"மதுரை பாஷையால் கிடைத்த தேசிய விருது" : கேடி என்கிற கருப்புதுரை பட குழந்தை நட்சத்திரம் நாக விஷால் நெகிழ்ச்சி

நாக விஷால்

மதுரையில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த நாக விஷால் தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருது வென்று சாதித்து உள்ளார். 14 வயதில் படிப்புடன் சேர்த்து நடிப்பிலும் அவர் ஜொலித்தது எப்படி?

  • Share this:
மதுரையில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த நாக விஷால் தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருது வென்று சாதித்து உள்ளார். 14 வயதில் படிப்புடன் சேர்த்து நடிப்பிலும் அவர் ஜொலித்தது எப்படி?

மதுரை வண்டியூர் யாகப்பா நகர் பகுதியில் தாய் மைதிலி மற்றும் 3 சகோதரர்கள் அடங்கிய ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்த நாக விஷாலுக்கு, 2019 ல் உறவினர் ஒருவரின் மூலம் இயக்குனர் மதுமிதாவை சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது.

கேடி என்கிற கருப்பு துரை படத்தில் நடிகர் மு. ராமசாமியுடன் சிறுவன் கதா பாத்திரத்தில் நடிக்க சுமார் 250 சிறுவர்களை அழைத்துள்ளனர். அவர்களில் நாக விஷால் எப்படி தேர்வானார் என்று அவரே சொல்கிறார்...

"குற்றாலத்தில் என் அம்மாவின் தோழி ஒருவர் ஆடிஷன் உள்ளதாக கூறி என்னை அழைத்து சென்றார். எனக்கு நடிப்பெல்லாம் பிடிக்காது என கூறியும், கட்டாயமாக என்னை அழைத்து வந்து நடிக்க வைத்தனர். எனக்கான முதல் காட்சி பயிற்சியின் போது ஒரு சீன் கொடுத்தார்கள். அந்த சீனில், 'ராமசாமி ஒரு இடத்தில் படுத்திருப்பார். அவரை எழுந்திருக்க சொல்ல வேண்டும். அவ்வளவு தான் எனக்கான காட்சி. அப்போது, எந்திரிங்க ஐயா, இது என்னுடைய இடம் என்று மரியாதையாக ஏதேதோ சொல்லிப்பார்த்தேன். எதுவும் வேலைக்கு ஆகவில்லை. பின், கடைசியாக மதுரை பாஷையில் டேய் எந்திரிடா என்று சொன்னேன்'. அது இயக்குனருக்கு ரொம்ப பிடித்து விட்டது. உடனே என்னை தேர்வு செய்து விட்டார். அதன்பிறகு 10 நாட்கள் சென்னைக்கு அழைத்து சென்று பயிற்சி அளித்தார்கள். முதல்நாள் ஷூட்டிங் அன்று மிகவும் பயமாக இருந்தது. பின் அடுத்தடுத்த நாட்களில் எனக்கு பழகி விட்டது.

கேடி என்கிற கருப்புதுரை பட குழந்தை நட்சத்திரம் நாக விஷால்


முதலில் எனக்கு படம் நடிக்க பிடிக்கவில்லை. ஆனால், இவ்வளவு விருது கிடைக்கும் என தெரிந்திருந்தால் இன்னும் நிறைய படங்கள் நடித்து இருப்பேன்" என்றவர்,

"எனக்கு தேசிய விருது கிடைத்து உள்ளதாக நேற்று போன் வரும்போது நான் வெளியில் இருந்தேன். அம்மா சொல்லும் போது ஏதோ அவார்டு தான என விட்டுவிட்டேன். பின்னர் டிவிக்களில் பார்க்கும் போது தான் எனக்கே தெரிந்தது இந்த விருது எவ்வளவு பெரியது என்று" என மகிழ்ச்சியுடன் கூறினார்.

கேடி என்கிற கருப்பு துரை படத்தில் புரோட்டா கடைகாரராக நடித்திருந்த சக நடிகர் கிருஷ்ணா கூறுகையில்,

"மதுரையில் இருந்து சென்று இவர் தேசிய விருது வென்றுள்ளது மிக பெருமையாக உள்ளது.இவரிடம் நடிப்பை வாங்கிய விதம் காரணமாகவே இப்படி ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. நடிப்பதற்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருந்தார் இயக்குனர்.படத்தில் புரோட்டா கடை சீனில், அவராகவே கிண்டலாக தொடையை தட்டி பேசிய நாக விஷால் உடல்மொழி எல்லோருக்கும் மிகவும் பிடித்துப் போனது. இவருக்கு கிடைத்துள்ள இந்த விருதை படக்குழுவினர் அனைவருக்கும் கிடைத்த விருதாகவே கருதுவதாக இயக்குனர் மதுமிதா கூறுகிறார்" என பெருமையுடன் கூறினார்.

நாக விஷாலின் தாய் மைதிலி பேசுகையில், "பள்ளி விடுமுறை நாட்களில் தான் இந்த படம் எடுக்கப்பட்டது. படம் இவ்வளவு விருது வாங்கும் என நினைக்கவில்லை. இந்த நேரத்தில் படக்குழுவினருக்கு நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்முறையாக படத்தை பாம்பேயில் பார்க்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வழிந்தது. என் பையன் இவ்வளவு பெரிய ஆளாக வருவான் என நான் நினைக்கவில்லை.என்னுடைய வறுமையான குடும்ப சூழலில் மிகுந்த சிரமத்துடன் தான் வாழ்க்கை நடத்தி, என்னுடைய நான்கு குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போது, என்னுடைய கடைசி மகன் மிகப்பெரிய இடத்திற்கு என்னை கொண்டு சென்று விட்டான். உலகமே மதிக்கும் அளவிற்கு ஆளாகி விட்டான். என் பையன் தான் என்னை முதன் முதலாக விமானத்தில் கூட்டிப் போனான். என்னை ஒரு ஸ்டார் ஓட்டலில் தங்க வைத்தான். மிக சின்ன வயதிலேயே என்னை மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு சென்று விட்டான்" என கண்கலங்க கூறினார்.

கேடி என்கிற கருப்பு துரை படத்தின் வாயிலாக கிடைத்த அறிமுகம் மூலம், கொம்பு வச்ச சிங்கம் மற்றும் சில குறும்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கேடி படத்தில் நீங்கள் நடித்த, உங்களுக்கு பிடித்த ஒரு வசனத்தை பேசுங்கள் என கேட்டோம். அதற்கு,'எனக்கு நானே டிவி, நானே ரிமோட்டு. எனக்கு என்ன வேணும்னு ஐயா கிளியரா இருப்பேன்" என்று அவருக்கே உரிய மதுரை பாஷையில் பேசிக் காண்பித்தார். அவர் சொன்னது வெறும் வசனம் அல்ல, அது தான் அவர் வழக்கையும்.

இந்த மிகச்சிறு வயதிலேயே தேசிய விருது இவரை தேடி வந்துள்ள நிலையில், இவருக்கு ஒரு ஆசை உள்ளதாம். அது, நடிகர் அஜித்துடன் நடிப்பதாம். நடிப்பில் இன்னும் தேசிய விருது பெறாத நடிகர் அஜித்தை தேடி, தேசிய விருது பெற்ற ஒரு நடிப்பே வருகிறது என்பது மதுரைக்கு மற்றுமொரு மகுடம் தான்!
Published by:Arun
First published: