துல்கர் சல்மான் நடித்திருக்கும் சீதா ராமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கிறது. காதலை மையமாக வைத்த எடுக்கப்பட்ட இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிக்கா மந்தனா நடிப்பில் ஹனு ராகவப்புடி இயக்கியுள்ள படம் சீதா ராமம். இந்தப் படத்தின் கதை 1964-ம் ஆண்டு நடப்பது போல் எழுதப்பட்டுள்ளது.
உறவுக்கு யாரும் இல்லாத ராம் என்ற ராணுவ வீரரின் வாழ்க்கையே சீதா ராமம். விடுமுறைக்கு செல்ல வீடே இல்லாத ராணுவ வீரனின் ஒரு செயல், நாட்டில் பல உறவுகளை பெற்றுக்கொடுக்கிறது.
அதில் ராமின் மனைவி சீதா என்ற பெயரில், முகவரி இல்லாத கடிதம் வருகிறது. அந்த சீதாவை காதலிக்க தொடங்கும் ராம், அவளை தேடி புறப்படுகிறான். அவளை கண்டுபிடித்தானா? அவர்கள் சேர்ந்தார்களா? இறுதியில் என்ன ஆனது என்பதை அழகான திரைக்கதையில் படமாக்கியுள்ளார் இயக்குநர்.
கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட காஜல் அகர்வால்
இது காதல் படமாக இருந்தாலும், அப்போதைய இந்திய - பாகிஸ்தான் பிரச்னை, இந்தியாவிற்குள் ஊடுருவும் தீவிரவாத அமைப்பு என பல விஷயங்களை, படு சுவாரஸ்யமாக கதையாக்கியுள்ளனர். அதேசமயம் மிக கவனமாகவும் கையாண்டுள்ளார்கள்.
இந்தியாவுக்கு எதிரான கொள்கையில் இருக்கும் ராஷ்மிகா, பாகிஸ்தானில் இருந்து சீதாவை தேடி இந்தியா வருகிறார். முகவரியே இல்லாத சீதாவின் தேடல் பின்னடைவை சந்திக்க, ராமை தேடுகிறார். அங்கு தொடங்கும் சுவாரஸ்யம் விரிந்துக்கொண்டே செல்கிறது.
ராம் நண்பர்கள் கொடுக்கும் தகவல்கள் காட்சிகளாக வரும் போது, அவர்கள் இணைந்துவிடுவார்களா என படம் பார்ப்பவர்களையும் தோன்ற வைக்கிறது. அதிலும் சீதாவை கண்டு பிடித்த பின் அவர் பற்றிய தகவல்கள், எதிர்பாராத twist.
இந்திய வீரர்கள் தீவிரவாத அமைப்புக்கு உதவும் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினால் என்னவாகும் என்பதையும் படத்தில் காட்சிப்படுத்தியுள்ளர். அவர்களிடம் மாட்டிக்கொள்ளும் சூழலிலும் தீயில் சிக்கியிருக்கும் குழந்தையை காப்பாற்றும் ராம் மனநிலையின் மூலம் கதாபாத்திரத்தின் தன்மையும் அழகாக வெளிப்படுகிறது.
இந்தப் படத்தின் கதை காதலாக இருந்தாலும், அதை கையாண்ட விதம் அற்புதம். அதேபோல் PS.வினோத்தின் ஒளிப்பதிவு ஓவியமாக தெரிகிறது. இயக்குநர் - ஒளிப்பதிவாளர் வேலைக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் நிறைவான இசையை கொடுத்துள்ளார் விஷால் சந்திரசேகர். அவரின் பாடலும், பின்னணி இசையும் பார்ப்பவர்களை வசீகரிக்கிறது.
Kuruthi Aattam Review : கலவை விமர்சனங்களைப் பெறும் அதர்வாவின் குருதி ஆட்டம்…
அதேபோல் ராமாக துல்கர், சீதாவாக மிருணாள் தாக்கூர், அஃப்ரினாக ராஷ்மிகா மந்தனா ஆகியோர் சிறப்பான தேர்வு. இவர்களை தவிர அந்த கதாபாத்திரத்தை வேறு யாரும் சிறப்பாக செய்திருப்பார்களா என்பது கேள்வி குறி.
இந்தப் படம் சற்று நீளமாக செல்கிறதோ என்ற உணர்வை ஒரு இடத்தில் கொடுக்கலாம். ஆனால் அடுத்து என்னவாக இருக்கும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். அது படத்தின் வெற்றிக்கு உதவுகிறது. சீதா - ராம் ஆகியோர் பற்றிய கதை இறுதியடையும் போது திரையரங்க்கு முழுவதும் கைத்தட்டல் சத்தம் கேட்கிறது. அதையே படத்தின் வெற்றியாக கருதலாம்.
சீதா ராமம் படத்தின் முழு கதையும், சம்பவங்களையும் தெரிந்துகொண்டால் சுவாரஸ்யம் குறையலாம். எனவே, அதை தெரிந்துகொள்ளாமல் படத்தை பார்த்தால் நிச்சயம் மனநிறைவை கொடுக்கும் சீதா ராமம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.