முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அழகியலை திருடிவிட்டார்கள்... மம்முட்டி பட இயக்குநர் மீது ஹலிதா ஷமீம் குற்றச்சாட்டு!

அழகியலை திருடிவிட்டார்கள்... மம்முட்டி பட இயக்குநர் மீது ஹலிதா ஷமீம் குற்றச்சாட்டு!

ஹலிதா ஷமீம், லிஜோ ஜோஸ் பெல்லிசேரி

ஹலிதா ஷமீம், லிஜோ ஜோஸ் பெல்லிசேரி

பூவரசம் பீப்பீ, ஏலே படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் மலையாளப் பட இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, தனது படத்தின் லொக்கேஷனையும், அழகியலையும் திருடிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். 

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி என்ற பெயர் அங்கமாலி டைரிஸ் படத்துக்குப் பிறகு இந்தியா முழுவதும் அறியப்படும் பெயரானது. அவரது இ ம யோ, ஜல்லிக்கட்டு, சுருளி படங்கள் விமர்சனரீதியாக பாராட்டப்பட்டன. பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்தப் படங்கள் திரையிடப்பட்டன. அவரது இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் நண்பகல் நேரத்து மயக்கம் படம் சமீபத்தில் வெளியானது. தற்போது அப்படம் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.

படத்தின் பெயர், கதாபாத்திரங்கள், உரையாடல்கள் என நண்பகல் நேரத்து மயக்கத்தில் தமிழ் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த சில குடும்பங்கள் வேளாங்கண்ணிக்கு ஆன்மிகச் சுற்றுலா வருகிறார்கள். அதில் ஒருவர் ஜேம்ஸ். டூர் முடிந்து திரும்பும் வழியில் உண்ட மயக்கத்தில் அனைவரும் கண்ணயர, ஜேம்ஸ் வண்டியை நிறுத்தி கீழிறங்கிச் செல்கிறார். பல மணி நேரம் ஆகியும் அவர் திரும்பாத நிலையில், பக்கத்திலுள்ள கிராமத்துக்கு அவரைத் தேடிச் செல்கிறார்கள்.

இதனிடையில் ஜேம்ஸ் அந்தக் கிராமத்தில், சுந்தரம் என்ற நபரது வீட்டிற்குச் சென்று, சுந்தரம் போலவே, பேசி, நடந்து கொள்கிறார். மலையாளம் மட்டுமே தெரிந்த ஜேம்ஸ் இப்போது சரளமாக தமிழில் பேசுவதுடன், அக்கிராமத்தில் உள்ளவர்களை பெயர், உறவு முதற்கொண்டு அனைத்தும் அறிந்து வைத்திருக்கிறார். சுந்தரம் இரண்டு வருடங்கள் முன் காணாமல் போனவர், இதுவரை அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அப்படியிருக்க, சுந்தரம் என்று சொல்லி, அந்நியர் ஒருவர் சுந்தரம் போலவே பேசி நடந்து கொள்வது அவ்வீட்டில் உள்ளவர்களுக்கு திகைப்பாக இருக்கிறது.

ஜேம்ஸ் வெளியே சென்று திரும்பி வருகையில் அவரது மலையாள குடும்பம் அழைத்துச் செல்ல காத்திருக்கிறது. ஆனால், நான் இந்த ஊர்க்கார சுந்தரம் என சாதிக்கிறார். இறுதியில் அவரை உறங்கச் செய்கிறார்கள். சுந்தரமாக உறங்கி, ஜேம்சாக விழித்தெழும் ஜேம்ஸுடன் அவர்கள் கிளம்பிச் செல்கிறார்கள்.

அறிவியல்பூர்வமாக விடையளிக்க முடியாத இந்தக் கதையில் தமிழ் சினிமாப் பாடல்கள், வசனங்கள் தொடர்ந்து பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கும் கதைக்கும் தொடர்பு இருந்து கொண்டேயிருக்கிறது. முதலில் சுவாரஸியமாக இருக்கும் இது, போகப்போக சிலருக்கு போரடிக்க ஆரம்பித்துவிட்டதாக எழுதியுள்ளனர். ஆனால் பலர், படத்தின் புதிய அனுபவம் சிறப்பாக இருந்ததாக கூறியுள்ளனர். மம்முட்டியின் நடிப்பு, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு இரண்டையும் அனைவரும் பாராட்டியுள்ளனர்.

நண்பகல் நேரத்து மயக்கம் குறித்து பூவரசம் பீப்பீ, ஏலே படங்களின் இயக்குனர் ஹலிதா ஷமீம் பதிவொன்றை எழுதியுள்ளார். அதில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தான் படப்பிடிப்பு நடத்திய இடத்தையும், தனது படத்தின் அழகியலையும் திருடிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

"ஏலே படத்திற்காக முதன் முதலில் ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்கு தயார் செய்து அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அதே கிராமத்தில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே. ஆனால், நான் பார்த்து பார்த்து சேர்த்த அழகியல் முழுவதும் இப்படம் முழுக்க திருடப்பட்டுள்ளது.

அங்கே ஐஸ்காரர் என்றால் இங்கே பால்க்காரர். அங்கே செம்புலி என்றால் இங்கே செவலை. அங்கே அமரர் ஊர்தி பின்னே செம்புலி ஓடியது போல் இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது. நான் அறிமுகப்படுத்திய 'சித்திரை சேனன்' நடிகர்-பாடகர், ஏலே-வில் நடித்த கலைக்குழு பாடகர் கதாபாத்திரம் போலவே, இங்கு மம்மூட்டியுடன் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்.

இதில் படமாக்கப்பட்ட வீடுகள், பல முறை பார்த்து பின் நான் படமாக்கப்பட வேண்டாம் என்று நிராகரித்த வீடுகள். இதுபோல், இரண்டு படத்தையும் ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய உள்ளன. எனக்காக நான் தான் பேச வேண்டும். தவிர்க்க முடியாமல், நானே பேச வேண்டிய சூழலில் இதைப் பதிவிடுகிறேன்.நீங்கள் ஏலே படத்தை நிராகரிக்கலாம். ஆனால் என் சிந்தனையும், நான் தேர்வு செய்த அழகியலும் இரக்கமின்றி திருடப்படும்போது நான் அமைதியாக இருக்கமாட்டேன்" - என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால். ஏலே படத்தின் கதைக்கும், நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் கதைக்கும், எடுத்தவிதத்திற்கும் சம்பந்தமில்லை, இரண்டும் வேறு என சிலர் வாதிட்டுள்ளனர். வேறு சிலரோ, ஒரு கிடாயின் கருணைமனு, மேற்குத் தொடர்ச்சி மலை, கடைசி விவசாயி போன்ற படங்களை கண்டு கொள்ளாமல் மலையாளிகளின் படத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என குற்றம்சாட்டியுள்ளனர்.

ஹலிதா ஷமீம் பூவரசம் பீப்பீ, ஏலே, சில்லுக்கருப்பட்டி போன்ற முக்கியமான திரைப்படங்களை எடுத்தவர். பெல்லிசேரியும் அதேபோல் சிறந்தப் படங்களை தந்தவர். பிளைவுட் விளம்பரம் ஒன்றே, நண்பகல் நேரத்து மயக்கம் எடுப்பதற்கு இன்ஸ்பிரேஷன் எனக் கூறியுள்ளார். இவர் முன்னவரின் படத்தின் லொக்கேஷனையும், அழகியலையும், கதாபாத்திரங்களையும் காப்பியடித்தார் என்பது முக்கியமான குற்றச்சாட்டு. பெல்லிசேரி இதற்கு பதிலளிக்கிறாரா பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment