ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

HBD Dhanush: எப்போதும் பெஸ்ட்டை தரும் 'நடிப்பு அசுரன்’ தனுஷ் பிறந்தநாள்!

HBD Dhanush: எப்போதும் பெஸ்ட்டை தரும் 'நடிப்பு அசுரன்’ தனுஷ் பிறந்தநாள்!

தனுஷ்

தனுஷ்

வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி எப்போதும் சிறந்த ஒன்றை தான் ரசிகர்களுக்கு தரும் என்ற நம்பிக்கையை அசுரன் திரைப்படம் இன்னும் ஆழமாக்கியது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம், அலட்டிக்கொள்ளாத எளிமையான உடல்மொழி, திரையில் பார்த்ததும், உடனடியாக நமது வாழ்க்கையுடன் ஒப்பிட்டுக் கொள்ளும்படியான இயல்பான நடிப்பு... இது தான் தனுஷ்! அவர் இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

2002-ஆம் ஆண்டு தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் “துள்ளுவதோ இளமை” படத்தில் முதன்முதலில் திரையில் தடம் பதித்தார் தனுஷ். ஒல்லியான தேகம், தமிழ் சினிமாவுக்கு தினம் வருகைபுரியும் 10-ல் ஒருவராக தான் தனுஷும் இருப்பார் என பரவலான கருத்து எழுந்தது. அதன்பின் 2003-ஆம் ஆண்டு தனது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் உருவான முதல் படமான “காதல் கொண்டேன்” திரைப்படத்தில் தனுஷ் நடித்தார். இப்படத்தில் அவரது வினோத் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பையனிடம் ஏதோ இருக்கிறது என பார்வையாளர்கள் எண்ணத் தொடங்கினர்.

இதையடுத்து 2005-ஆம் ஆண்டு பாலுமகேந்திராவின் இயக்கத்தில் “அது ஒரு கனாக்காலம்” திரைப்படத்தில் நடித்தார் தனுஷ். எதுவும் இல்லாமல், பாலமகேந்திரா தனுஷை தேர்ந்தெடுத்திருக்க மாட்டார். ஆகையால் தனுஷ் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது. அதன்பின் செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்த “புதுப்பேட்டை” திரைப்படம் தனுஷின் நடிப்பு பரிமாணத்தை வேறு விதத்தில் திரையில் காட்டியது. அவர் நடித்த “கொக்கி குமார்” கதாபாத்திரம் காலத்தால் அழியாத கேங்ஸ்டர் கதாபாத்திரமாக தமிழ் சினிமாவில் இடம் பிடித்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனுஷ் - வெற்றிமாறன் பந்தம்

தனுஷின் திரைவாழ்க்கையில் இயக்குநர் வெற்றிமாறனுடனான பந்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தனுஷ்-வெற்றிமாறன் சந்திப்பு நிகழ்ந்தது எப்படி தெரியுமா?

இயக்குநர் பாலுமகேந்திரா, தனுஷை வைத்து “அது ஒரு கனா காலம்’ படத்தை இயக்கினார் என மேலே குறிப்பிட்டோம் அல்லவா? அந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் தான் வெற்றிமாறன். அப்போது தான் தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. சமூகம், படங்கள் மீதான வெற்றியின் வித்தியாசமான பார்வையும், ஆங்கில புலமையும் தனுஷின் கவனத்தை ஈர்த்தது. தனுஷின் இயல்பான நடிப்பார்வமும், சினிமா மீதான காதலும் வெற்றிமாறனுக்கு தனுஷை நெருக்கமாக்கியது. ஆக, தனுஷ்-வெற்றிமாறன் வெற்றி கூட்டணிக்கு இணைப்புப் பாலமாக இருந்தவர் இயக்குநர் பாலுமகேந்திரா தான்.

இந்த நட்பு தொடர்ந்து நீடிக்க, தனது முதல் படமான ‘பொல்லாதவன்’ படத்தை தனுஷை வைத்து இயக்கினார் வெற்றிமாறன். அவரது திரை வாழ்க்கையில் முதல் முழு ஆக்‌ஷன் திரைப்படம் பொல்லாதவன் தான். நடுத்தர வர்க்கத்து இளைஞர்களுக்கு ஒரு பைக் வாங்க வேண்டும் என்ற கனவும், வாங்கி விட்டால் அதை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் என்ற தவிப்பையும் தனுஷ் அச்சு அசலாக திரையில் காட்டியிருந்தார். இது தனுஷின் வேறு பரிமாணத்தை ரசிகர்களுக்கு காட்டியது.

தொடர்ந்து வெற்றிமாறனின் இரண்டாவது படமான ’ஆடுகளத்திலும்’ தனுஷ் நடித்தார். சேவல் சண்டையை மையப்படுத்திய இப்படத்தில் ஒரு லுங்கி, வழித்து சீவிய தலை என இயல்பான தோற்றத்தால் மீண்டும் கவனம் ஈர்த்தார் தனுஷ். இதில் தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்து, ப்ரீ-புரொடக்‌ஷன் வேலைகள் நடந்தது. பின்னர் அதை தனுஷே தயாரித்து, நடிக்கவும் செய்தார். அந்த படமும் தனுஷின் திரை வாழ்வில் முக்கியமானதாக அமைந்தது.

இதையடுத்து நான்காவது முறையாக ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி இணைந்தது. கொலை செய்த தனது மகனை காப்பாற்ற சிவசாமி படும் கஷ்டங்களும், பரிதவிப்பும் அவ்வளவு உயிரோட்டமாக இருக்கும். முன்பு எப்போதும் இல்லாதது போல், இந்தப் படத்தில் நடுத்தர வயது அப்பாவாக பார்வையாளர்கள் மனதில் அப்படியே பதிந்தார் தனுஷ். வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி எப்போதும் சிறந்த ஒன்றை தான் ரசிகர்களுக்கு தரும் என்ற நம்பிக்கையை அசுரன் திரைப்படம் இன்னும் ஆழமாக்கியது.

எதிரியை பழிவாங்குவதை விட, படித்து அதிகாரத்திற்கு வரவேண்டும். அப்படி வரும்போது அவன் நமக்கு செய்ததை, நாம் அவனுக்கு செய்யக்கூடாது என படத்தைப் முடித்திருப்பார் வெற்றிமாறன். திரையரங்குகள் கைதட்டல்களால் நிரம்பின. அசுரன் படத்தில் சிவசாமியாக நடித்த தனுஷுக்கு இதில் சிறந்த நடிகருக்கான இன்னொரு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நடிகருக்கு ஒருமுறை தேசிய விருது வாங்க வேண்டும் என்பதே கனவு. அதை தனுஷ் இரண்டாவது முறையும் நிகழ்த்தியிருக்கிறார் என்றால், அவரை ‘நடிப்பு அசுரன்’ என்பதில் தவறேதும் இல்லை!

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Dhanush