Home /News /entertainment /

கொரோனாவை தாண்டி ஹவுஸ்ஃபுல் போர்டை தொங்கவிட்ட நான்கு திரைப்படங்கள்

கொரோனாவை தாண்டி ஹவுஸ்ஃபுல் போர்டை தொங்கவிட்ட நான்கு திரைப்படங்கள்

ஹவுஸ்ஃபுல் போர்டை தொங்கவிட்ட திரைப்படங்கள்

ஹவுஸ்ஃபுல் போர்டை தொங்கவிட்ட திரைப்படங்கள்

கொரோனா இரண்டாம் அலைக்குப் பின்  திரையரங்குகளுக்கு வர தயங்கிக் கொண்டிருந்த ரசிகர்களை இந்த நான்கு திரைப்படங்களும் திரையரங்கை நோக்கி வர வைத்துள்ளன.

  • News18
  • Last Updated :
கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய சேதத்தை இந்தியாவில் ஏற்படுத்தியது. பொருளாதாரரீதியாகவும், உயிரிழப்புரீதியாகவும் ஈடுசெய்ய முடியாத இழப்பை நாடு சந்தித்தது. திரையுலகம்  முற்றிலுமாக முடங்கிப் போனது. பிப்ரவரி மாதம்தான் அதாவது சென்ற மாதம்தான் திரையுலகு ஓரளவு மீள ஆரம்பித்தது. நான்கு திரைப்படங்கள் திரையரங்குகளில் ரசிகர்களை பெருமளவு அழைத்து வந்தன; திரையரங்குகளின் வெளியே ஹவுஸ்ஃபுல் போர்டுகள்  தொங்க ஆரம்பித்தன. இந்த சாதனையை சாத்தியப்படுத்திய அந்த நான்கு திரைப்படங்களும் நான்கு மொழிகளைச் சார்ந்தவை.

பவன்கிந்த் (மராத்தி)

பெப்ரவரி 18 வெளியான மராத்தி திரைப்படம் பவன்கிந்த். மராட்டிய வீரனான பாஜி பிரபு தேஷ்பாண்டேயின் வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. மராத்தி திரைப்படங்கள் சத்தமில்லாமல் திரையரங்கைவிட்டு வெளியேறுவதுதான் வழக்கம்.  மாறாக இந்தத் திரைப்படம் மகாராஷ்டிராவில் நல்ல வசூலை பெற்று வருகிறது. முதல் பத்து தினங்களில் மகாராஷ்டிராவில் சுமார் 20 கோடிகளை இந்தப் படம் வசூலித்ததாக ட்ரேட் அனலிஸ்ட்கள் கூறுகிறார்கள். இத்தனைக்கும் மகாராஷ்டிராவில் இப்போதும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் வெளியான மராத்திய திரைப்படம் எதுவும் இந்த அளவு வெற்றி பெற்றதில்லை. அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் தொடர்ந்து வெற்றி நடைபோடுகிறது.



வலிமை (தமிழ்)

பெப்ரவரி 24ஆம் தேதி அஜித் நடித்த வலிமை வெளியானது. இரண்டு வருடங்களாக அஜித்தின் படத்திற்கு அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். கட்அவுட், தோரணம், பட்டாசு, போஸ்டர் என அமர்க்களப்படுத்தி வலிமை வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடினர். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் முதல் நான்கு நாட்களில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. நூறு கோடிகளை படம் முதல் நான்கு நாட்களில் தாண்டியதாக ட்ரேட் அனலிஸ்டுகள் கூறுகிறார்கள். துல்லியமான வசூல் தெரியவில்லை. எனினும் 100 கோடியை படம் முதல் நான்கு நாட்களில் கடந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வார நாட்களில் படத்திற்கான வரவேற்பு குறைந்து உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் வலிமைக்கு வரவேற்பு குறைவாகவே உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா இரண்டாம் அலைக்குப்  பிறகு ரசிகர்களை பெருமளவில் திரையரங்கிற்கு அழைத்து வந்ததும், தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளை தந்ததும் வலிமையே.



கங்குபாய் கத்தியவாடி (இந்தி)

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தயாரான இந்தி படம் கங்குபாய் கத்தியவாடி. வலிமை வெளியானதற்கு அடுத்த நாள் பெப்ரவரி 25 கங்குபாய் வெளியானது. கங்குபாய் என்ற டைட்டில் கதாபாத்திரத்திரத்தில் அலியா பட் நடித்திருந்தார்.  மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியில் பாலியல் தொழிலாளியாக இறந்த கங்குபாய் என்பவரின் வாழ்க்கை வரலாறை தழுவி  இந்தப் படம் எடுக்கப்பட்டது. பாலியல் தொழிலில் இருந்து அரசியலுக்கு வந்து அதிகாரமிக்க பெண்மணியாக இருந்தவர் கங்குபாய். இந்தப் படத்தை குறித்து மிக மோசமான விமர்சனங்களை கங்கனா ரணவத் முன்வைத்திருந்தார். அலியா பட்டை தனது கொச்சையான மொழியில் வசைபாடி இருந்தார். படத்திற்கு செலவளித்த  கோடிகள் அனைத்தும்  வேஸ்ட், வீணாப்போகும் என சாபமிட்டிருந்தார். ஆனால், படம் வெளியான நாள் முதல் மிகப்பெரிய வசூலை பெற்று வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. சஞ்சய் லீலா பன்சாலியின் இன்னொரு வெற்றிப் படமாக இது அமைந்துள்ளது.



பீம்ல நாயக் (தெலுங்கு)

பீம்ல நாயக்  மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும்  திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக். பிருதிவிராஜ் நடித்திருந்த வேடத்தில் ராணாவும், பிஜூ மேனன் நடித்த வேடத்தில் பவன் கல்யாணும் நடித்திருந்தனர். ஆக்ஷன் அதிரடி திரைப்படமான இது வெளியான முதல் நாளில் இருந்தே பட்டையை கிளப்பி வருகிறது. தெலுங்கு மாநிலங்களில் படம் பல சாதனைகளை உடைத்துள்ளது.  வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது. வெளியான ஒரு வாரத்திலேயே யுஎஸ்ஸில் 15 கோடிகளுக்கு மேல் இத்திரைப்படம் வசூலித்து சாதனை படைத்துள்ளது. வார நாட்களிலும் கூட்டம் குறையாமல் படம் வெற்றி நடை போடுவதாக ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.



Also read... ரஜினி உள்பட யாருமே உதவி செய்யவில்லை - தயாரிப்பாளர் ஜிவி தற்கொலை குறித்து பேசிய கே.டி. குஞ்சுமோன்

கொரோனா இரண்டாம் அலைக்குப் பின்  திரையரங்குகளுக்கு வர தயங்கிக் கொண்டிருந்த ரசிகர்களை இந்த நான்கு திரைப்படங்களும் திரையரங்கை நோக்கி வர வைத்துள்ளன. அரங்கு நிறைந்த காட்சிகளாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளன. வருகிற மார்ச் 10 வெளியாகவிருக்கும்  எதற்கும் துணிந்தவனும்,  அதற்கு அடுத்த நாள் மார்ச் 11 வெளியாகும் ராதே ஷ்யாம் திரைப்படமும் இதே மேஜிக்கை நிகழ்த்தும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி