பிரபல பாடகியின் பெயரை சொல்லி பல இடங்களில் மோசடி

தெலுங்கானாவில், பிரபல பாடகியின் உறவினர் என்று கூறி, ஒரு பெண்ணிடம் இருந்து ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

  • Share this:
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் இளைஞர் சைதன்யா; இவர் தன்னை ஒரு பாடகர் என்று கூறிக் கொண்டு பேஸ்புக்கில் வலம் வந்துள்ளார். பிரபல பாடகி சுனிதாவுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதால் அவர்களில் சிலரைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார்

அப்படி ஒரு வசதியான பெண்மணியை பேஸ்புக்கில் பின்பற்றிய சைதன்யா, அந்தப் பெண்ணின் வாட்ஸ் ஆப் எண்ணை ரகசியமாக பெற்றுக் கொண்டார். பின்னர் வாட்ஸ் ஆப்பில், சுனிதா படத்தை ஸ்டேட்டசாக வைத்து அந்தப் பெண்மணியைத் தொடர்பு கொண்டுள்ளார்.

கேரளாவில் இயங்கி வரும் தனது அறக்கட்டளைக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று வாட்ஸ் ஆப் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரபல பாடகியே தன்னிடம் கேட்டதால் அதை நம்பிய பெண்மணியும், வாட்ஸ் ஆப்பில் வந்த வங்கிக் கணக்கிற்கு சில தவணைகளில் மொத்தம் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் வரை அளித்துள்ளார்.


பின்னர் பாடகி சுனிதாவிடம் வீடியோ காலில் பேச வேண்டும் என பலமுறை முயற்சி செய்த போது, சைதன்யா எச்சரிக்கை அடைந்து அவரை பிளாக் செய்துள்ளார். சந்தேகமடைந்த பெண்மணி உடனடியாகக் காவல்துறையை அணுக, போலீசார் சைதன்யாவைக் கைது செய்துள்ளனர். இதற்கு முன்பு மேலும் சிலரிடம், சுனிதாவின் உறவினர் என்று கூறி பழகி, சைதன்யா பணம் கறந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், ஹைதராபாத்தில் நிலம் விற்பனைக்கு இருப்பதாகவும் சுனிதாவிடம் கூறி திரைப்படங்களில் பாட வைப்பதாகவும் கூறி பண மோசடி செய்துள்ளார் சைதன்யா. தனது பெயரைச் சொல்லி மோசடி நடப்பதாகவும் ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் ஜூலை இறுதியில், பாடகி சுனிதா ஒரு வீடியோ பதிவு மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.கொரோனாவிற்கு கூட அஞ்ச வேண்டியதில்லை; இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது என வீடியோவில் பாடகி சுனிதா கூறியிருந்தார். கைதான சைதன்யா, பிரபல பாடகி சுனிதாவின் பெயரைச் சொல்லி யார் யாரிடம் எவ்வளவு பணம் கறந்தார்; கறந்த பணத்தை என்ன செய்தார் என போலீசார் தங்கள் பாணியில் விசாரித்து வருகின்றனர்
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading