தயாரிப்பதை நிறுத்தி விட்டு படங்களை வாங்குவதில் கவனம் செலுத்துவது குறித்து உதயநிதி
ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சினிமாத்துறையில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என பன்முகம் கொண்ட உதயநிதி ஸ்டாலின், தற்போது படங்களை விநியோகிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் உருவான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வரும் 20-ம்தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் நியூஸ் 18-க்கு பேட்டியளித்த உதயநிதி சினிமா தொடர்பான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
எங்களுக்கும் சன் பிக்சர்ஸ்-க்கும் 4ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்படி, சன்பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கும். ரெட்ஜெயன்ட் அதனை வெளியிடும். கொரோனா காரணமாக ஏற்கனவே உருவாக்கத்தில் இருந்த படங்கள் வெளியிடப்படாமல் தேங்கி விட்டன.
சன்பிக்சர்ஸ் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிப்பதால் அதனை நான் வெளியிடும்போது, விமர்சனம் எழுகிறது. சன் பிக்சர்ஸை தவிர்த்து, சிறிய பட்ஜெட் படங்கள் என்ற அளவில் எஃப்.ஐ.ஆர். படத்தை வெளியிட்டோம். அது வெற்றி பெற்றது. லைகா உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது படங்களை வெளியிடுமாறு ரெட் ஜெயன்ட்டை கேட்டுக் கொண்டன. ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் ஏதோ வலுக்கட்டாயமாக படங்களை கைப்பற்றுவதாக தோன்றலாம்.
இதையும் படிங்க - Exclusive : அரசியல் செல்வாக்கால் பெரிய பட்ஜெட் படங்களை ரெட் ஜெயன்ட் மட்டுமே வாங்குகிறதா? உதயநிதி பதில்
கமலின் விக்ரம் படத்தை பொருத்தவரை நானே கமல் சாரிடம் போன் செய்து, நான் படத்தை வெளியிட ஆர்வமாக இருப்பதாக கூறினேன். அவரும் நீங்கள் வெளியிடுவதாக இருந்தால் தாராளமாக அதற்கு சம்மதிக்கிறேன் என்றார். லைகாவும், சிவகார்த்திகேயனும், டான் படத்தை ரிலீஸ் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்கள். அதன் அடிப்படையில் டான் படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிட்டது.
இதையும் படிங்க - கே.ஜி.எஃப். 2 டைரக்டர், பாகுபலி பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் 'சலார்' படத்தின் சூப்பர் அப்டேட்...
எனக்கு வெளிப்படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தன. தேனான்டாள் முரளி சாருக்கு ஒரு படம், லைகாவுக்காக இப்படை வெல்லும் படம், கண்ணை நம்பாதே என மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் படத்தில் நடித்துள்ளேன்.
நேர்காணல் வீடியோவை பார்க்க...
பெரிய ஹீரோக்களின் சம்பளம் வேற லெவலுக்கு போய் விட்டது. ஒரு பெரிய பட்ஜெட் படத்தின், 60-70 சதவீதம் ஒருவருக்கே போய் விடுகிறது. இதனால் தான் எதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும்?, நமக்கு படத்தை தயாரித்து வழங்க ஆட்கள் இருக்கிறார்கள். நாம் ரிலீஸ் மட்டும் செய்து விடலாம் என்ற முடிவில் உள்ளேன். இந்த விஷயத்தில் ஹீரோக்களை மட்டும் குறை சொல்ல முடியாது. ஹீரோக்கள் கேட்கும் சம்பளத்தை தருவதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.