தை மகள்கள் என சராசரி சம்சாரியாக கார்த்தி நடித்ததில்லை. அந்த குறையை போக்கிய படம், கடைக்குட்டி சிங்கம். குண சிங்கமாக, தனது காதல் திருமணத்துக்கு சகோதரிகளை சம்மதிக்க வைக்க அவர் கைக்கொள்ளும் முயற்சிகள் பெண்களை கவர்ந்தது. படம் பட்டி தொட்டியெங்கும் வரவேற்பை பெற்றது. அடாவடிக்கு பதில் அன்பான கிராமத்து இளைஞனாக கார்த்தியை கடைக்குட்டி சிங்கம் காட்டியது.

7. கைதி (2019)

காதல் இல்லை, டூயட் இல்லை, காமெடி இல்லை. ஒரேயொரு காஸ்ட்யூம். ஆரம்பம் முதல் இறுதிவரை சண்டை... சண்டை... கைதியில் வரும் டில்லி வித்தியாசமானவன். பருத்திவீரனின் தில்லும், குணசிங்கத்தின் அன்பும், தீரனின் தைரியமும் கலந்த புதுவகை. எந்தப் பாத்திரத்தில் போட்டாலும் அந்த பாத்திரமாக மாறும் ரசவாதம் கார்த்திக்கு கைகூடி வந்திருப்பதை உணர்த்திய படம்.

கார்த்தி தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனிலும், பி.எஸ்.மித்ரனின் சர்தாரிலும் நடித்து வருகிறார். ஹீரோயிச படங்களில் மட்டும் நடிக்காமல், எல்லாவித கதாபாத்திரங்களிலும் அதற்கேற்ற நடிப்பை கொடுப்பதே கார்த்தியின் ஸ்பெஷல். இப்படியான நடிகர்கள்தான் தமிழ் சினிமாவுக்கு தேவை. துரதிர்ஷ்டவசமாக கார்த்தி, விஜய்சேதுபதி என சொற்ப பேரே அப்படி இருக்கிறார்கள்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: