ரவுடி பேபி பாடல் மூலம் பிரபலமானவர் பின்னணி பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் மகளான இவர் பாடகர் அறிவுடன் இணைந்து என்ஜாய் எஞ்சாமி என்ற சுயாதீன பாடலை பாடியுள்ளார். சுயாதீன கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளம் தயாரித்திருக்கும் இந்தப் பாடலை அமித் கிருஷ்ணன் படமாக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இயற்கை வளம், கலாசார வேர்களை போற்றும் இந்தப் பாடல் யூடியூப் தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சுயாதீன பாடல் ஒன்று திரைப்பட பாடல்களை விட அதிக வரவேற்பைப் பெற்று வருவது அனைவரிடத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 7-ம் தேதி வெளியான இந்தப் பாடல் இதுவரை 25 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதோடு 1 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்துள்ளது.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்த சந்தோஷ் நாராயணன், “இந்தப் பாடல் அனைத்து சுயாதீன இசைக்கலைஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கானது. அதன் வெளிப்பாடுகள் பெரும்புகழ் அடைய வேண்டும். ஆதரவு மற்றும் அங்கீகாரம் பெறப்பட வேண்டிய குரல்களையும், கலைஞர்களையும் அடையாளம் காண்பதற்கான முயற்சியை நாங்கள் தொடர்வோம்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்தப் பாடல் வீடியோவைப் பார்த்த பிரபல இயக்குநர் செல்வராகவன், “என்ன ஒரு பாட்டு. இந்தப் பாடல் உருவாக்கம் மிகவும் பிடித்திருந்தது. பாடகர் அறிவு , தீ மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.