தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என கொண்டாடப்பட்ட ஜெமினி கணேசனின் நூறாவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
காதல் மன்னன் என கமலஹாசன், அஜித் குமார் பல நடிகர்களும் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டாலும் அவர்கள் அனைவருமே ஜெமினி கணேசன் என்ற ஒப்பற்ற ஒரு திரை ஆளுமையுடனே ஒப்பிடப்பட்டனர்.
எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என இருபெரும் நாயக்கர்கள் தமிழ் சினிமாவில் ஆக்ஷனிலும், நடிப்பிலும் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இணையாக தமிழ் சினிமாவில் தனது காதல் ரசம் சொட்டும் நடிப்பால் ரசிகர்களை சுண்டி இழுத்தவர் ஜெமினி கணேசன்.
குழந்தை முகத்துடன், கள்ளம் கபடமற்ற சிரிப்புடன் திகழும் ஜெமினி கணேசன் தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்று சொன்னால் யாராலும் நம்ப முடியுமா?
ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெமினி கணேசன் பின்னர் ‘மனம் போல மாங்கல்யம்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிக்க தமிழ் சினிமாவில் அவருக்கென தனி ரசிகர் கூட்டம் உருவானது. நடிகர் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் தத்துவ பாடல்களும், அறிவுரை கூறும் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் ஜெமினி கணேசனுக்கும் காதல் பாடல்கள் பெருமளவு கை கொடுத்தது.
பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ஏ.எம் .ராஜன் ஆகியோர் குரல்களில் ஜெமினி கணேசன் நடித்த பாடல்கள் ஜெமினி கணேசனுக்கு என தனி அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.
200 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த ஜெமினி கணேசன் திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னனாகவே தனது வாழ்நாளைக் கழித்தார். நடிகை சாவித்திரியை காதலித்து மணந்து ஜெமினி கணேசன் மேலும் சில திருமணங்கள் செய்து சர்ச்சைகளில் சிக்கினார்.
தனது வாழ்நாளின் இறுதிவரை நடித்து வந்த ஜெமினி கணேசன் வாழ்வின் இறுதிக் காலத்தில் நடித்த மேட்டுக்குடி, அவ்வை சண்முகி ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நகைச்சுவை நடிப்பில் புகழ்பெற்று விளங்கினார். இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதினை வென்றுள்ள ஜெமினி கணேசன், 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது 85-வது வயதில் உயிரிழந்தார். தமிழ் சினிமா உள்ளவரை ஜெமினி கணேசனின் பெயர் நிலைத்திருக்கும் என்பதற்கு அவரின் பாடல் வரிகளே இன்றும் சாட்சியாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gemini Ganesan, Kollywood