ப்ரீத்தி ஜிந்தா கைகளில் முத்தமிட்ட ரித்தேஷ் தேஷ்முக்கை, வீட்டிற்கு சென்றதும் தான் என்ன செய்தேன் என்பதை சுவாரஸ்யமாக வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார் நடிகை ஜெனிலியா.
பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு குறை வைக்காத நடிகை ஜெனிலியா டிசோசா, கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உடனான மற்றொரு வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். ப்ரீத்தி ஜிந்தாவும் இடம் பெற்றிருக்கும் அந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் ரித்தேஷ் தேஷ்முக், நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவர்கள் பேசி முடிப்பதற்காக ஜெனிலியா காத்திருக்கிறார். பேசிக் கொண்டிருந்த ரித்தேஷ் திடீரென ப்ரீத்தியின் கைகளை பற்றி முத்தமிடுகிறார். இதை சற்றும் எதிர் பாராத ஜெனிலியா ஒரு நொடி, ‘என்ன நடக்குது இங்க’ என்பது போல பாவனை செய்கிறார்.
சரி வீட்டுக்கு போய் என்ன நடந்தது தெரியுமா என்ற ரீதியில் தற்போது வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார் ஜெனிலியா. அதில் வடிவேலுவை கோவை சரளா அடி வெளுத்து வாங்குவதைப் போல, காட்டப்பட்டுள்ளது. தன் மீது கருணை காட்ட சொல்லி, மனைவிடம் மன்றாடுகிறார் ரித்தேஷ். பிரபல பாலிவுட் தம்பதியினரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்