ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தீப்பிடிக்கும் திரைக்கதை.. வசனம்.. அசரடித்த சிவாஜி! இன்று பார்த்தாலும் பட்டையைக் கிளப்பும் பராசக்தி!

தீப்பிடிக்கும் திரைக்கதை.. வசனம்.. அசரடித்த சிவாஜி! இன்று பார்த்தாலும் பட்டையைக் கிளப்பும் பராசக்தி!

பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன்

பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன்

70 years of Parasakthi: இந்த சாதாரண கதையை தனது திரைக்கதை, வசனத்தால் தீப்பிடிக்க செய்தார் மு.கருணாநிதி. அதுவரை பாடல்கள் கோலோச்சியிருந்த திரைவானில் வசனங்கள் வாள் வீசத் தொடங்கின.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பராசக்தி 1952, அக்டோபர் 17 தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இன்றுடன் படம் வெளியாகி 70 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 700 வருடங்களானாலும், தமிழ் திரைவரலாற்றில் மட்டுமின்றி, தமிழக அரசியல் வரலாற்றிலும் பராசக்திக்கு நிலைத்த இடம் உண்டு.

  ஐம்பதுகளில் இரண்டு நாடகங்கள் தமிழகத்தில் புகழ்பெற்றிருந்தன. ஒன்று, கணேசன் நடித்த என் தங்கை. இன்னொன்று எம்.எஸ்..பாலசுந்தரம் எழுதிய பராசக்தி. இரண்டுமே தங்கைகளைப் பற்றிய நாடகம் என்பதால் இரண்டின் கதையையும் ஒன்றாக்கி திரைப்படமாக்க முயற்சி நடந்தது. இதனை பாலசுந்தரம் விரும்பவில்லை. என் தங்கை எம்ஜிஆர் நடிப்பில் அதே பெயரில் சினிமாவாகி 1952 வெளியானது. பராசக்தியும் அதே பெயரில் திரைப்படமாகி அதே 1952 திரைக்கு வந்தது.

  பராசக்தி வழக்கமான ஒரு அழுகைக் கதை. தமிழ்நாட்டில் இருக்கும் தங்கையின் திருமணத்துக்கு பர்மாவில் இருக்கும் சகோதரன் கலந்து கொள்ள வருவதும், போர்ச் சூழல் காரணமாக குறிப்பிட்ட நாளில் அவனால் வர முடியாமல் போய், பொருளையும் இழந்து நிர்கதியாவதும் ஒருபுறம். திருமணமான தங்கை புருஷ்னையும், தந்தையையும் இழந்து கைக்குழந்தையுடன் கஷ்டப்படுவது மறுபுறம்.

  இந்த சாதாரண கதையை தனது திரைக்கதை, வசனத்தால் தீப்பிடிக்க செய்தார் மு.கருணாநிதி. அதுவரை பாடல்கள் கோலோச்சியிருந்த திரைவானில் வசனங்கள் வாள் வீசத் தொடங்கின. பிச்சையெடுப்பது விதி என்று கடந்து போன சினிமாவில், அவர்களுக்கும் கௌரவம் உண்டு என படம் சொன்னது.

  அழகு பதுமையால் வரும் நாயகிகளுக்கு மத்தியில், தற்கொலைக்கு முயலும் நாயகனை தடுத்து, தைரியம் கொடுக்கும் அழகுடன் அறிவும் உடைய நாயகியை அடையாளம் காட்டியது பராசக்தி.

  பராசக்தி நாடகத்தின் உரிமையை நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள் வாங்கி ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து அதனை படமாக்கினார். பி.ஏ.பெருமாள் பெரியார் விசுவாசி. அவர்தான் சிவாஜியை முதன்மை கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்து, மேக்கப் டெஸ்டுக்காக அவரை விமானத்தில் சென்னை அனுப்பி வைத்தார். அதற்கு முன்பே சிவாஜி அஞ்சலி தேவி தயாரித்து நடித்த பூங்கோதை படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். பராசக்தி படம் 1950 இல் தொடங்கியது.

  படம் 2000 அடிகள் எடுக்கப்பட்ட பின் ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு படம் பிடிக்கவில்லை. முக்கியமாக சிவாஜி சம்பந்தப்பட்ட காட்சிகள். அவரை படத்திலிருந்து நீக்கவும் முயற்சிகள் நடந்தன.

  ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள மரம் வளர்ந்தது செட்டியார் விட்ட தண்ணீரால் அல்ல, என்னுடைய கண்ணீரால் என்று சிவாஜி ஒருமுறை கூறியதாக நடிகர் மோகன்ராம் கூறியிருந்தார். அந்தளவு அவமானங்களை சிவாஜி சந்தித்தார்.

  பல தடங்கல்களை கடந்து 1952 இல் பராசக்தி பூங்கோதையை முந்திக் கொண்டு வெளியாகி, நடிகர் திலகத்தை அறிமுகப்படுத்திய படம் என்ற பெருமையை தனதாக்கிக் கொண்டது.

  படத்தின் கதை, அதை தயாரித்த ஏவிஎம், இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு என யாருக்கும் நாத்திகமோ, பெரியாரோ பரிச்சயமில்லை. அந்த ஆன்மிக வட்டத்துக்குள் புகுந்து திராவிட கருத்தியலை ஓங்கி முன்வைக்க கருணாநிதியால் முடிந்தது ஆச்சரியம்.

  நாயகியை அசட்டு அழகியாக காட்டாமல் அறிவாளியாக சித்தரித்தது, அவளது அண்ணனை திககாரராக காட்டியது, ஏ பூசாரி, அம்பாள் என்றைக்கடா பேசினாள் என கேள்வி எழுப்பியது,  கோர்ட்டில் சிவாஜி அளிக்கும் சுயநலத்துக்கான விளக்கம், வீடில்லாமல் ரோட்டில் படுத்திருப்பவனின் அவஸ்தையை வெளிப்படுத்தியது, திருமணத்துக்கு எதுக்கு நல்ல நேரமும், சத்திரமும்? இரண்டு மாலையும், ஒரு சொற்பொழிவாளரும் போதும் என்று சுயமரியாதை திருமணத்தை வலியுறுத்தியது என்று திராவிட அரசியலை அழுத்தமாக திரையில் பேசியது பராசக்தி.

  படத்தின் டைட்டிலில் மூலகதை என்று பாலசுந்தரத்தின் பெயருக்கு அடுத்து திரைக்கதை, வசனம் என மு.கருணாநிதியின் பெயர்தான் வரும். இந்தப் படத்துக்குப் பின் கருணாநிதி நட்சத்திர வசனகர்த்தாவாக மாறினார்.

  படம் தமிழ்நாட்டில் வெளியான 62 திரையரங்குகளிலும் 50 தினங்கள் ஓடியது. படத்தின் கதை, வசனம் டீக்கடை முதல் திருமண பந்தல்வரை ஒலித்தது. தமிழ்நாட்டில் 42 வாரங்களும், இலங்கையில் 43 வாரங்களும் ஓடி, வெளிநாட்டில் வெள்ளி விழா கண்ட முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையையும் பெற்றது.

  ????????????????????????

  தமிழ் திரைவராலாற்றிலும், அரசியல் வரலாற்றிலும் மறக்க முடியாத படமாக பராசக்தி எப்போதும் இருக்கும்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood