HBD Goundamani: தனித்துவமான காமெடி நாயகன் கவுண்டமணி!

கவுண்டமணி

"குண்டூசி விற்கிறவன் எல்லாம் தொழிலதிபரர்னா டாட்டா, பிர்லா யாரு. இந்த தொழிலதிபர் தொல்லை தாங்க முடியலைப்பா..."

  • Share this:
நடிகர் கவுண்டமணி இன்று தனது 82-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் இவரது பங்களிப்பு மிக முக்கியமனாது. எப்போது பார்த்தாலும் சலிக்காத காமெடி காட்சிகள், கவுண்டர்கள் என பார்வையாளரை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்படி அமைந்திருக்கும்.

"ஐயா எதாவது தானம் பண்ணுங்க"

"ஏண்டா கை, கால் நல்லாதானே இருக்கு. அப்புறம் ஏன் பிச்சை எடுக்கிற...?"

"ஏண்டா நீ போடுற நாலணாவுக்கு நான் கை, கால் இல்லாம இருக்கணுமா?"

ஒரு படத்தில் பிச்சைக்காரராக வரும் கவுண்டமணி கொடுக்கும் கவுண்டர் இது. நாம் ஒருவர் மீது இரக்கம் வைத்து இரண்டு ரூபாய் தருவதென்றால், குறைந்தபட்சம் அவருக்கு கை, கால் இரண்டில் ஒன்று இல்லாமலிருக்க வேண்டும். இரண்டும் இல்லையென்றால் இரக்கம் கூடும். ஐந்து ரூபாய் தருவோம். தானத்துக்கு பின்னால் இருக்கும் சராசரி மனிதர்களின் மனநிலையை இரண்டே டயலாக்கில் வெளிப்படுத்தியவர் கவுண்டமணி. இதுதான் அவரது தனித்துவம்.

சுப்பிரமணியன் கருப்பையா, இது தான் கவுண்டமணியின் பெயர். யார் எதைச் சொன்னாலும் உடனடியாக ஒரு கவுண்டர் அட்டாக் அவரிடமிருந்து வரும். அதனால் வந்த பட்டப்பெயர், கவுண்டர்மணி. அது மருவி கவுண்டமணியாகி, அதுவே நிலைபெற்றது. சகட்டுமேனிக்கு அனைவரையும் கலாய்ப்பது அவரது பாணி. அவருக்கே முடியில்லை. ஆனால், முடியில்லாத வழுக்கையர்களை அவரளவுக்கு யாரும் கலாய்த்திருக்க மாட்டார்கள். வேறு யாரேனும் பேசினால் அவதூறாக தோன்றும் விஷயங்கள் கவுண்டமணி பேசுகையில் காமெடியாகிவிடும். இந்த அபூர்வ மாற்றம் எப்படி நிகழ்ந்தது?

வெளியில் நீங்கள் யாராக இருந்தாலும் சினிமாவில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நியதி உண்டு. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை கேள்வி கேட்கக் கூடாது. அவர்களின் நம்பிக்கைக்கும், மன இயல்புக்கும் ஒத்தே காட்சிகளை வைத்தாக வேண்டும். அதிலும் நாயகர்கள் மக்களை குற்றப்படுத்தி பேச முடியாது. மக்கள் நினைத்தால், மக்கள் போராடினால், மக்களின் ஆதரவு இல்லையென்றால், என மக்களை முதன்மைப்படுத்தி அவர்களின்றி அணுவும் இல்லை என புளுக வேண்டும். மாணவர்கள் நினைத்தால், தொழிலாளிகள் இல்லையென்றால், உழவர்கள் சேற்றில் கால் வைக்கவில்லையென்றால், ஆசிரியர்கள் மனது வைத்தால் என இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் உண்டு. இதையெல்லாம் நாயகர்களால் மறுதலிக்க முடியாது.

இதனை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற சிலர் மீறினாலும், முற்றாக உடைத்தவர் எம்.ஆர்.ராதா. அவர்தான் முதல்முதலில் மக்கள் என்ற கருத்தாக்கத்தை பட்டவர்த்தனமாக கேள்வி கேட்டார். அவர்களின் மூட நம்பிக்கைகளை, பொருளற்ற புலம்பல்களை சாடினார். அதன் வழியில் வந்தவர் கவுண்டமணி. விதிவிலக்காக சிலர் எப்போதாவது ஏதாவது காட்சியில் பேசியிருக்கலாம். ஆனால், முற்றாக அதையே தனது அடையாளமாக்கிக் கொண்டவர் கவுண்டமணி மட்டுமே.

"வலது காலை எடுத்து வச்சி வாங்க..."

"கால் இல்லாதவன் எதை வச்சி வருவான்...?" பட்டென்று பதில் வரும்.

இன்னொரு படத்தில் கவுண்டமணி வெட்டியான். தனது பையனை பள்ளிக்கு அழைத்துச் செல்வார். எதிரே பிராமணரான எஸ்.எஸ்.சந்திரன் தனது பையனுடன் வருவார். எஸ்.எஸ்.சந்திரனை கண்டதும் வணக்கம் வைப்பார் கவுண்டமணி.

"காத்தாலேயே போட்டுண்டு வந்தியா. தள்ளி நில்லுடா அபிஷ்டு. ஆமா, குழந்தையை அழைச்சுண்டு எங்கப் போற...?"

"என் பையன் பள்ளிக்கூடத்துல படிக்கப் போறான் சாமி."

"உன் பையனெல்லாம் பள்ளிக்கூடத்துல படிச்சா உனக்கப்புறம் வெட்டியான் வேலை பார்க்கிறது யாரு?"

"கொஞ்ச நாளைக்கு நீயும் உன் புள்ளையும் பாருங்க."

கவுண்டமணி தவிர எந்த நட்சத்திர நடிகர்களாலும் இதை பேச முடியாது.

"இலவசமா அரிசி குடுத்தா வரிசையா வந்து வாங்கிக்கிறீங்க. வேட்டி சேலை குடுத்தா அதையும் வரிசையா வந்து வாங்கிக்கிறீங்க. ஆனா, கொள்ளையடிக்க மட்டும் கும்பலா போறீங்களே ஏண்டா? நீங்க எல்லாம் என்னைக்கு ஆளைப் பார்த்து ஓட்டு போட்டிருக்கீங்க. ஒரு ஓட்டுக்கு ஒரு குடம், ஒரு பித்தளை செம்பு இதுதானே உங்க கணக்கு..."

பொதுமக்களை விட்டு விளாசுவார். படம் பார்க்கிற யாருக்கும் அவர் மீது கோபம் வராது. சைக்கிள் கடை வைத்திருப்பவர், ஈயம் பூசுகிறவர், முடி திருத்துகிறவர், பூம்பூம் மாட்டுக்காரர், கிராமத்து வைத்தியர், துணி வெளுப்பவர், வெட்டியான் என விளிம்புநிலை கதாபாத்திரங்களில் கவுண்டமணி அளவுக்கு வேறு யாரும் நடித்ததில்லை. அந்த கதாபாத்திரங்களில் சோகப்பாட்டு பாடாமல் நையாண்டியுடன் ரசிக்க வைத்தார். "குண்டூசி விற்கிறவன் எல்லாம் தொழிலதிபரர்னா டாட்டா, பிர்லா யாரு. இந்த தொழிலதிபர் தொல்லை தாங்க முடியலைப்பா..." போகிற போக்கில் அவர் உதிர்த்த கவுண்டர்களை தொகுத்தால் அதுவே பலநூறு பக்கங்கள் வரும்.

சினிமாவுக்கு வெளியேயும் அவர் கலகக்காரர் தான். மீடியா பப்ளிசிட்டி இல்லாமல் சினிமாவில் நிலைக்க முடியாது என்ற நிலையில், மீடியாவை முற்றாக தள்ளி வைத்தவர் கவுண்டமணி. மீடியாவை பக்கத்திலேயே நெருங்க விடுவதில்லை. தனது நீண்டகால சினிமா வாழ்க்கையில் பலமுறை முழுமையாக ஃபீல்ட் அவுட்டாகி பல வருடங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். அப்போதும் கூட மீடியாவை அவர் அணுகியதில்லை. கிடைத்த வாய்ப்பை வைத்து அத்தனை முறையும் மீண்டு வந்திருக்கிறார். அப்படி வந்த ஒவ்வொரு முறையும் ரசிகர்களின் ஆதரவுடன் புகழின் உச்சத்தை தொடவும் செய்திருக்கிறார். அதனால்தான் இளையதலைமுறை நடிகர்களும், ரசிகர்களும் அவரை தலைவர் என்கிறார்கள்.

இன்று 82-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கவுண்டமணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: