Home /News /entertainment /

HBD Dhanush : விமர்சித்தவர்களை வியக்க வைத்த கலைஞன்- ஹேப்பி பர்த் டே தனுஷ்

HBD Dhanush : விமர்சித்தவர்களை வியக்க வைத்த கலைஞன்- ஹேப்பி பர்த் டே தனுஷ்

தனுஷ்

தனுஷ்

தமிழில் வடசென்னை, அசுரன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் தனது மிரட்டலான நடிப்பை வழங்கி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

  உலக திரையரங்கில் இந்திய சினிமாவின் அடையாளமாக உருவெடுத்து வரும் நடிகர் தனுஷ் தனது 38வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்நாளில் அவரது திரைப் பயணம் குறித்து பார்க்கலாம்.

  2002 ஆம் ஆண்டு தனுஷ் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுஷை பார்த்த யாரும் இவர் தேசிய விருது வாங்குவார் என்றோ, ஹாலிவுட் வரை சென்று அசத்துவார் என்றோ சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டார்கள். மெலிந்த தேகம், கலை குன்றிய முகம், நடிப்பை வெளிப்படுத்த முடியாத கூச்ச சுபாவம் என பல விமர்சனங்கள் தனுஷை நோக்கி முன்வைக்கப்பட்டது.

  காதல் கொண்டேன்


  2003-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல்கொண்டேன் திரைப்படத்தில் அதே தோற்றத்துடன் தனுஷ் வெளிப்படுத்திய நடிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. எனினும் தமிழ் சினிமாவில் நிலையான ஒரு இடத்தைப் தனுஷ் பிடிக்க முடியும் என எவரும் நம்பவில்லை. அடுத்தடுத்து வெளியான ட்ரீம்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வியை தழுவினாலும் தான் தேசிய விருதை வெல்வேன் என அப்பொழுதே சில நேர்காணல்களில் உறுதியுடன் சொன்னார் நடிகர் தனுஷ்.

  தேவதையை கண்டேன், திருடா திருடி, திருவிளையாடல் உள்ளிட்ட திரைப்படங்கள் தனுஷிற்கு வர்த்தகரீதியான வெற்றிகளை ஈட்டித் தந்தது. இந்த சமயத்தில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் தனுஷின் ஆகச்சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்தது. புதுப்பேட்டை திரைப்படத்திற்கு வெளியானபோது கிடைத்த ரசிகர்களை காட்டிலும் ,இன்றைய தேதியில் புதுப்பேட்டை திரைப்படத்திற்கும் தனுஷிற்கும் ஏராளமான ரசிகர் கூட்டம் இன்றளவும் உண்டு. இதன் காரணமாகவே தனுஷ் செல்வராகவன் மீண்டும் இணையும் திரைப்படம் புதுப்பேட்டை திரைப்படத்தின் தரத்தை மிஞ்சுமா என பலரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

  தனுஷ்


  புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பின்னர் இயக்குனர் வெற்றிமாறனுடன் தனுஷ் கூட்டணி அமைத்த பொல்லாதவன் திரைப்படம் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இரண்டு பேரின் வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. பொல்லாதவன் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் தனது உடல் அமைப்பு குறித்து கிண்டல் செய்த அனைவருக்கும் பதில் சொல்லும் விதமாக சட்டையைக் கழட்டி சண்டைபோட்டு கெத்து காட்டியிருந்தார் தனுஷ். இதன்பின்னர் வெற்றிமாறன் தனுஷ் கைகோத்த ஆடுகளம் திரைப்படம் தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது இந்திய அளவில் ஒரு அங்கீகாரத்தை உருவாக்கி கொடுத்தது.

  ஆடுகளம்


  இதற்கிடையில் மூனு திரைப்படத்திற்காக அனிருத் இசையில் தனுஷ் எழுதி பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் யூடியூப் வலைதளம் பெரிய அளவில் அறிமுகமாகாத காலகட்டத்திலேயே உலகமெங்கும் ஹிட்டடித்து பல சாதனைகளையும் படைத்தது. இந்தியாவின் பெரும் பணக்காரரான டாட்டா விருந்துக்கு அழைத்தது, ஜப்பான் பிரதமர் தனுஷ் பார்க்க அழைப்பு விடுத்தது என உலகமெங்கும் பிரபலம் அடைந்தார்.

  இதன்பின்னர் 2013 ஆம் ஆண்டில் ராஞ்சனா திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமா தனுஷிற்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு வழங்கியது. பின்னர் அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் திரைப்படத்தில் போட்டி போட்டு நடித்த தனுஷ் இந்திய அளவில் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றார். தொடர்ந்து தமிழில் வடசென்னை, அசுரன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் தனது மிரட்டலான நடிப்பை வழங்கி வரும் தனுஷ் கார்த்திக் நரேன், ராம்குமார் ஆகியோர் இயக்கங்களில் அடுத்தடுத்த திரைப்படங்களில் மேலும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த காத்துக்கொண்டிருக்கிறார்.

  மாரி தனுஷ்


  ஹாலிவுட்டில் தயாராகிவரும் கிரே மேன் திரைப்படத்தில் நடித்துவரும் தனுஷ், உலக அரங்கில் இந்திய திரையுலகிற்கு மேலும் பல சிறப்புகளை சேர்த்துக் கொண்டே செல்கிறார். நடிக்கவே லாயக்கற்ற நபர் என விமர்சனம் வைக்கப்பட்ட நிலையை மாற்றி தனது நடிப்பில் லயிக்க வைப்பவர் என பாராட்ட வைத்திருக்கும் தனுஷ் தன்னம்பிக்கையின் அடையாளம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Actor dhanush, Dhanush, Happy BirthDay, Tamil Cinema

  அடுத்த செய்தி