TKS Natarajan: ’என்னடி முனியம்மா’ புகழ் டி.கே.எஸ் நடராஜன் காலமானார்

டி.கே.எஸ்.நடராஜன்

அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தில் இவருடைய என்னடி முனியம்மா பாடல் ரீமேக் செய்யப்பட்டபோது அதில் இவரையே நடிக்கவைத்து படக்குழு இவரை கவுரவித்தது .

  • Share this:
என்னடி முன்னியம்மா பாடலின் மூலம் புகழ்பெற்ற பிரபல தெம்மாங்கு பாடகரும் நடிகருமான டி.கே.எஸ் நடராஜன் இன்று காலமானார். நாடகத்துறை திரைத்துறை என இரண்டிலும் வெற்றி பெற்ற நடராஜன் குறித்த ஒரு தொகுப்பை இங்கே பதிவிடுகிறோம்.

வாங்க மாப்பிள்ளை வாங்க, படத்தில் இடம்பெற்ற 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி' பாடலை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. இன்று வரை பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த குரலுக்கு சொந்தக்காரர் டி.கே.எஸ் நடராஜன்.



நாடகத்துறையில் கொடிகட்டி பறந்த டிகேஎஸ் கலைக்குழுவில் தன்னுடைய 15 வயது முதல் நடித்து வந்ததால்
டி.கே.எஸ் நடராஜன் என்று அழைக்கப்பட்ட இவர், 1954-ம் ஆண்டு வெளியான ரத்த பாசம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து மீனவன், நாடோடி, ஆடு புலி ஆட்டம், உதயகீதம், காதல் பரிசு, வருஷம் 16 என 500க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ள இவர் 80-களில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகராக வலம் வந்துள்ளார். இதில் வருஷம் 16 படத்தில் இவர் ஏற்று நடித்த பாடகர் வேடம் அந்நாளில் பெரும் வரவேற்பை பெற்றது.



கவுண்டமணியின் நகைச்சுவைக் குழுவில் ஒரு முக்கிய நபராக பல படங்களில் டி.கே.எஸ் நடராஜன் நடித்துள்ளார். இதில் மண்ணுக்கேத்த பொண்ணு படத்தில் வரும் நகைச்சுவை காட்சி இன்றுவரை இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தி வருகிறது.



நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும் 'என்னடி முனியம்மா', அத்தப் பெத்த மல்லிகப்பூ என இவர் பாடிய ஏராளமான தெம்மாங்கு பாடல்கள்தான் இவரை ரசிகர்களுடன் நெருக்கமாக்கியது.

நாட்டுப்புற இசை ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த இவருடைய வெற்றி பாடல்கள் அடங்கிய கேசட்கள், 80-களில் விற்பனையில் அசத்தியதுடன் இன்றளவும் யு டியூபில் மில்லியன் கணக்கில் வியூஸ்களை குவித்து வருகின்றன.

அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தில் இவருடைய என்னடி முனியம்மா பாடல் ரீமேக் செய்யப்பட்டபோது அதில் இவரையே நடிக்கவைத்து படக்குழு இவரை கவுரவித்தது . இந்தப் பாடலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இன்றைய தலைமுறைக்கும் இவரை நினைவுபடுத்தியது.



நாடகத்துறை திரைத்துறை தெம்மாங்கு கச்சேரிகள் என 60 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் வெற்றிகரமாக பயணித்து வந்த டி.கே.எஸ் நடராஜன் உடல்நல குறைவால் தன்னுடைய 87-வது வயதில் உயிர் இழந்திருப்பது இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: