அப்பா – மகன் பாசத்தை அடிப்படையாக கொண்டு தமிழில் தெய்வ மகன் முதல் டான் வரை எண்ணற்ற திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மனதை வென்றதோடு மட்டுமல்லாமல் , வசூல் சாதனைகளை படைத்துள்ளது. அதில் மக்கள் மனதை நெகிழ செய்த ஒரு திரைப்படம்தான் சேரன் இயக்கத்தில் வந்த ’ தவமாய் தவமிருந்து’. 'கணக்கு பாடம் தெரியாம பரிட்சையில தோத்தேன்' தொடங்கி 'உங்கள பெத்ததே சந்தோசம்' என்பது வரை கனவுகளும், வலிகளுமாய் நிறைந்திருந்தது இத்திரைப்படம்.
அப்பாவின் கனவை நிறைவேற்ற முயற்சிக்கும் மகனாக அஜித் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் ’ கிரீடம்’...’என் வானத்தில் ஒரு நட்சத்திரம்’ என்ற வரிகளோடு தன் மகனை பார்த்து ரசிக்கும் ராஜ்கிரணின் உள்ளார்ந்த அன்பு…. இரவில் படிக்கும் பிள்ளைக்கு டீ கொடுப்பது, தந்தையுடன் அஜீத் வாக்கிங் செல்வது என அப்பா-மகன் உறவை இன்னுமொரு நண்பனாய் காட்டியது ’ கிரீடம்’.
’தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ என அப்பாவை மகன் கொண்டாடிய திரைப்படம் ‘ கேடி பில்லா கில்லாடி ரங்கா’. எதார்த்த வாழ்வை போல் எப்போதும் எதிரும் புதிருமாக இருக்கும் அப்பாக்களுக்கும் மகன்களுக்குமான பாச போராட்டத்தை நெஞ்சுருக சொல்லியிருக்கும் இத்திரைப்படம்.
தந்தைக்கும் மகனுக்கு இருக்கும் உறவைச் சுற்றி உன்னதமான நட்பை வெளிக்கொண்டு வந்து அதில் இருக்கும் தவறையும் சுட்டிக்காட்டி திரை ரசிகர்களின் பாராட்டைப்பெற்ற திரைப்படம் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’. தன் மகனான ஜெயம் ரவியை தன் கைக்குள்ளேயே வைத்திருக்க ஆசைப்படும் பிரகாஷ்ராஜுக்கும் .. சுயமாக வாழ ஆசைப்படும் ஜெயம் ரவிக்குமான சொல்லாத பாசத்தை சொல்லியது ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’.
தந்தை மகனுக்கிடையேயான சுவையான நிகழ்வுகளை சொன்ன ’வாரணம் ஆயிரம்’.தான் ரவுடியாக இருந்தாலும் தன் மகன் முன்னேற வேண்டும் என போராட துடிக்கும் தந்தையின் கதையை சொன்ன ‘பிகில்’..
தன் மகனுக்கு கல்விதான் முக்கியம் என போதித்த ‘அசுரன்’ என தந்தைக்கும் மகனுக்குமான பாசத்தை சொன்ன திரைப்படங்களுக்கெல்லாம் டானாக இந்த வரிசையில் இணைந்தது சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்திருக்கும் ‘டான்’ திரைப்படம். இப்படி அனைத்து திரைப்படங்களும் ஒரு சேர சொன்னது என்னவென்றால் 'நமக்கெனவே வந்த நண்பன் தந்தை..' என்பதே.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.