சிம்பு - கவுதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணிக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இவர்கள் மூவரும் இணைந்து பணியாற்றிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல் ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படமும், அந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. மீண்டும் இந்தக் கூட்டணி எப்போது இணையும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அமைந்தது ‘கார்த்தி டயல் செய்த எண்’ குறும்படம்.
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக கார்த்தியும், ஜெஸ்ஸியும் ஊரடங்கு காலத்தில் போனில் பேசிக் கொள்ளும் உரையாடல் தான் கதை. இக்குறும்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். யூடியூபில் வெளியிடப்பட்ட இக்குறும்படம் 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.
இதையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 3-ம் தேதி சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க கவிஞர் தாமரை பாடல்கள் எழுதுகிறார்.
நேற்று கவுதம் மேனனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற இத்திரைப்படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளது படக்குழு. இதைப்பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேவேளை ‘காக்க காக்க’ படத்தின் ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’ என்ற பாடலில் இருக்கும் வரிகளைத் தான் டைட்டிலாக வைத்திருப்பதையும் சட்டென கண்டுபிடித்துவிட்டனர்.
‘ஈஸ்வரன்’ படத்தை அடுத்து வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வரும் சிம்பு, அடுத்ததாக ‘பத்து தல’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். அதைத்தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.