1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் திரைப்படம் வெளியான போது படத்தின் இயக்குனர் ஷங்கருக்கு இணையாக அதன் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனும் பிரபலமானார். ஷங்கருக்கு அது முதல் படம். கே.டி.குஞ்சுமோன் அதற்கு முன் தமிழில் இரு வெற்றிப் படங்களை தயாரித்திருந்தார். வசந்தகாலப் பறவை மற்றும் சூரியன்.
பச்சைப்பா கல்லூரி மாணவரான பவித்ரனை இயக்குனராக அறிமுகப்படுத்திய வசந்தகாலப் பறவை திரைப்படம் 1991 வெளியாகி வெற்றி பெற்றது. தேவா இசையில் அனைத்துப் பாடல்களும் ஹிட். அத்தனை பிரபலம் அல்லாத கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்தை வசந்தகாலப் பறவை அனைவரும் அறிந்த நாயகனாக்கியது. அதில் டான்சராக பிரபுதேவாவும் தலைக்காட்டினார். மலையாள நடிகர் ராஜன் பி.தேவ் தமிழில் பிரபலமானதும் இந்தப் படத்தில்தான்.
அடுத்த வருடம் அதே பவித்ரன் இயக்கத்தில் சூரியன் படத்தை தயாரித்தார் கே.டி.குஞ்சுமோன். திரையிட்ட இடங்களில் எல்லாம் மக்கள் வெள்ளம் அலைமோதி சரத்குமாருக்கு கேரியர் லிப்டாக சூரியன் அமைந்தது. இதில் பிரபுதேவாவை தனிப்பாடல் ஒன்றுக்கு நடனமாட வைத்தார் கே;.டி.குஞ்சுமோன். அந்தப் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து அதே சரத்குமாரை வைத்து, பவித்ரன் இயக்கத்தில் அடுத்தப் படத்தை அறிவித்தார் கே.டி.குஞ்சுமோன். பவித்ரன் தனது சொந்தப் பட வேலைகளில் கவனம் செலுத்தியதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். பவித்ரன் சரத்குமாரை வைத்து ஐ லவ் இந்தியாவை எடுக்க, கே.டி.குஞ்சுமோன் சூரியனில் பவித்ரனின் உதவி இயக்குனராக இருந்த ஷங்கரை வைத்து ஜென்டில்மேனை தயாரித்தார். ஐ லவ் இந்தியா தோல்வியை தழுவ, ஜென்டில்மேன் மாபெரும் வெற்றிப் படமானது. பிரபுதேவா இதிலும் ஒரு பாடலுக்கு ஆடி தமிழகத்தை தனது ஆட்டத்திற்கு தலையசைக்க வைத்தார்.
ஜென்டில்மேன் கிளைமாக்ஸை எப்படி அமைப்பது என்பதில் ஷங்கருக்கும், குஞ்சுமோனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, முதல் படம் என்பதால் தயாரிப்பாளரின் விருப்பப்படி கிளைமாக்ஸை எடுத்தார் ஷங்கர். கிளைமாக்ஸும், படமும் வரவேற்பை பெற்றதால் அந்த கருத்து வேறுபாடு மறைந்து, காதலன் படத்தில் இருவரும் மறுபடி இணைந்தனர். இதில் பிரபுதேவா நாயகன். முதல் நான்குப் படங்களில் பவித்ரன், சரத்குமார், ரமேஷ் அரவிந்த், ஷங்கர் என பலருக்கு பிரகாசமான திரைவாழ்க்கையை குஞ்சுமோன் ஏற்படுத்தித் தந்தார்.
ஷங்கருடன் உறவை முறித்துக் கொண்டபின் கதிர் இயக்கத்தில் காதல் தேசம் படத்தை எடுத்தார். அதுவரை ஏஆர்எஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்றிருந்த தனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் என மாற்றிக் கொண்டார். காதல் தேசமும் வெற்றி பெற்றது. அதற்குப் பின் சக்தி, ரட்சகன், நிலாவே வா, என்றென்றும் காதல் படங்களை தயாரித்தார். இதில் கடைசி இரு படங்கள் விஜய் நடித்தது. இந்தப் படங்களின் ஒப்பந்தத்தின் போது குஞ்சுமோனுக்கும், எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டது. அடுத்தவர்களை எதற்கு நமது பணத்தில் ஹீரோவாக்க வேண்டும் என்று தனது மகன் எபியை நாயகனாக்க தீர்மானித்தார் கே.டி.குஞ்சுமோன்.
மற்றவர்கள் படங்களை பிரமாண்டமாக எடுப்பவர், சொந்த மகனின் அறிமுகத்தை எப்படி திட்டமிட்டிருப்பார் என சொல்லத் தேவையில்லை. எபிக்கு ஜோடி சிம்ரன், ஒரு பாடலுக்கு இந்தியின் அப்போதய முன்னணி நடிகை கரீஷ்மா கபூர் என தடபுடலாக படம் ஆரம்பிக்கப்பட்டு, பாடல்களும், ட்ரெய்லரும் 1999 வெளியானது. குஞ்சுமோனின் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக கோடீஸ்வரன் வெளியாகவில்லை. இந்தப் படம் தயாரிப்பில் இருக்கையில் எபி, ஷாலினி காம்பினேஷனில், என் இதயத்தில் நீ என்ற படத்தை அறிவித்தார். அது அறிவிப்போடு நின்றது. அதன் பிறகு எபி, ப்ரியங்கா த்ரிவேதியை வைத்து சுவாசம் என்ற படத்தை அறிவித்தார். சிம்புவின் தொட்டி ஜெயாவை தெலுங்கில் எபியை வைத்து ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். இதில் எதுவும் கரைசேரவில்லை. ஜென்டில்மேன் ஃபிலிம்ஸ் மூழ்கிய கப்பலானது. 1998 இல் வெளியான நிலாவே வா படம் 1.5 கோடியும், 1999 வெளியான என்றென்றும் காதல் 1.7 கோடியும் நஷ்டம் ஏற்படுத்தியதாகவும், அதுவே தனக்கு பின்னடைவை தந்ததாகவும் பல வருடங்களுக்குப் பிறகு பேட்டியொன்றில் குஞ்சுமோன் குறிப்பிட்டார். ஆனால், சிந்து நதிப்பூ, ரட்சகன், சக்தி ஆகிய படங்களின் தோல்வியும், கோடீஸ்வரனில் குஞ்சுமோன் அகலக்கால் வைத்ததுமே அவரால் படம் தயாரிக்காமல் போனதற்கு முக்கிய காரணம்.
பலருக்கு திரைத்துறையில் முகவரி தந்த குஞ்சுமோனால், தனது மகனை திரையில் அறிமுகப்படுத்த முடியவில்லை என்பது ஆகப்பெரும் சோகம். 1999 இல் என்றென்றும் காதலோடு தயாரிப்பிலிருந்து விலகியவர், மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜென்டில்மேன் 2 படத்தை கீரவாணியின் இசையில் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். 300 படங்களுக்கு மேல் மலையாளத்தில் விநியோகித்து, பத்துக்கு மேற்பட்ட மலையாளப் படங்களை தயாரித்து, தமிழில் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்ற குஞ்சுமோன் மீண்டு வர வேண்டும் என்பதே அவரை அறிந்தவர்களின் ஆசையும், விருப்பமும். நடக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
Also read... 1200 படங்கள்... கோலிவுட்டில் முடிவுக்கு வந்தது ஜூடோ ரத்தினம் எனும் ஒரு சண்டை சகாப்தம்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema